இரா.சாணக்கியன்

இரா.சாணக்கியன்

இசைப்பிரியாவிற்காக சாணக்கியன் நியாயம் கேட்க வளர்த்த காடா மார்பில் பாயுது என்று திடுக்கிட்ட நாமல் !

இசைப்பிரியாவிற்காக சாணக்கியன் நியாயம் கேட்க வளர்த்த காடா மார்பில் பாயுது என்று திடுக்கிட்ட நாமல் !

இசைப்பிரியா ஒரு பெண் இல்லையா..? பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு கொல்லப்பட்ட இசைப்பிரியாவிற்கு இந்த நாட்டில் நீதி தேவையில்லையா? என்று இலங்கைத் தமிழரசுக் கட்சியினர் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் நாடாளுமன்றத்தில் கேள்வியெழுப்பியுள்ளார்.

அனுராதபுரத்திலே பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட பெண்ணுக்கு நீதி வேண்டும் என்பதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை. ஆனால் ஏன் இந்த அரசாங்கமும் சரி, நாட்டு மக்களும் சரி எத்தனையோ தமிழ் பெண்கள் பாதுகாப்பு படையினரால் பாலியல் வன்னொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு இருக்கின்றார்கள். இவர்களுக்கு எதிராக எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதற்கு எதிராக ஏன் இந்த அரசாங்கம் கொந்தளிக்கவில்லை என பாராளுமன்றத்தில் கொந்தளித்த சாணக்கியன் இசைப்பிரியாவின் படுகொலைக்கும் நீதி கேட்டார்.

பட்டலந்த அறிக்கையை உணர்வுபூர்வமாக பார்க்கும் தற்போதைய அரசாங்கம், இலங்கை இராணுவத்தால் கொல்லப்பட்ட தமிழர்கள் தொடர்பான அறிக்கையை ஏன் உணர்வுபூர்வமாக பார்க்கவில்லை எனக் கேள்விப் எழுப்பினார்.

போர்க்குற்றங்கள் தொடர்பான வெளிவிகார அமைச்சரின் உள்ளக பொறிமுறை விசாரணையை வெட்கக் கேடானது எனவும் சாணக்கியன் குறிப்பிட்டார். என்பிபி அரசாங்கத்தை எதிர்க்கட்சியாக இருந்து கேள்வி கேட்கும் இரா. சாணக்கியன் நல்லாட்சி அரசாங்கத்தில் பங்காளிகளாக இருந்த போது ஏன் இதே கேள்விகளை கேட்கவில்லை என சாணக்கியனின் அரசியல் எதிரிகள் கேட்கின்றனர். மேலும் சாணக்கியனின் ஆசானான சுமந்திரன் போர்க் குற்றத்தை உள்ளகப் பொறிமுறையூடாக விசாரிக்க பச்சைக் கொடி காட்டியதாலே தான் அவர் தமிழ்மக்களின் வெறுப்புக்குமுள்ளானார்.

எல்லாவற்றுக்கும் மேலாக சிறிலங்கா சுதந்திர கட்சியின் பட்டிருப்புத் தொகுதி அமைப்பாளராக இருந்த சாணக்கியன், இராஜபக்சவின் முகவரியிலேயே அரசியலுக்கு வந்தவர். இசைப்பிரியா பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டது இராஜபக்ச ஆட்சியிலேயே நடந்தது. அப்போதெல்லாம் வாயைப் பொத்திக்கொண்டு இருந்த சாணக்கியனின் இசைப்பிரியா மீதான திடீர் பாசம் உள்ளூராட்சித் தேர்தலில் தமிழரசுக்கட்சியின் வாக்கு வங்கியைக் காப்பாற்றவேயாகும் என அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.

என்னடா வளர்த்த கடா மார்பில் பாயுது என திடுக்கிட்ட நாமல் ராஜபக்ச பாராளுமன்றத்தில் சாணக்கியனை செல்லமாக கண்டித்தார். யுத்தம் முடிந்து நீண்டகாலம் ஆகிவிட்டது. ஆறின புண்ணை பூதக் கண்ணாடி வைத்து பார்க்கக் கூடாது. இப்படியே போனால் இனக்குரோதம் வளரும். ஒரு அரசாக நாங்கள் எல்லாம் ஒன்றாக நிற்போம். மறப்போம் மன்னிப்போம் என்றார் நாமல் ராஜபக்ச.

 

அனுர அலை அடித்துக் கொண்டே இருக்கிறது – எச்சரிக்கிறார் சுமந்திரன் 

அனுர அலை அடித்துக் கொண்டே இருக்கிறது – எச்சரிக்கிறார் சுமந்திரன்

 

அனுர அலை இன்னும் குறையவில்லை. அதனை குறைத்து மதிப்பிட முடியாது. அத்துடன் எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் கொழும்பு மாவட்டத்தில் போட்டியிடுவதில்லை என தமிழரசுக் கட்சியின் மத்திய குழு தீர்மானித்துள்ளதாக கட்சியின் ஊடகப் பேச்சாளரும், பதில் பொதுச் செயலாளருமான சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் மத்திய செயற்குழுக் கூட்டத்தில் தெரிவித்துள்ளார்.

அங்கு எம்.ஏ.சுமந்திரன் மேலும் தெரிவிக்கையில், வடக்கு – கிழக்கு மாவட்டங்களின் அனைத்து உள்ளூராட்சி மன்றங்களிலும் இலங்கை தமிழரசுக் கட்சி தனித்து போட்டியிடும். இம்முறை நாடு அனுர அலையில் உள்ளது. பாராளுமன்றத் தேர்தலில் தேசிய மக்கள் சக்தி தனிப் பெரும்பான்மையை பெற்றுள்ளது. திருகோணமலையில், மட்டக்களப்பில் நாம் பெரும்பான்மை பெற முடியாது. வடக்கில் நாம் தான் பெரும்பான்மை. எனினும் மக்கள அநுர அலையில் சிக்கி ஜனாதிபதி தேர்தலைக் காட்டிலும் பாராளுன்ற தேர்தலில் அதிக வாக்குளை வழங்கியிருந்தார்கள். ஜனாதிபதித் தேர்தலில் நாம் ஆதரவு வழங்கிய ஐக்கிய மக்கள் சக்தியின் சஜித் பிரேமதாச அவர்களே வடக்கு – கிழக்கில் பெரும்பான்மை பெற்றார்.

ஆனால் பாராளுமன்ற தேர்தலில் இந்த நிலை மாறியது. தற்போது அநுர அலை குறைந்து விட்டது என்கிறார்கள் சிலர். அப்படி கூற முடியாது. அநுர அலை தற்போதும் இருக்கிறது. அது குறைவடைய சில காலம் செல்லலாம். நாம் கவனமாக தேர்தலை கவனமாக அணுக வேண்டும் . நாமும் அநுர அலையோடு அள்ளுண்டு போக கூடாது. “ நாடு அநுரவோடு இருக்கட்டும். நமது ஊர் நம்மோடு. நாம் வீட்டோடு என செயற்பட வேண்டும்.” என்றார்.

பாராளுமன்றச் செயற்பாடுகளில் பா உ சாணக்கியன், பா உ அர்ச்சுனா முன்னணியில் பா உ சிறிதரன் பின்நிலையில் !

பாராளுமன்றச் செயற்பாடுகளில் பா உ சாணக்கியன், பா உ அர்ச்சுனா முன்னணியில் பா உ சிறிதரன் பின்நிலையில் !

பாராளுமன்றச் செயற்பாடுகளில், பாராளுமன்ற விவாதங்களில் ஈடுபடுவதில் வடக்கு கிழக்கில் உள்ள தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களில் இராசமாணிக்கம் சாணக்கியன் முன்னணியில் நிற்கின்றார். இலங்கைத் தமிழரசுக் கட்சி பா உ இரா சாணக்கியன் பாராளுமன்ற செயற்பாட்டில் 27வது இடத்தில் உள்ளார். ஒன்று முதல் 225 வரையான தரவரிசைப்படுத்தலில் தமிழ் தரப்பில் சாணக்கியனே முன்னணியில் உள்ளார். அவரைத் தொடர்ந்து அகில இலங்கைத் தமிழ் காங்கிரஸ் பொன்னம்பலம் கஜேந்திர குமார் 41 வது இடத்தில் உள்ளார். பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திரா 42வது இடத்தில் உள்ளார். பாராளுமன்றச் செயற்பாடுகளில் விவாதங்களில் பா உ எவ்வாறு வினைத்திறனுடன் செயற்படுகின்றனர் என்பதைப் பொறுத்து மந்திர டொட் எல்கே என்ற அமைப்பு இத்தரவரிசையை மேற்கொண்டுள்ளது.

சமூக வலைத் தளங்களில் முன்னிலை வகிக்கும், தமிழ் அரசியலை கலகலப்பாக வைத்திருக்கும் பா உ இராமநாதன் அர்ச்சுனா பாராளுமன்றச் செயற்பாடுகளில் 44வது இடத்தை தக்கவைத்துள்ளார். அவரைத் தொடர்ந்து 48வது இடத்தில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மட்டு பா உ ஞானமுத்து சிறிநேசன் உள்ளார். அவரையடுத்து வன்னிப் தேசிய மக்கள் சக்தி பா உ ஆறுமுகம் ஜெகதீஸ்வரன் 54வது இடத்திலும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் அம்பாறை மாவட்ட பா உ கவீந்திரன் கோடீஸ்வரன் 55வது இடத்தில் உள்ளார். இலங்கைத் தமிழரசுக்கட்சி வன்னி பாராளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் 63வது இடத்தில் உள்ளார்.

தேசிய மக்கள் சக்தியின் யாழ் மாவட்ட பா உ கருணானந்தன் இளங்குமரன் பாராளுமன்றச் செயற்பாடுகளில் 79வது இடத்தில் உள்ளார். ஜனநாயகத் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வன்னி பா உ செல்வம் அடைக்கலநாதன் 89வது இடத்தில் உள்ளார். இலங்கைத் தமிழரசுக் கட்சி யாழ் மாவட்ட பா உ சிவஞானம் சிறிதரன் தமிழ் ஊடகங்களால் பேசப்படும் அளவுக்கு பாராளுமன்ற செயற்பாடுகளில் தீவிரமாக இல்லை. 113 இடத்திலேயே உள்ளார். 2010 முதல் பாராளுமன்றம் செல்லும் அனுபவமிக்க பா உ பாராளுமன்ற செயற்பாடுகளில் பலவீனமானவராகவே உள்ளார்.

ஆளும் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் பொதுவாக பாராளுமன்றச் செயற்பாடுகளில் முன்னிலைக்கு வருவது சற்று கடனமானதே. அவர்களுடைய அரசாங்கமே ஆட்சியில் இருப்பதால் ஆளும்கட்சிப் பாராளுமன்ற உறுப்பினர்கள் விவாதங்களில் தங்களுடைய கருத்துக்களை வைப்பதில் தயக்கம்கொள்வார்கள். மேலும் தேசிய மக்கள் சக்தியின் பெரும்பாலான பாராளுமன்ற உறுப்பினர்கள் புதியவர்களாகையால் தயக்கமும் மேலோங்கி இருக்கும். மேலும் அமைச்சர்களே ஆளும்கட்சியின் பெரும்பாலான நேரத்தை எடுத்தக்கொள்வதால் சாதாரண ஆளும் கட்சி உறுப்பினர்களுக்கு கருத்துக்களை முன்வைக்க வாய்ப்புகள் குறைவாகவே காணப்படும். எதிர்காலத்தில் அவர்கள் இதனைப் புரிந்து செயல்படுவதற்கான வாய்ப்புகள் அமையும்.

இத்தர வரிசையானது வெறுமனே பாராளுமன்றத்தில் உரத்துக் குரல் எழுப்புவது அல்ல. சட்டவாக்கங்களில், கொள்கை வகுப்புகளில் தங்களுடைய பங்களிப்பை வழங்கி சட்டங்களையும் சீர்திருத்தங்களையும் கொள்கைகளையும் செழுமைப்படுத்துவது.

கடல்தொழில் அமைச்சர் இராமரிங்கம் சந்திரசேகர் பாராளுமன்ற செயற்பாட்டுத் தரவரிசையில் 122வது இடத்தைப் பிடித்துள்ளார். ஊடகங்களில் நன்கு அறியப்பட்ட நீண்ட பாராளுமன்ற அனுபவமுடைய ஐக்கிய மக்கள் சக்தி பா உ மனோ கணேசன் பாராளுமன்ற செயற்பாடுகளில் மந்தநிலையில் 148வது இடத்தில் உள்ளார்.

தேசிய மக்கள் சக்தியின் வன்னி பாராளுமன்ற உறுப்பினர் செல்லத்தம்பி திலகநாதன், மற்றும் தேசிய மக்கள் சக்தியின் யாழ் மாவட்ட பா உ ரஜீவன் ஜெயச்சந்திரமூர்த்தி ஆகியோர் 225வது இடத்தில் உள்ளனர். 75 பாராளுமன்ற உறுப்பினர்களை மந்தநிலை உறுப்பினர்களாக மந்திரி.எல்கே என்ற அமைப்பு தரவரிசைப்படுத்தியுள்ளது.

பட்ஜெட்டில் கிழக்கு புறக்கணிப்பு – உள்ளூராட்சித் தேர்தலில் பாடம் புகட்டுவோம் ! சாணக்கியன்

பட்ஜெட்டில் கிழக்கு புறக்கணிப்பு – உள்ளூராட்சித் தேர்தலில் பாடம் புகட்டுவோம் ! சாணக்கியன்

வரவு, செலவுத் திட்டத்தில் கிழக்கு மாகாணம் முழுமையாக புறக்கணிக்கப்பட்டுள்ளது என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் குற்றஞ்சாடியுள்ளார். பாராளுமன்ற வரவு செலவுத் திட்டத்தின் மீதான 5 ஆம் நாள் விவாதத்தில் நேற்று உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். மாறாக வடக்கிற்கு வழமைக்கு மாறாக கூடுதல் நிதி ஒதுக்கப்பட்டது தொடர்பில் தேசிய மக்கள் சக்தி அரசுக்கு ஆதரவு பெருகியுள்ளது. மக்கள் தங்கள் வாழ்த்துக்களைத் தெரிவித்த்து வருகின்றனர்.

சாணக்கியன் தொடர்ந்தும் உரையாற்றுகையில், “வடக்கு மாகாண அபிவிருத்திக்கு பெருமளவிலான நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகிறது. முல்லைத்தீவு வட்டுவாகல் பாலத்தை நிர்மாணிப்பதற்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளமை வரவேற்கத்தக்கது. தேசிய மக்கள் சக்திக்கு வடக்கு மாகாண மக்கள் பெருமளவில் வாக்களித்தார்கள். ஆனால் மொத்த வரவு செலவுத் திட்டத்தில் 6 சதவீதமான அளவு தான் வடக்கு மாகாணத்துக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. குறைந்தளவான நிதியை ஒதுக்கி வடக்கு மாகாண மக்களை ஏமாற்றலாம் என்று தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் நினைக்க கூடாது.

வடக்கு மக்கள் பல பிரச்சினைகளை எதிர்கொண்டுள்ளார்கள். காணாமல் போனோரின் உறவுகள் 2,900 நாட்களை கடந்து போராட்டத்தில் ஈடுபடுகிறார்கள். தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் இந்த விடயத்துக்கு ஒரு முன்மொழிவை கூட இதுவரையில் முன்வைக்கவில்லை. இந்த நாட்டில் அரசியல் கைதிகள் என்று எவரும் இல்லையென நீதியமைச்சர் குறிப்பிடுகிறார். பட்டியலை தருமாறு என்னிடம் கேட்கிறார். இந்த நாட்டில் நான் நீதியமைச்சரா அல்லது அவர் நீதியமைச்சரா, வடக்கில் கொல்லப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்கும் பொறிமுறை வகுக்கப்படவில்லை.

அபிவிருத்திகளை செய்து இந்த பிரச்சினைகளுக்கு தீர்வு காணலாம் என்று கருத வேண்டாம். புதிய அரசியலமைப்பு உருவாக்கம் குறித்து தேசிய மக்கள் சக்தி வழங்கிய வாக்குறுதி மீது நம்பிக்கை கொண்டே வடக்கு மற்றும் கிழக்கு மக்கள் இந்த அரசாங்கத்துக்கு ஆதரவு வழங்கினார்கள். புதிய அரசியலமைப்பு உருவாக்கத்தை அரசாங்கம் கிடப்பில் போட்டுள்ளது. தேசிய மக்கள் சக்திக்கு ஆதரவளித்தது தவறு என்பதை வடக்கு மற்றும் கிழக்கு மக்கள் உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் வெளிப்படுத்துவார்கள்” என்றார் சாணக்கியன்

குளத்தின் நடுவே ஒன்றல்ல இரு தடவைகள் மைதானம் கட்ட நிதி ஒதுக்கிய சாணக்கியன் – மோசடி !

குளத்தின் நடுவே ஒன்றல்ல இரு தடவைகள் மைதானம் கட்ட நிதி ஒதுக்கிய சாணக்கியன் – மோசடி !

மட்டக்களப்பு மாவட்டத்திற்காக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவால் பாராளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியனுக்கு ஒதுக்கப்பட்ட 400 மில்லியன் ரூபாவில் இல்லாத விளையாட்டு மைதானம் ஒன்றிற்கு 50 இலட்சம் ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் பட்டிருப்பு தொகுதி அமைப்பாளர் கிருஸ்ணபிள்ளை வதனகுமார் குற்றம்சாட்டியுள்ளார்.

குளத்தின் நடுவே உள்ள மைதானத்துக்கு இரண்டு தடவைகள் நிதி ஒதுக்கப்பட்டு பாரிய மோசடி இடம்பெற்றுள்ளமை தொடர்பாக குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இது குறித்து மேலும் கருத்து தெரிவித்த கிருஸ்ணபிள்ளை வதனகுமார், முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியனுக்கு ஒதுக்கப்பட்ட 400 மில்லியன் ரூபாவில் பல மோசடிகள் இடம்பெற்றுள்ளதுடன், அதன் அடிப்படையில் களுவாஞ்சிக்குடி எருவில் கிழக்கில் மைதானம் ஒன்றிற்கு 50 இலட்சம் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளமை தொடர்பில் தகவல் அறியும் சட்டம் ஊடாக தகவலை பெற்றோம், இருந்த போதும் அவ்வாறு இல்லாத மைதானத்துக்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளதை கண்டறிந்தோம்.

அந்த நிதி அவர்களது ஆதரவாளர்கள் மூலம் பிரச்சார வேலைகளுக்கு பயன்படுத்தப்பட்டுள்ளதுடன், மக்களுடைய வரிப்பணம் மிக மோசமாக பயன்படுத்தப்பட்டுள்ளது

இவ்வாறானவர்களை மக்கள் தெரிவு செய்வதால் எமது பிரதேசத்தில் இன்றும் மக்கள் ஏழைகளாகவும் அடிமைகளாகவும் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். இந்த மோசடி தொடர்பாக குற்றப்புலனாய்வு பிரிவுக்கு முறைப்பாடு செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றோம் என்றார்

சாணக்கியன் – செல்வம் கிளீன் சிறிலங்கா விசாரணைக்குள் வருகிறார்களா ?

சாணக்கியன் – செல்வம் கிளீன் சிறிலங்கா விசாரணைக்குள் வருகிறார்களா ?

கடந்த ஆண்டு யூலை 25 அபிவிருத்திக்காக இராசமாணிக்கம் சாணக்கியனுக்கு கிடைத்த 400 மில்லியன் நிதியை அவர் திறம்பட செலவழியாமல் மோசடி செய்ததாக குற்றம் சாட்டுகிறார் ஈழ மக்கள் ஜனநாயக முன்னணி கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் அன்ரனிசில் ராஜ்குமார்.

அதேசமயம் வன்னிப் பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதனும் விசாரணைக்காக அழைக்கப்பட்டிருப்பதாக செய்திகள் வந்துள்ளது.

அநுரவின் கிளீன் சிறிலங்கா திட்டத்தின் மூலம் சாணக்கியனின் ஊழலை விசாரிக்கும் படி நேற்றைய செய்தியாளர் மாநாட்டில் அறை கூவல் விடுத்தார். சாணக்கியனின் அநுசரணையில், கல்லாத்தில் ஒரு கூட்டுறவுச் சங்க கட்டடம் உருவாக்கப்பட்டுள்ளது. அதற்கு 50 இலட்சம் ரூபாய்களே செலவிடப்பட்டதாக தகவல் அறியும் சட்டத்தின் மூலம் தெரியவந்துள்ளது என கூறும் அன்ரனிசில். பூரணமாக கட்டி முடிக்கப்படாத கட்டத்திற்கு 50 இலட்சம் செலவானதாக கணக்கு காட்டப்பட்டுள்ளது என்கிறார். பூரணமாகாத கட்டத்தின் படங்களையும் செய்தியாளர் மாநாட்டில் காட்டினார் அன்ரனிசில். அவர் மேலும் தான் தகவல் அறியும் சட்டத்தின் மூலம் பெற்றுக்கொண்ட ஆவணங்களின் அடிப்படையில் புள்ளிவிபரங்களை குறிப்பிட்டு மட்டக்களப்பு மாவட்டம் புறக்கணிக்கப்பட்டதாகவும் குற்றம் சாட்டினார்.

மேலும் விநோதமான ஒரு கோரிக்கையை அனைத்து மத குருமார்களிடம் முன்வைத்தார். அதாவது மக்களை கசக்கி பிழிந்து பெறப்பட்ட வரிப்பணத்தையே நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமது பன்முகப்படுத்தப்பட்ட நிதி மூலம் மத ஸ்தாபனங்களுக்கு ஒதுக்குகிறார்கள். எனவே அந்த கொடைகளை பாராளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் தந்தார் என ஒலிபெருக்கியில் பிரச்சாரம் செய்வது ஏனைய கட்சி உறுப்பினர்கள் பாதிக்கப்படுவதாகவும் குறிப்பிட்டார். ஏனவே சாணக்கியனுக்கு இலவச விளம்பரம் செய்ய வேண்டாம் என மறைமுகமாக கேட்டுக் கொண்டார்.

 

அரசாங்கத்தை மாற்றி அமைக்க வேண்டும், என்ற சிந்தனையில் நாங்கள் இல்லை.  – இரா.சாணக்கியன்

அரசாங்கத்தை மாற்றி அமைக்க வேண்டும், என்ற சிந்தனையில் நாங்கள் இல்லை.  – இரா.சாணக்கியன்

நாங்கள் அரசாங்கத்துடன் போய் சண்டை பிடித்து, அரசாங்கத்தை விமர்சனம் செய்து, அரசாங்கத்தை மாற்றி அமைக்க வேண்டும், என்ற சிந்தனையில் நாங்கள் இல்லை.  மூன்றில் இரண்டு பெரும்பான்மை உடன் இருக்கின்ற அரசாங்கத்தில் அரசியல் தீர்வு விடயத்தை அடையக்கூடிய வாய்ப்பு இருக்கின்ற காரணத்தினால் அதனை நாங்கள் சாதகமாகத்தான் பயன்படுத்த வேண்டும் என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் வரையறுக்கப்பட்ட குருமண்வெளி சிக்கன சேமிப்பு கடனுதவு கூட்டுறவுச் சங்கத்தின் 37வது ஆண்டு நிறைவு விழாவும் சாதனையாளர் பாராட்டு விழாவில் கருத்துரையாற்றும் போது தெரிவித்துள்ளார்.

இதன்போது சாணக்கியன்  மேலும் தெரிவிக்கையில், நாட்டிலே அரிசி தட்டுப்பாடு வந்தபோது அமைச்சர் தெரிவித்தார், சதோச விற்பனை நிலையங்கள் ஊடாக 210 ரூபாவுக்கு அரசியும், 130 ரூபாவுக்கு தேங்காயும் கொள்வனவு செய்யலாம் என தெரிவித்தார். மக்கள் அதனை கொள்வனவும் செய்யலாம். ஆனால் எமது பிரதேசத்தில் ஒரு சதொச விற்பனை நிலையம் கூட இல்லை.  எமது மக்கள் முகம் கொடுக்கும் பிரச்சினைகளைப் பற்றியும் நாங்கள் பேசாமல் இருக்க முடியாது. தற்போது அரிசி பாரிய தொடர்பில் பிரச்சினைகள் எழுந்துள்ளது. அது  விவசாயிகள் மத்தியில் பெரிய பிரச்சனையாக வந்துள்ளது. அரசாங்கம் அரிசி இறக்குமதி செய்கின்றது. எமது பிரதேசத்தில் பல விவசாயிகள் இருக்கிறார்கள், மட்டக்களப்பு மாவட்டத்தில் 2 லட்சத்துக்கு மேற்பட்ட ஹெக்டேயர்களில் வேளாண்மை செய்திருக்கின்றார்கள்.  தற்போது அரசாங்கம் அரிசியை இறக்குமதி செய்வதன் ஊடாக ஒரு மாதத்திற்கு முன்னர் வழங்குவதற்கான கோரிக்கை செய்யப்பட்ட அரிசி இலங்கைக்கு நேற்றைய தினம்தான் வந்து இறக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஆனால் எமது பகுதி ஜனவரி பெப்ரவரி மாதத்தில் தான் நெல் அறுவடை செய்கின்ற காலம்.

இறக்குமதி செய்யப்படுகின்ற அரிசி தற்போது சந்தைக்கு வருமாறு இருந்தால் ஜனவரி 15ஆம் தேதி வரைக்கும் அனைத்து விற்பனை நிலையங்களுக்கும் அந்த அரிசி போய் சேரும். அந்த வேளையில் அரிசியின் விலை குறையும். அந்த சந்தர்ப்பத்தில் எமது விவசாயிகள் அறுவடை செய்யும் நெல்லின் விலை குறைவடையும். நெல்லின் விலை குறைவடையும் பகுதி பட்சத்தில் எமது விவசாயிகள் பாரிய நஷ்டத்தினை எதிர்கொள்வார்கள். வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நஷ்ட ஈடு வழங்குவோம் என சொன்னார்கள். ஒரு ஹெக்டருக்கு ஒரு லட்சம் என்றார்கள். அந்த இழப்பீட்டுத் தொகையும் விவசாயிகள் பயிர் மீண்டும் பயிர் செய்து மூன்றாவது உரம் இடும் காலப்பகுதியில் தான் அந்த தொகை வழங்கப்படும் இச்சூழ்நிலையில்தான் தற்போது அரசாங்கத்தின் நிலைமை சென்று கொண்டிருக்கிறது.  ஆனால் இந்த கூட்டுறவு சங்கங்களை இன்னும் மென்மேலும் பலப்படுத்தினால் அரிசி பிரச்சனைகள் போன்ற விடயங்கள் எழும்போது எதிர்காலத்தில் மக்களுக்கு சிறந்த செயற்பாடுகளை முன்னெடுக்க முடியும் என மேலும் பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் இதன்போது தெரிவித்தார்.

அரசு Bar Permit களை உடன் இரத்து செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் – இரா.சாணக்கியன்

அரசு Bar Permit களை உடன் இரத்து செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என பாராளுமன்றத்தில் நேற்று (04) இரா.சாணக்கியன் கேள்வி எழுப்பி இருந்தார்.

தொடர்ந்தும் பாராளுமன்றத்தில் உரையாற்றிய அவர் தெரிவித்ததாவது,

Bar Permit பெற்றுக் கொண்டமை தொடர்பான தகவல்களை வழங்குமாறு நான் எழுப்பிய கேள்விக்கு அமைய Chief Government Whips அவர்கள் கடந்த 03 ஆம் திகதி மாலை அந்த தகவல்களை வெளியிடுவதாக கூறியிருந்தார். அதற்கமைவாக ஆளும் கட்சியினுடைய சபைக்குரிய தலைவர் ரத்னாயக்க அவர்கள் மாலை வேளையில் அப் பட்டியலினை வெளியிட்டிருந்தார்.

அந்தப் பட்டியலில் Bar Permit பெற்றுக் கொண்டோருடைய பெயர்கள் மாத்திரம் காணப்பட்டதே வேறு தகவல்கள் எதுவும் வெளியிடப்படவில்லை. ஆகவே இவ்வாறான விண்ணப்பங்கள் வருகின்ற பொழுது பாராளுமன்ற உறுப்பினர்களால் வழங்கப்பட்ட சிபார்சு கடிதங்கள், ஏனைய விண்ணப்ப விடயங்கள் தற்போது எங்கே உள்ளதென்பதை கண்டறிவதற்கான விசாரணைகள் பொலிஸ் உத்தியோகத்தர்கள் அல்லது CID அல்லது ஜனாதிபதி செயலகத்தினால் மேற்கொள்ளப்படுகின்றதா? என்பது தொடர்பான தகவல்களை வெளியிட வேண்டும்.

கிளிநொச்சி மாவட்டத்தில் மாத்திரம் 18 Bar Permits வழங்கப்பட்டுள்ளது. அங்கு ஒரு இலட்சத்திற்கும் அதிகமான வாக்காளர்கள் காணப்படுகின்றனர். ஆகவே 5,000 வாக்காளர்களுக்கு 1 Bar எனும் அடிப்படையில் வழங்கப்பட்டுள்ளது.

இவ்வாறு வழங்கப்பட்டுள்ள Bar Permit களை இரத்து செய்துள்ளீர்களா? இல்லையா? என்பதற்கான பதிலை கூறுவதுடன் அவ்வாறு இரத்து செய்யாதுவிடின் வழங்கப்பட்ட Bar Permit களை உடன் இரத்து செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். Bar Permit தொடர்பிலான இந்த கேள்வியை எழுப்புமாறு மக்கள் என்னிடம் கேட்டுக் கொண்டதற்கு இணங்கவே இச் சபையிலே இக் கேள்வியை தொடுத்தேன் என தெரிவித்தார்.

“மாகாண சபை முறை நீக்கப்படாது – உறுதியளித்த அனுர தரப்பு ” – மாகாண சபைகளே போதும் என கூறும் தமிழ்தேசியம்!

“மாகாண சபை முறை நீக்கப்படாது – உறுதியளித்த அனுர தரப்பு ” – “வேறு அதிகாரங்கள் வேண்டாம். மாகாண சபைகளே போதும் என கூறும் தமிழ்தேசியம்!

மாகாண சபை முறை நீக்கப்பட உள்ளதாக ஜே.வி.பியின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா கூறியுள்ள கருத்து பேசுபொருளாக மாறியிருக்கும் நிலையில், இதுதொடர்பில் அரசாங்கத்தின் நிலைப்பாடு என்ன..? என இலங்கை தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பினார்.

இது தொடர்பில் பதிலளித்த சபை முதல்வர் பிமல் ரத்நாயக்க , ஏனையோர் சொல்வதைக் கேட்டு முறையற்ற சந்தேகங்களை எழுப்ப வேண்டாம். மாகாண சபை முறைமையை நீக்குவது தொடர்பில் எந்தவொரு தீர்மானத்தையும் தற்போதுவரை அரசாங்கம் எடுக்கவில்லை. புதிய அரசியலமைப்பு மூன்று வருடங்களின் பின்னரே கொண்டுவரப்படும். அதிகாரப்பகிர்வு தொடர்பில் கலந்துரையாட போதுமான கால அவகாசம் உள்ளது. புதிய அரசியலமைப்பில் மாகாண சபை முறை தொடர்ந்தால் தற்போது இருக்கும் அதிகாரங்களுக்கு அப்பாலான அதிகாரப்பகிர்வு இருக்காது என்றும் தெரிவித்தார்.

இந்த அரசு அனுபவமற்றது என்பது வெளிப்படுகிறது – சாணக்கியன் குற்றச்சாட்டு!

மட்டக்களப்பு மாவட்டத்தில் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்த போதும் வெள்ள அனர்த்தத்தினை எதிர்கொள்வதற்குரிய ஆயத்தங்கள் திருப்தியளிக்கக்கூடிய வகையில் இல்லை என பாராளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் தெரிவித்துள்ளார்.

மேலும் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இதனை நிவர்த்தி செய்யும் வகையில் கடற்படையினரால் தகுந்த ஏற்பாடுகள் முன்னரே மேற்கொள்ளப்பட்டிருக்க வேண்டும் எனவும் பாராளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் குற்றம் சாட்டியுள்ளார்.

மட்டக்களப்பில் ஏற்பட்டுள்ள வௌ்ள நிலை குறித்து மேலும் கருத்து தெரிவித்த இரா. சாணக்கியன்,

சூறாவளிக்கான முன்னறிவிப்பு 3 நாட்களுக்கு முன்னரே விடுக்கப்பட்டிருந்த வேளையிலும் முன்னாயத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படாமையின் காரணத்தினால் மக்கள் மிகுந்த அசௌகரியங்களை சந்திக்க வேண்டிய அவல நிலை உருவாகியுள்ளது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் முடிந்தளவு எம்மால் இயன்ற பணிகளை மேற்கொள்வோம். மேலும் வெள்ள நீர் மட்டம் அதிகரிக்கின்ற சந்தர்ப்பத்தில் இலங்கை தமிழ் அரசுக் கட்சி மக்களுடன் மக்களாக நின்று மக்களுக்கான உதவிகளை மேற்கொள்வோம் எனவும் குறிப்பிட்டார்.

மேலும் க.பொ.த உயர்தரப் பரீட்சைக்கு தோற்றிய மாணவர்கள் படுவான்கரையிலுள்ள தமது இருப்பிடங்களுக்கு செல்ல முடியாது தெவித்தனர்.

இதன்போது பாராளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியனின் தலையீட்டினால் படகு வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டதுடன், இலங்கை போக்குவரத்து சபையுடன் தொடர்பினை மேற்கொண்டு பேரூந்து சேவைகளும் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டன. இதன் ஊடாக புதிய அரசாங்கத்தினுடைய அனுபவமற்ற தன்மை இங்கு உறுதியானது.” என அவர் தெரிவித்துள்ளார்.

வெள்ளம் பேரிடர் நேரத்தில் கூட அரசாங்கத்திற்கு ஆதரவு கொடுக்காமல் வழமையான எதிர்ப்பு அரசியலை தமிழ்தேசிய தரப்பு மேற்கொள்ள, வௌ்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரணங்களை வழங்குவதற்காக கடற்படையின் 11 குழுக்கள் அரசினால் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. அம்பாறை, மட்டக்களப்பு மற்றும் மாத்தறை மாவட்டங்களில் கடற்படையின் நிவாரணக் குழுக்கள் முழுநேர கடமைகளில் ஈடுபட்டுள்ளன.

இதனிடையே, வௌ்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை மீட்பதற்காக விமானப் படையின் 50 பேர் 06 இடங்களில் 6 ஹெலிகொப்டர்களுடன் நிறுத்தப்பட்டுள்ளதாக விமானப்படை நிறுத்தப்பட்டுள்ளதாக விமானப் படை தெரிவித்துள்ளது. மேலும் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரண உதவிகளை வழங்குவதற்கான வேலைத்திட்டம் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருவதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.