அமைச்சர் காஞ்சன விஜேசேகர

அமைச்சர் காஞ்சன விஜேசேகர

தெற்காசியாவில் அதிக மின்சாரக் கட்டணத்தை வசூலிக்கும் நாடு இலங்கை என கூறுவது நியாயமில்லை – அமைச்சர் காஞ்சன கவலை !

ஒன்பது வருடங்களாக ஒரே மாதிரியான மின்சாரக் கட்டணத்தை வசூலித்த ஒரே நாடு இலங்கை என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

இந்தப் பின்னணியில் தெற்காசியாவில் அதிக மின்சாரக் கட்டணத்தை வசூலிக்கும் நாடு இலங்கை என கூறுவது நியாயமில்லை என்றார்.

மின்சாரக் கட்டணத்தை குறைக்குமாறு பாராளுமன்றத்தில் கூச்சலிட்ட போதும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் எவரும் அழைப்பு விடுக்கப்பட்ட போதிலும் எந்தவொரு யோசனையையும் முன்வைக்கவில்லை.

வழங்கப்படக்கூடிய குறைந்த கட்டண விளிம்புகள் தொடர்பான முன்மொழிவு சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

கட்டண திருத்தம் தொடர்பான இறுதிப் பொறுப்பு பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவினுடையது என்றும், அவர்கள் பொதுமக்களின் கருத்துக்களைப் பெற்று பரிந்துரைகளை வழங்கியதன் பின்னர், மின்சார சபை மீண்டும் கட்டண முறை தொடர்பான முன்மொழிவுகளைத் தயாரிக்கும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

கட்டண திருத்தம் தொடர்பில் அமைச்சரவை மற்றும் நிதி அமைச்சுக்கு அறிவிக்கப்படும் எனவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

 

பெட்ரோலுக்காக மீண்டும் வரிசை – அமைச்சர் காஞ்சன விஜேசேகர

நாட்டில் பல பாகங்களில் எரிபொருளை பெற்றுக்கொள்வதற்காக மக்கள் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் வரிசைகளில் காத்திருக்கும் நிலை மீண்டும் ஏற்பட்டிருந்தது.

இந்தநிலையில், எரிபொருள் விநியோகம் தொடர்பில் மக்கள் அச்சம் கொள்ள தேவையில்லை என எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

மக்கள் எரிபொருளைப் பெற்றுக்கொள்வதற்கு பல எரிபொருள் நிரப்பு நிலையங்களில் நீண்ட வரிசையில் காத்துக்கொண்டிருக்கின்றனர்.

இது தொடர்பில் அமைச்சர் கஞ்சன மேற்குறித்த தகவலை வெளியிட்டுள்ளார்.

அத்தோடு எரிபொருள் நிலைய உரிமையாளர்கள் மற்றும் விநியோகஸ்தர்கள் எரிபொருளைப் பெற்றுக்கொள்வதில் ஏற்பட்டுள்ள தாமதம் காரணமாகவே இந்த நிலை ஏற்பட்டுள்ளதாகவும், இது தொடர்பில் மக்கள் அச்சமடையத் தேவையில்லை எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இலங்கையின் முதலாவது மிதக்கும் சூரிய சக்தி திட்டம் – உதவிக்கரம் நீட்டும் கொரியா !

இலங்கையின் முதலாவது மிதக்கும் சூரிய சக்தி திட்டத்திற்கு கொரிய அரசாங்கம் 5.2 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்கியுள்ளது.

சப்ரகமுவ மாகாணத்தில் சந்திரிகா ஏரி மற்றும் ஊவா மாகாணத்தின் கிரிப்பன் குளம் ஆகியவற்றில் நடைமுறைப்படுத்தப்படும் இந்த இரண்டு திட்டங்களும் கொரிய பொறியியல் நிறுவனத்தின் ஊடாக நடைமுறைப்படுத்தப்படுகின்றன.

அந்த திட்டங்களுக்கான ஒப்பந்தத்தில் கொரியா தொழில்நுட்ப மேம்பாட்டு நிறுவனமும் (KIAT) மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சும் இன்று கைச்சாத்திட்டதாக அமைச்சர் காஞ்சன விஜேசேகர தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

2024 டிசம்பர் மாதத்திற்குள் இத்திட்டத்தை நிறைவு செய்யத் திட்டமிடப்பட்டுள்ளதாக அமைச்சர் காஞ்சன விஜேசேகர மேலும் தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் நான்கு வருடங்களில் 330 புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திட்டங்கள் !

எதிர்வரும் நான்கு வருடங்களில் 330 புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திட்டங்களை நடைமுறைப்படுத்தவுள்ளதாக அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

இதன் மூலம் தேசிய மின் உற்பத்திக்கு 2300 மெகாவோட் மின்சாரத்தை சேர்க்கும் சாத்தியக்கூறுகள் காணப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

மிசக்தி எரிசக்தி அமைச்சில் இன்று (புதன்கிழமை) இடம்பெற்ற கலந்துரையாடலில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், அரச நிறுவனங்களால் அனுமதிக்கப்படும் திட்டங்களை விரைவுபடுத்தவும், அங்கீகாரம் பெற முடியாத திட்டங்களுக்கு வழங்கப்பட்ட தற்காலிக உரிமங்களை இரத்து செய்யவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

எரிபொருள் விநியோகத்திற்கான QR முறைமை நீக்கப்படும் – அமைச்சர் காஞ்சன விஜேசேகர

எரிபொருள் விநியோகத்திற்காக தற்போது நடைமுறைப்படுத்தப்படும் QR முறைமை எதிர்வரும் 3 மாதங்களின் பின்னர், நீக்கப்படும் என மின்சக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

நேற்றிரவு தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் கலந்துக் கொண்டு கருத்துவெளியிட்ட போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை மின்சார சபையை மறுசீரமைப்பதற்கான சகல நடவடிக்கைகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக விடயத்துக்கு பொறுப்பான அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பான யோசனை அடுத்த மாதம் பாராளுமன்றில் முன்வைக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

உயர்தர பரீட்சை காலத்தில் மின்சாரத்தை நிறுத்தாவிட்டால் 5 பில்லியன் நட்டம் – அமைச்சர் காஞ்சன விஜேசேகர

உயர்தரப் பரீட்சையின் போது மின்சாரத்தை துண்டிக்க வேண்டாம் என கல்வி அமைச்சரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஆனால் நாட்டின் நிதி நிலைமை பாதிக்கப்பட்டுள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

அதன்படி பரீட்சை நேரத்தில் கூட மின்வெட்டை தடுக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. குறித்த காலப்பகுதிக்கான தொடர்ச்சியான மின்சார விநியோகத்துக்கு மேலதிகமாக 5 பில்லியன் ரூபா செலவாகும் என எண்ணெய்க் கூட்டுத்தாபனம் மின்சார சபைக்கு அறிவித்துள்ளதாகத் தெரிவித்த அவர், அந்தத் தொகையைச் செலுத்துவதற்கு சபைக்கு நிதி பலம் இல்லை எனவும் தெரிவித்தார்.

பணத்தைச் செலுத்தாமல் எரிபொருளை கடனாகப் பெற்றால் அது மீண்டும் எரிபொருள் வரிசையில் நிற்கும் யுகத்துக்கு வழிவகுக்கும் என்றும் அமைச்சர் கூறினார்.

தொடர்ந்து 24 மணி நேரமும் மின்சாரம் வழங்கும் வகையில் கட்டணத்தை உயர்த்துவதற்கான யோசனை முன்வைக்கப்பட்டுள்ளதாகவும், மீண்டும் வரிசைகள் உருவாக்கப்படுவதை தடுக்கும் வகையில் திருத்தத்தை அனுமதிக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இதேநேரம்; உயர்தர பரீட்சை நடைபெறும் ஜனவரி 23 ஆம் திகதி முதல் பெப்ரவரி மாதம் 17ஆம் திகதி வரை மின்வெட்டைத் தடுப்பதற்கு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு மனித உரிமைகள் ஆணைக்குழு கடந்த 23 ஆம் திகதி மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சின் செயலாளர் மற்றும் இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவருக்கு அறிவித்திருந்தது.

ஆனால் இரு தரப்பிலும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு அவதானித்துள்ளது.

மனித உரிமைகள் ஆணைக்குழுவில் ஆஜராகுமாறு மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சின் செயலாளர் மற்றும் இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஆகியோருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

 

“ஒன்று உயர்த்தப்பட்ட மின்கட்டணத்தை கட்டுங்கள். அல்லது மின்வெட்டில் வாழப்பழகுங்கள்.” – அமைச்சர் காஞ்சன விஜேசேகர

மின் கட்டணத்தை உயர்த்த கூடாது என்றால் நாளாந்த மின்வெட்டை மக்கள் எதிர்நோக்க வேண்டும் என அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

அதன்படி தினமும் பல மணி நேரம் மின்சாரம் துண்டிக்கப்பட்ட வாழ்க்கை முறைக்கு மக்கள் மாறிக் கொள்ள வேண்டியிருக்கும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை எதிர்வரும் ஜனவரி மாதம் 05, 09 மற்றும் 13 ஆம் திகதிகளில் 03 நிலக்கரி கப்பல்கள் இலங்கையை வந்தடையவுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

இலங்கைக்கான புதிய நிலக்கரி விநியோகத்திற்கான டெண்டர் சட்டமா அதிபரின் பரிந்துரைகளைப் பெற்றதன் பின்னர் இந்தோனேசிய நிறுவனமொன்றுக்கு வழங்கப்பட்டதாக அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

“அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் வடக்கு கிழக்கு பிரதேசங்களுக்கு தேவையான மீன்பிடித் துறைமுகங்கள் உருவாக்கப்படும்” – இராஜாங்க அமைச்சர் காஞ்சன விஜேசேகர நம்பிக்கை !

“அடுத்த ஐந்து வருடங்களில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் வடக்கு கிழக்கு பிரதேசங்களுக்கு தேவையான மீன்பிடித் துறைமுகங்கள் உருவாக்கப்படும்” என்று கடற்றொழில் இராஜாங்க அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் நேற்று (06.12.2020) நடைபெற்ற கந்தர மீன்பிடித் துறைமுகத்திற்கான வேலைகளை ஆரம்பித்து வைக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே இதனைத் தெரிவித்தார்.

வடக்கு கிழக்கில் மீன்பிடித் துறைமுகங்கள் உருவாகும்

அங்கு அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்,

“நாடளாவிய ரீதியில் சுமார் 22 மீன்பிடித் துறைமுகங்கள் இருக்கின்ற போதிலும் நாட்டின் மூன்றிலிரண்டு கடல் பிரதேசத்தை கொண்ட வடக்கு கிழக்கு பிரதேசத்தில் இரண்டு மின்பிடித் துறைமுகங்கள் மாத்திரமே இருப்பதாக கவலை வெியிட்ட இராஜாங்க அமைச்சர் காஞ்சன விஜேசேகர, அடுத்த ஐந்து வருடங்களில் அமைச்சர் டக்ளஸின் தலைமையில் வடக்கு கிழக்கு பிரதேசத்திற்கு தேவையான துறைமுகங்கள் உருவாக்கப்படும் எனவும் தெரிவித்தார்.

2013 ஆம் ஆண்டு காலப்பகுதியில் ஜனாதிபதியாக இருந்த போது தற்போதைய பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்களினால் கந்தர மற்றும் குருநகர் ஆகிய துறைமுகங்களை அமைப்பதற்கான தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதை நினைவுபடுத்திய இராஜாங்க அமைச்சர், தற்போதைய அரசாங்கத்தில் கந்தர துறைமுகம் தொடர்பாக முதலாவது அமைச்சரவை பத்திரத்தை சமர்ப்பித்து அங்கீகாரத்தினை பெற்றுக் கொடுத்தமைக்காக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிற்கு நன்றியையும் தெரிவித்தார்.

குறித்த துறைமுகம் சுமார் 4 பில்லியன் செலவில் அமைக்கப்படவள்ள நிலையில், இந்த துறைமுகமானது நூற்றுக்கான பலநாள் கலங்களும் சிறு மீன்பிடிப் படகுகளும் பயன்படுத்த கூடிய நவீன உட்கட்டமைப்பு வசதிகளை கொண்டு அமையவுள்ளமை குறிப்பிடத்தக்கது.