இரா. சம்பந்தன்

இரா. சம்பந்தன்

நாட்டை துண்டாடுவதற்கு இரா. சம்பந்தன் ஒரு போதும் உடன்படவில்லை – ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க

கிழக்கு மாகாணத்தை பிரதிநிதித்துவப் படுத்திய நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தும் நாட்டை துண்டாடுவதற்கு இரா. சம்பந்தன் ஒரு போதும் உடன்படவில்லை என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தொிவித்துள்ளாா்.

இரா.சம்பந்தனின் இறுதி அஞ்சலி நிகழ்வில் கலந்து கொண்டு கருத்துத் தொிவித்தபோதே அவா் இதனைக் குறிப்பிட்டுள்ளாா்.

அத்துடன், பிரிக்கப்படாத இலங்கையில் அதிகாரப் பகிர்வுக்கே எப்போதும் அர்ப்பணிப்புடன் இருந்ததாகவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

இலங்கையின் 09வது ஜனாதிபதியுடனும் கதைத்து ஏமாறுவதற்கு முன்பாகவே சம்பந்தன் இறந்துவிட்டார் !

இலங்கையின் 09வது ஜனாதிபதியுடனும் கதைத்து ஏமாறுவதற்கு முன்பாகவே நாடாளுமன்ற உறுப்பினர் சம்பந்தன் காலமாகிவிட்டதாக மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் தெரிவித்துள்ளார்.

வடகிழக்கு இணைந்த சமஸ்டி தீர்வு தரப்படவேண்டும் என்பதில் இலங்கையின் எட்டு ஜனாதிபதிகளுடன் பேசி நம்பி ஏமாந்த தலைவராகவே நாங்கள் சம்பந்தன் ஐயாவினை பார்க்கின்றோம் எனவும் அவர் தெரிவித்தார்.

மறைந்த தமிழ் தேசிய பெருந்தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தனின் ஆத்ம சாந்தி வேண்டி, இலங்கை தமிழரசு கட்சியின் பட்டிப்பளை பிரதேச கிளையின் ஏற்பாட்டில் அம்பிளாந்துறை பகுதியில் நேற்று மாலை அஞ்சலி நிகழ்வு இடம்பெற்றது. அதில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இந்நிகழ்வில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான பா.அரியநேந்திரன் மற்றும் ஞா.ஸ்ரீநேசன் ஆகியோர் கலந்து கொண்டதுடன் இலங்கை தமிழரசு கட்சியின் வட்டார கிளை தலைவர் செயலாளர், பொருளாளர், இளைஞர் அணி மற்றும் உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

ஒரு தமிழ்த் தலைவர் எப்படி வாழக்கூடாது என்பதற்கு சம்பந்தன் வாழ்க்கை வரலாற்றில் பதிவு செய்யப்படும். – மனித உரிமைச் செயற்பாட்டாளர் சண் மாஸ்டர்

மனித உரிமைச் செயற்பாட்டாளர் சண் மாஸ்டர் மறைந்த நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சம்பந்தன் மரணத்தின் பின்னர் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளார்.

குறித்த அறிக்கையில் சண் மாஸ்டர் தெரிவித்துள்ளதாவது,

இறந்தவர்களை தெய்வங்களாகவும், இறந்தவர்களை அடக்கம் செய்யும் இடங்களை புனித பிரதேசமாகவும் பூசிக்கும் வரலாற்று மரபிற்கு சொந்தக்காரர்கள் தமிழினம்.

இன்றும் நாம் இறந்தவர்களின் நீதிக்காக கண்ணீர் வடிக்கிறோம் அந்த கண்ணீர் விடும் உரிமைக்காகவும் சேர்த்து போராடுகின்றோம். எனினும் சில மரணங்கள் சுமை நீங்கியதாக மகிழ்வை தருகிறது. நரகாசூரன் வதத்தை இன்றும் தீபாவளியாக மக்கள் கொண்டாடுகிறார்கள்.

உலகிலே ஆளும் கட்சியால் உருவாக்கப்பட்ட அதிசயமான எதிர்க்கட்சி தலைவர் என்ற பதவியோடு, உல்லாச ஆடம்பர வாழ்க்கைக்காகவும் ஈழத்தமிழனத்தின் சுயநிர்ணய உரிமையை ஏக்கிய இராச்சியத்துக்குள்ளும், சிங்கள பௌத்த பேரினவாதத்தின் காலுக்குள்ளும் போட்டு மிதித்தவனின் மரணம். ஈழத்தமிழர்களுக்கு இன்னொரு மகிழ்ச்சி தரும் செய்தி தான் என்பதை சம்பந்தனின் மரணம் குறித்து தமிழ்த் தேசிய உணர்வோடு சமூக வலைத்தளங்களில் வெளிவரும் பதிவுகளே சாட்சியாகின்றன.

கதிர்காமர், நீலன் திருச்செல்வம் போன்றோர் தென்னிலங்கையின் முகத்துடனேயே தமிழ்த் தேசியத்தை கருவறுக்கும் வேலை செய்தார்கள். எனினும் சம்பந்தனோ தமிழ்த் தேசிய முகமூடியை அணிந்துகொண்டு தமிழ் சமூகத்திற்குள் ஆழவேருன்றிக்கொண்டு தமிழினத்தை கருவறுப்பதையே தனது முழுநேர பணியாகச் செய்திருந்தார்.

கதிர்காமர், நீலனை கூட புனிதமாக்குகிறது சம்பந்தனின் துரோகம். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் எனும் மணிமுடி தரித்து அழகு பார்த்த தமிழீழ விடுதலைப் புலிகளின் எதிரானவர்களின் பட்டியலில் நானும் இருந்தேனென சிங்கள நாடாளுமன்றத்தில் தெரிவித்து சர்வதேச அரங்கில் விடுதலைப் புலிகளுக்கு எதிரான பயங்கரவாத தடைநீடிப்புக்கு உரமூட்டி சிங்களத்தின் எல்லை தாண்டிய அனைத்துலக சட்டப்போராட்டத்திற்கும் இறுதிவரை துணைநின்றதை எப்படி நாம் மறக்க முடியும்?

சம்பந்தனின் மரணச் செய்தியை தமிழர்கள் அறிய முன்னரே சிங்களத் தலைவர்கள் தங்களின் சமூக வலைத்தளங்களில் வெளியிட்ட அறிக்கைகளே அவரின் துரோகத்தின் ஆழத்திற்கு சாட்சியாகிறது. சர்வதேச விசாரணை என்ற விளிம்பிலிருந்து தமிழர்களின் நீதிக்கான கோரிக்கைளை இலங்கையின் நீதிப்பொறிமுறைக்குள் இழுத்துவருவதில் சம்பந்தனின் பங்களிப்பை காலம் கடந்தும் சிங்கள தேசம் நிச்சயம் நினைவுகூரும்.

சிங்கள மந்திரிமாரே பௌத்தத்தை அரச மதமாகவும், ஒற்றையாட்சிக்குள் சமஸ்டியை கனவு காணக்கூடிய சம்பந்தன் காலமே தமக்கு சாதகமான காலமென மகிழ்ந்தார்கள். நிச்சயம் அந்த மகிழ்ச்சி மறைவது அவர்களுக்கு கவலையே. எனினும் கவலைப்படாதீர்கள் சுமோ கவலை தீர்ப்பார்.

மரணம் நெருங்கிய இறுதி நாட்களிலும்,முள்ளிவாக்கால் சுடுபுழுதியிலே கொத்துக்குண்டுகளால் கருகிப்போன எமது ஈழத்தமிழ் குழந்தைகளின் மரணத்திற்கு நீதிகேட்க வேண்டும் என்று நினைக்காத 91 வயது முதியவரின் மரணம் காலம் தாழ்ந்து விட்டதோ என்று தமிழ் சமூகம் எண்ணுவதோடு, ஒரு தமிழ்த் தலைவர் எப்படி வாழக்கூடாது என்பதற்கும் சம்பந்தன் வாழ்க்கை வரலாற்றில் பதிவு செய்யப்படும்.தமிழினம் தியாகத்துக்கு சமாந்தரமாக துரோகத்துக்குள்ளும் சிக்கி சின்னபின்னமாகியதே வரலாறு. இன்று உயிரோடு இருக்கும் வரை சம்பந்தனை ஓய்வு பெறச் சொன்னவர்களும், துரோகி என்று வசை பாடிய சிலரும் உயிரற்ற சம்பந்தனை புனிதராக்கி நாகரீகம் கற்பிக்கிறார்கள் எனக்குள்ள ஒரே கேள்வி உயிரோடு இருக்கும்போது ஒருவர் துரோகியாகவும், உயிரற்ற பின்னர் அவர் தியாகியாகவும் பார்க்கும் சூத்திரத்தை நான் அறியேன் என்னை பொறுத்தவரை துரோகமும், தியாகமும் அவர் தம் வாழ்வே தீர்மானிக்கிறது.

கவிஞர் தாமரை கூறியது போல் மரணங்கள் யாரையும் யோக்கியன் ஆக்குவதில்லை சம்பந்தனின் மரணக் கொண்டாட்டத்தை அவரே தீர்மானித்துள்ளார்.

 

அந்தவகையில் சம்பந்தனின் துரோகம் மரணத்தால் புனிதம் அடையப்போவதில்லை. இன்னுமொரு சம்பந்தனை சுமோ உருவில் செதுக்கிவிட்டே அய்யா தூங்கியுள்ளார்.

மரணத்தின் பின்னும் தமிழினத்தை அழிக்க வேண்டும் என்று கருதியவருக்காய் எவ்வாறு ஈழத்தமிழனின் கண்ணீர் சிந்தும்?

“ரணில், நான் நாட்டைப் பிரிப்பேன் என்று நீங்கள் நினைக்கிறீர்களா?” என்னிடம் சம்பந்தன் கேட்டார் – நாடாளுமன்றத்தில் ரணில் விக்கிரமசிங்க!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், மறைந்த நாடாளுமன்ற உறுப்பினருமான இரா. சம்பந்தன் எப்பொழுதும் இலங்கையின் ஆள்புல ஒருமைப்பாட்டிற்காக பங்காற்றியதாவும், அதிகாரப் பகிர்வு மேற்கொள்ளப்பட வேண்டிய விதம் தொடர்பில் அவருக்கு தனியான நிலைப்பாடு இருப்பதாகவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

இரா.சம்பந்தனின் மறைவு தொடர்பில் நாடாளுமன்றத்தில் இன்று விசேட உரையொன்றை நிகழ்த்திய போதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதனைக் குறிப்பிட்டார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,

நான் இந்த உரையாற்றும் போது, ​​அன்று என்னுடன் நாடாளுமன்றத்திற்கு வந்தவர்களில் எஞ்சியிருந்த எனது சகாக்களில் ஒருவரான சம்பந்தன் இப்போது எங்களுடன் இல்லை.

மிகவும் கடினமான காலகட்டங்களில் அவருடன் இணைந்து பணியாற்றும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. அவர் ஆற்றிய பங்களிப்பை நன்றியுடன் நினைவு கூர்கிறேன். அவர் தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணி (TULF) மற்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பு (TNA) ஆகியவற்றை பிரதிநிதித்துவப்படுத்திய போதிலும், அவர் எப்போதும் இலங்கையின் ஆட்புல ஒருமைப்பாட்டிற்காக பங்காற்றினார்.

ஒருமுறை அவர் என்னுடன் உரையாற்றும் போது “ரணில்,நான் நாட்டைப் பிரிப்பேன் என்று நினைக்கிறீர்களா? நான் சிறுவனாக இருந்த போது, 1948ல் நாடு சுதந்திரம் பெறுவதைப் பார்க்கச் சென்றிருந்தேன்” என்று அவர் என்னிடம் குறிப்பிட்டார்.

அதனைக் காணும் வாய்ப்பு எங்களுக்குக் கிடைக்கவில்லை. நம்மில் பலர் அப்போது பிறக்கவே இல்லை. ஆனால் அதிகாரப் பகிர்வு தொடர்பில் அவர் தனித்துவமான நிலைப்பாட்டைக் கொண்டிருந்தார். அதைப் பற்றி விவாதம் செய்ய அவசியமில்லை. அவர் அதற்கான போதுமான பங்கை செய்துள்ளதாக நினைக்கிறேன். அதனை நிறைவு செய்ய இன்னும் கொஞ்சம் பங்காற்ற வேண்டியுள்ளது. மேலும் அந்த வேலைகளை நிறைவு செய்வதே அவருக்கு செய்யக்கூடிய மிக உயர்ந்த பங்களிப்பாக இருக்கும்” இவ்வாறு ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

சம்பந்தனின் பாராளுமன்ற வெற்றிடத்தை நிரப்பும் நபர் யார்..? – வெளியான அறிவிப்பு!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் காலமானதையடுத்து ஏற்பட்ட வெற்றிடத்தை நிரப்புவதற்காக சண்முகம் குகதாசன் நாடாளுமன்றத்திற்கு பிரவேசிக்கவுள்ளதாகத் தொிவிக்கப்பட்டுள்ளது.

2020 பொதுத்தேர்தலில் திருகோணமலை மாவட்டத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு சார்பில் போட்டியிட்ட சண்முகம் குகதாசன் 16,770 வாக்குகளைப் பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான இரா. சம்பந்தன் காலமானார் !

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான இரா. சம்பந்தன் காலமானார்.

உடல் நலக்குறைவால் கொழும்பு தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் உயிரிழந்த அவருக்கு வயது 91 ஆகும்.

இலங்கையில் மிகவும் அரசியல் அனுபவம் வாய்ந்த தமிழ்த் தலைவரான இரா.சம்பந்தன் 2015 ஆண்டு செப்டம்பர் மாதம் 3ஆம் திகதி முதல் 2018 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 18 ஆம் திகதி வரை இலங்கையின் எதிர்க்கட்சி தலைவராகவும் பதவி வகித்திருந்தார்.

இராஜவரோதயம் சம்பந்தன் 1977 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் தமிழர் விடுதலைக் கூட்டணியின் சார்பில் திருகோணமலைத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று நாடாளுமன்ற உறுப்பினர் ஆனார்.

1983ஆம் ஆண்டு நடுப்பகுதியில் தமிழர் விடுதலைக் கூட்டணி (தவிகூ) நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் நாடாளுமன்றத்தைப் புறக்கணித்தனர். இலங்கை அரசியலமைப்பின் ஆறாவது திருத்தச் சட்டத்தின் படி தனி நாடு கோருவதற்கு ஆதரவளிக்க முடியாது என நாடாளுமன்றத்தில் சத்தியப் பிரமாணம் எடுக்க மறுத்தமைக்காகவும், 1983 கறுப்பு யூலையில் மூவாயிரத்திற்கும் அதைகமான தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டதற்கும், அவர்களது உடைமைகள் சேதமாக்கப்பட்டதற்கும் எதிர்ப்புத் தெரிவித்தும் அவர்கள் நாடாளுமன்ற அமர்வுகளைப் புறக்கணித்தனர். மூன்று மாதங்கள் தொடர்ந்து நாடாளுமன்ற அமர்வுகளில் பங்குபற்றாமல் போனதால் சம்பந்தன் தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை 1983, செப்டம்பர் 7 இல் இழந்தார்.

பின்னர் 1989 தேர்தலில் போட்டியிட்ட போதும் வெற்றிபெறாத நிலையில், மீண்டும் 2001 ஆம் ஆண்டு தேர்தலில் வெற்றி இறக்கும்வரை நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தமை குறிப்பிடத்தக்கது.

ஜனாதிபதி வேட்பாளர்களுடன் தனித்தனியே பேச்சுவார்த்தை – இரா.சம்பந்தன்

ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுகின்ற பிரதான வேட்பாளர்களுடன் தனித்தனியே பேச்சுவார்த்தையில் ஈடுபடவுள்ளதாக இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் சிரேஷ்ட தலைவரும், திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

அத்துடன், ரணில், சஜித், அநுர ஆகிய மூவரும் தமது தேர்தல் விஞ்ஞாபனத்தில் தமிழ் மக்களுக்கான தீர்வு தொடர்பாக அறிவிக்கவேண்டும் என்றும் இரா.சம்பந்தன் குறிப்பிட்டுள்ளார்.

அதன் பின்னர் தமிழ் மக்களின் நிலைப்பாடுகளை புரிந்து கொண்டு யாரை ஆதரிப்பது என்பது குறித்து முடிவெடுப்போம் என்றும் இரா.சம்பந்தன் மேலும் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் பொதுவேட்பாளர் என்ற மூலோபாயம் பயனற்றது – இரா.சம்பந்தன்

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் பொதுவேட்பாளர் என்ற மூலோபாயம் பயனற்றது எனவும் தென்னிலங்கையில் உள்ள தலைவர்களுடன் பேச்சுக்களை முன்னெடுத்தே இறுதியான தீர்மானம் எடுக்கப்பட வேண்டும் எனவும் தமிழரசுக் கட்சியின் சிரேஷ்ட தலைவரான நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கு விஜயம் செய்துள்ள ஐரோப்பிய ஒன்றியத் தூதுக்குழு கொழும்பிலுள்ள ஆர்.சம்பந்தனின் இல்லத்தில் அவரைச் சந்தித்து கலந்துரையாடிய போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

தமிழ் மக்கள் தொடர்ச்சியாக வழங்கி வருகின்ற ஆணையைத் தென்னிலங்கை ஆட்சியாளர்கள் நிராகரித்து வருகின்ற நிலையில் தேர்தல்களை நடத்தப்படுவதற்கு அப்பால் தமிழ் மக்களின் ஆணையை ஏற்றுக்கொள்வதற்கான அழுத்தங்களையும் பிரயோகிக்க வேண்டும் என தமிழரசுக் கட்சியின் சிரேஷ்ட தலைவரான நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சம்பந்தன் வலியுறுத்தியுள்ளார்.

அதன்படி, தமிழ் மக்கள் தொடர்ச்சியாக தமது நீண்டகால அபிலாஷைகளைப் பூர்த்தி செய்ய வேண்டும் என்பதை அடிப்படையாக் கொண்டே ஒவ்வொரு தேர்தல்களிலும் ஆணையை வழங்கி வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இருப்பினும் அவர்கள் வழங்கி வரும் ஆணையைக் கருத்தில் கொள்ளாது கருமங்களை முன்னெடுக்கின்ற செயற்பாடுகளே நடைபெறுவதாகவும் சம்பந்தன் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஆகவே, ஐரோப்பிய ஒன்றியக்குழு உட்படச் சர்வதேச சமூகம் தேர்தல்களை நடத்துவதற்கான அழுத்தங்களை கொடுப்பதற்கு அப்பால் தமிழ் மக்கள் வழங்கும் ஆணையை உறுதிப்படுத்துமாறு அழுத்தங்களை அதியுச்சமாகப் பிரயோகிக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்திள்ளார்.

அத்தோடு, இலங்கை அரசாங்கம் இந்தியாவுடன் செய்து கொண்ட உடன்பாடுகளையோ, சர்வதேசத்துடன் செய்து கொண்ட உடன்பாடுகளையோ ஏற்று நடைமுறைப்படுத்துவதாக இல்லை எனவும் சம்பந்தன் குற்றஞ்சாட்டியுள்ளார்.

அரசியலமைப்பில் உள்ள விடயங்களைக் கூட அரசாங்கம் நடைமுறைப்படுத்துவதில் தொடர்ச்சியாக தயக்கம் காட்டி வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் தமிழ் மக்கள் உள்ளக சுயநிர்ணய உரிமைக்கு உரித்துடையவர்கள் எனவும் ஆகவே அந்த உரித்து தொடர்ச்சியாக மறுக்கப்படுகின்றபோது நிச்சயமாக வெளியக சுயநிர்ணய உரித்தை கோருவதற்கான நிலைமைகளே உருவாகும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தமிழ் மக்களின் வரலாற்றில் பொதுவேட்பாளர் போன்ற விடயங்களை எப்போதுமே முன்னிறுத்தியது கிடையாது எனவும் அவ்விதமான நிலையில் தற்போது பொதுவேட்பாளர் ஒருவரைக் களமிறக்குவது பொருத்தமற்ற அணுகுமுறையாகவே இருக்கும் எனவும் இரா. சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி தேர்தலில் தமிழ் பொதுவேட்பாளர் ஒருவரை நிறுத்தும் யோசனையை ஏற்றுக்கொள்ள முடியாது – இரா.சம்பந்தன்

ஜனாதிபதி தேர்தலில் தமிழ் பொதுவேட்பாளர் ஒருவரை நிறுத்தும் யோசனையை ஏற்றுக்கொள்ள முடியாது என்று இலங்கைத் தமிழரசுக்கட்சியின் சிரேஷ்ட தலைவர் இரா.சம்பந்தன் மாவை.சோ.சேனாதிராஜா மற்றும் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரனிடத்தில் இறுக்கமான நிலைப்பாட்டை வெளியிட்டுள்ளார்.

இதுதொடர்பில் கருத்துவெளியிட்ட எம்.ஏ.சுமந்திரன், சம்பந்தன் ஐயாவை நேரில் ஒருதடவை சந்தித்திருந்தேன். அதன்பின்னர் அவர் தொலைபேசி வாயிலாக உரையாடியிருந்தார். இந்நிலையில், அவர் ஜனாதிபதி தேர்தலில் தமிழர்கள் சார்பில் பொதுவேட்பாளர் ஒருவரை நிறுத்துவது சம்பந்தமாக மூன்று விடயங்களை சுட்டிக்காட்டினார்.

முதலாவதாக, நாங்கள் தொடர்ச்சியாக தமிழாகள் சார்பில் பொதுவேட்பாளர் ஒருவரை களமிற்குவதில்லை என்ற நிலைப்பாட்டில் இருந்துவருவதோடு, ஐக்கிய இலங்கைக்குள் தீர்வினை பெற்றுக்கொள்வதற்கான முயற்சிகளை முன்னெடுத்து வருகின்றோம்.

அதேபோன்று, பொதுவேட்பாளர் விவகாரம் ஒஸ்லோ உடன்பாட்டை மீறுவதாக அமையும். ஏனென்றால் ஒஸ்லோ உடன்பாட்டில் இலங்கை அரசாங்கம் சமஷ்டி அடிப்படையிலான பேச்சுக்கு தயார் என்றே கூறியுள்ளது. ஆகவே பொதுவேட்பாளர் ஒருவரைக் களமிறக்குவதன் ஊடாக அந்த ஒப்பந்தத்தினை தூக்கியெறிந்து செயற்பட முடியாது.

மூன்றாவதாகரூபவ் இந்திய இலங்கை ஒப்பந்தத்தின் பிரகாரம் வடக்கு கிழக்கை இணைப்புச் செய்வதாக இருந்தால் வாக்கெடுபபைச் செய்ய வேண்டும்.

எனினும் அவ்வாறு வாக்கெடுப்பைச் செய்வதாக இருந்தால் கல்லோயாத் திட்டம் உள்ளிட்ட காலத்தில் மேற்கொள்ளப்பட்ட குடியேற்றங்கள் அகற்றப்பட வேண்டும். ஆகவே கிழக்கு மாகாணாத்தில் வெளியேற்றப்பட்டவர்கள் மீளக்குடியேற்றப்பட்டதன் பின்னரேயே வாக்கெடுப்பை நடத்த முடியும்.

அவ்விதமான சந்தர்ப்பங்களை விடுத்து பொதுவேட்பாளர் தெரிவுக்குச் செல்வதை ஏற்றுக்கொள்ள முடியாது என்று குறிப்பிட்டார்.

அத்துடன், தனது நிலைப்பாட்டினை மாவை.சோ.சேனாதிராஜாவுக்கும் ரியபர்படுத்தியுள்ளதாகவும் சுமந்திரன் தெரிவித்தார்.

சம்பளத்துடன் இரா.சம்பந்தனுக்கு மூன்றுமாத பாராளுமன்ற விடுமுறை!

திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஆர். சம்பந்தனுக்கு சம்பளத்துடன் கூடிய மூன்று மாத கால விடுமுறை வழங்க நாடாளுமன்றம் இன்று (25) அனுமதி வழங்கியது.

 

எதிர்க்கட்சியின் பிரதான அமைப்பாளர் லக்ஷ்மன் கிரியெல்ல இந்த யோசனையை நாடாளுமன்றத்தில் முன்வைத்தார்.தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் இந்த தீர்மானத்தை ஆதரித்தார்.

 

91 வயதாகும் ஆர் சம்பந்தன் தற்போது சுகயீனமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.