வடக்கில் இராணுவ குறைப்பு செய்வது தவறு – சரத் வீரசேகர !
தேசிய மக்கள் சக்தி ஆட்சியமைத்தது முதல் தமிழர் பகுதிகளில் இராணுவத் தடைகளை முகாம்களை அகற்றி வருகிறது. மேலும் இராணுவம் ஆக்கிரமித்துள்ள தமிழ் மக்களின் காணிகள் மீண்டும் மக்களிடம் கையளிக்கப்பட்டு வருகின்ற நிலையில், இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர தேசிய பாதுகாப்பை பலவீனப்படுத்தும் வகையில் தான் வடக்கில் உள்ள இராணுவ முகாம்கள் அகற்றப்படுகின்றன என தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் மேலும் கருத்து வெளியிட்டுள்ள அட்மிரல் சரத்வீரசேகர , தற்போதைய அரசாங்கம் தேசிய பாதுகாப்புக்கு முன்னுரிமை வழங்கவில்லை. இந்திய எதிர்ப்புக் கொள்கையை கொண்டிருந்த மக்கள் விடுதலை முன்னணி, இன்று இந்தியாவுக்கு சாதகமாக செயற்படுகிறது. தேசிய பாதுகாப்பை பலவீனப்படுத்தும் வகையில் வடக்கில் உள்ள இராணுவ முகாம்கள் அகற்றப்படுகின்றன. இந்த நாடு 30 வருடகால பிரிவினைவாத போராட்டத்தை எதிர்கொண்டது என்பதை அரசாங்கம் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும் என தெரிவித்தார்.
விடுதலைப்புலிகள் தான் இல்லாதொழிக்கப்பட்டுள்ளதே தவிர அந்த அமைப்பின் நோக்கம் அழியடையவில்லை என தெரிவித்துள்ள சரத் வீரசேகர, தேசிய மற்றும் சர்வதேச மட்டத்தில் விடுதலைப் புலிகள் அமைப்பின் கொள்கையை கொண்டுள்ளவர்கள் இன்றும் உள்ளார்கள்கள். ஆகவே தேசிய பாதுகாப்பை அரசியல் தேவைகளுக்காக பலவீனப்படுத்தக் கூடாது என தெரிவித்துள்ளார்.
நாட்டின் ஒற்றையாட்சியை பாதுகாப்பதற்காகவே பல்லாயிர இராணுவத்தினர் உயிர் தியாகம் செய்தார்கள். ஆகவே சமஸ்டியாட்சி அரசியலமைப்பை உருவாக்கி படையினரின் உயிர் தியாகத்தை மலினப்படுத்த இடமளிக்க முடியாது என சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.