இலங்கை கிரிக்கெட்

இலங்கை கிரிக்கெட்

இந்தியாவை பந்தாடி ஆசிய சம்பியனானது இலங்கை மகளிர் கிரிக்கெட் அணி!

2024 ஆம் ஆண்டு மகளிருக்கான ஆசியக் கிண்ணத்தை இலங்கை அணி முதல் முறையாக சுவீகரித்து சாதனை படைத்துள்ளது.

 

ரங்கிரி தம்புள்ளை கிரிக்கெட் மைதானத்தில் இடம்பெற்ற 9 ஆவது மகளிர் ஆசியக் கிண்ண இறுதிப்போட்டியில் இந்தியா மற்றும் இலங்கை மகளிர் அணிகள் மோதின.

 

இன்று பிற்பகல் 3 மணிக்கு ஆரம்பமான இப்போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிப்பெற்ற இந்திய மகளிர் அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.

அதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய மகளிர் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட்டுக்களை இழந்து 165 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

 

துடுப்பாட்டத்தில் இந்திய அணி சார்பில் Smriti Mandhana அதிகபட்சமாக 60 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.

 

பந்து வீச்சில் இலங்கை அணி சார்பில் Kavisha Dilhari 2 விக்கெட்டுக்களை வீழ்த்தினார்.

 

இதனையடுத்து, 166 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய இலங்கை மகளிர் அணி 18.4 ஓவர்கள் நிறைவில் 2 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து வெற்றி இலக்கை கடந்தது.

 

துடுப்பாட்டத்தில் இலங்கை அணி சார்பில் Harshitha Samarawickrama ஆட்டமிழக்காமல் 69 ஓட்டங்களை பெற்றதுடன், அணித்தலைவர் Chamari Athapaththu 61 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.

 

இந்தநிலையில் இந்திய மகளிர் அணியை 8 விக்கெட்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய இலங்கை மகளிர் அணி முதல் முறையாக ஆசியக் கிண்ணத்தைத் தன்வசப்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இலங்கை அணிக்கு மீண்டும் திரும்பும் வனிந்து ஹசரங்க !

2019 மற்றும் 2023 உலகக் கிண்ணப் போட்டிகள் இரண்டிலும் தோல்வியடைந்தமைக்காக மிகவும் வருந்துவதாக இலங்கை அணியின் சுழற்பந்து வீச்சாளர் வனிந்து ஹசரங்க தெரிவித்துள்ளார்.

 

அத்துடன், எல்லா நேரங்களிலும் நாட்டுக்காக தான் விளையாடியதாக ஊடகமொன்றுக்கு அளித்த செவ்வியில் அவர் கூறியுள்ளார்.

 

எல்பிஎல் போட்டிக்குப் பிறகு, தனது காயம் ஓரளவுக்கு குணமடைந்ததாகவும், ஆனால் பயிற்சி தொடங்கிய பிறகு மீண்டும் காயம் ஏற்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

 

சத்திரசிகிச்சையின் பின்னர் 12 வாரங்கள் ஓய்வெடுக்க வேண்டும் எனவும் தற்போது சத்திரசிகிச்சை முடிந்து 05 வாரங்கள் கடந்துள்ளதாகவும் வனிந்து ஹசரங்க தெரிவித்துள்ளார்.

 

எதிர்வரும் வாரத்தில் இருந்து மீண்டும் சிறிய அளவில் தனது பயிற்சியை ஆரம்பிக்கவுள்ளதாகவும் வனிந்து குறிப்பிட்டுள்ளார்.

 

12 வாரங்கள் நிறைவடைந்ததன் பின்னர் எதிர்வரும் ஜனவரி மாதம் நடைபெறவுள்ள இலங்கை-ஜிம்பாப்வே போட்டியில் விளையாட முடியும் என, வனிந்து ஹசரங்க நம்பிக்கை வெளியிட்டார்.

தனுஷ்க குணதிலக பாலியல் வன்கொடுமையில் ஈடுபடவில்லை – அவுஸ்ரேலிய சிட்னி டவுனிங் சென்டர் நீதிமன்றம் விடுதலையளித்து தீர்ப்பு!

பாலியல் வன்கொடுமை வழக்கில் இலங்கை அணியின் கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலக்க குற்றவாளி அல்ல என நீதிமன்றம் அறிவித்துள்ளது.

அனுமதியின்றி உடலுறவில் ஈடுபட்டதாக தெரிவித்து இலங்கை அணியின் கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலக்க மீது வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

 

32 வயதான அவர், டி20 உலகக் கிண்ண தொடருக்காக அவுஸ்ரேலியா சென்றிருந்தபோது, இடம்பெற்றதாக தெரிவிக்கப்படும் இந்த சம்பவம் தொடர்பாக கடந்த நவம்பர் மாதம் கைது செய்யப்பட்டார்.

 

இதனை தொடர்ந்து நீதிமன்ற விசாரணைகள் இடம்பெற்றுவந்த நிலையில் பொலிஸாரிடம் அவர் வாக்குமூலம் வழங்கும் காணொளி கடந்த வாரம் நீதிமன்றில் காட்டப்பட்டது.

 

இதனை தொடர்ந்து அவரது நேர்காணலில் உண்மை வெளிப்படுவதாக தெரிவித்துள்ள நீதிபதி, சம்பந்தப்பட்ட பெண் எழுப்பிய அனைத்து குற்றச்சாட்டுகளையும் மறுத்ததோடு தனுஷ்க குணதிலகாவை குற்றமற்றவர் என்று அறிவித்தார்.

இதேவேளை சிட்னி டவுனிங் சென்டர் மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் இருந்து வெளியே வந்த தனுஷ்க குணதிலக ஊடகங்களுக்கு இவ்வாறு கருத்து தெரிவித்திருந்தார்.

 

“நான் அதிகம் சொல்ல வேண்டியதில்லை. நீதிபதியின் தீர்ப்பில் எல்லாம் சொல்லப்பட்டிருக்கிறது என்று நினைக்கிறேன். இந்த இக்கட்டான நேரத்தில் எனக்கு உறுதுணையாக இருந்த அனைவருக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். கடந்த 11 மாதங்கள் எனக்கு மிகவும் கடினமாக இருந்தது. குறிப்பாக. இன்று எனது சட்டத்தரணி முருகன் தங்கராஜ் இங்கு இல்லாவிட்டாலும் அவருக்கும் மற்ற வழக்கறிஞர்களுக்கும் மிக்க நன்றி. எனது மேலாளர் எலீன் மற்றும் எனது பெற்றோர்கள் மற்றும் இலங்கையில் உள்ள சிலர் அனைவரும் என்னை நம்பினார்கள். அது எனக்கு நிறைய தைரியத்தை கொடுத்தது. அதனால் இறுதியில் நீதிபதி சரியான முடிவை எடுத்தார். நான் சொன்னது போல் அந்த முடிவு எல்லாவற்றையும் சொல்கிறது. “எனது வாழ்க்கை இயல்பு நிலைக்கு திரும்பியதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். மீண்டும் கிரிக்கெட் விளையாடும் வரை என்னால் காத்திருக்க முடியாது.”

இதேவேளை தனுஷ்க குணதிலகவிற்கு விதிக்கப்பட்டுள்ள தற்காலிக கிரிக்கெட் தடையை நீக்குவது குறித்து இலங்கை கிரிக்கெட் சபை இன்று பரிசீலிக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

“பாதிக்கப்பட்ட பெண்ணுடன் ஆன்மீக உரையாடலில் ஈடுபட்டேன்.” – பாலியல் வன்முறையில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்ட இலங்கை கிரிக்கெட் வீரர் குணதிலக !

தனுஸ்க குணதிலக மீது பாலியல் வன்முறை குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ள பெண் அவருடன் உறவில் இருந்தவேளை அவரின் போன ஜென்மங்கள் குறித்து தனக்கு தெரியும் என தெரிவித்ததால் தான் அச்சமடைந்ததாக தனுஸ்ககுணதிலக தெரிவித்துள்ளார்.

புதன்கிழமை அவுஸ்திரேலிய நீதிமன்றத்தில் வெளியிடப்பட்ட பதிவு செய்யப்பட்ட வீடியோவில் தனுஸ்க தெரிவித்துள்ள விடயங்கள் இடம்பெற்றுள்ளன.

குறிப்பிட்ட பெண்ணை அவரது வீட்டில் முத்தமிட்டது அவருடன் பாலியல் உறவு கொண்டது போன்ற விடயங்களை தனுஸ்க ஏற்றுக்கொண்டுள்ளார்.

அதன் பின்னர் அந்த பெண்ணுடன் இடம்பெற்ற ஆன்மீக உரையாடல் குறித்து தனுஸ்க தெரிவித்துள்ளார், இந்த உரையாடலின் போது எனது முன்னைய ஜென்மங்கள் குறித்து தனக்கு தெரியும் என அந்த பெண் தெரிவித்தார் என தனுஸ்க குறிப்பிட்டுள்ளார்.

அந்த உரையாடல் சுவராஸ்யமாக இருந்தது என நான் நினைத்தேன் அந்த பெண்ணிற்கு இலங்கை கலாச்சாரம் பௌத்தம் குறித்து நன்கு தெரிந்திருக்கின்றது என நினைத்தேன் என தெரிவிக்கும் தனுஸ்க குணதிலக பின்னர் அழுவதையும் தனது முகத்தை துடைப்பதையும் காணமுடிகின்றது.

நான் சிரித்துக்கொண்டே நான் முன்னைய ஜென்மத்தில் நான் யார் என தெரிவிக்க முடியுமா என கேட்டேன் நானும் அவரின் அயலவர்களும் தாய்லாந்தில் பிறந்தோம் என அந்த பெண் தெரிவித்தார் என தனுஸ்க குறிப்பிட்டுள்ளார்.

தன்னால் எனது போன ஜென்மத்தைபார்க்க முடிவதாக அவர் குறிப்பிட்டார் நான் அச்சமடைந்தேன் எனவும் தனுஸ்க தெரிவித்துள்ளார்.

ஏன் என தெரியவில்லை எனக்கு அந்த உணர்வு ஏற்பட்டது அந்த பெண் சற்றுவித்தியசாமானவராக காணப்படுகின்றார் என நினைத்தேன் அந்த பெண் எனக்கு டக்சியை ஏற்பாடு செய்து தந்தார் நான் ஆடையணிந்துகொண்டு முத்தமிட்டு அங்கிருந்து புறப்பட்டேன் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

எனினும் குற்றஞ்சாட்டிய  பெண் முன்னைய ஜென்மங்கள் குறித்த பேச்சுக்களை தான் முதலில் ஆரம்பிக்கவில்லை என தெரிவித்துள்ளார்.

 

அவுஸ்ரேலிய பெண் மீது பாலியல் வன்கொடுமை – உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டிக்கு சென்ற இலங்கை கிரிக்கெட் வீரர் தனுஷ்க கைது !

அவுஸ்திரேலியாவின் சிட்னியில் தனுஷ்க குணதிலக்க கைது செய்யப்பட்டமை தொடர்பில் இலங்கை கிரிக்கெட் நிறுவனம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

பெண் ஒருவரை பாலியல் வன்கொடுமை செய்த குற்றச்சாட்டின் பேரில் குணதிலக்க கைது செய்யப்பட்டுள்ளதாக சர்வதேச கிரிக்கட் பேரவை இலங்கை கிரிக்கெட் நிறுவனத்திற்கு அறிவித்துள்ளதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அவர் நாளை (07) நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உள்ளதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், அந்த குற்றச்சாட்டில் அவர் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டால், அவர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனிடையே, 29 வயதுடைய பெண் அளித்த முறைப்பாட்டின் பேரில், 31 வயதுடைய ஆண் ஒருவர் கைது செய்யப்பட்டதாக நியூ சவுத் வேல்ஸ் பொலிஸ் வௌியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சந்தேக நபர் டேட்டிங் செயலி மூலம் குறித்த பெண்ணிடம் தொடர்பினை ஏற்படுத்திக் கொண்டுள்ளதாக அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.