ஐக்கிய நாடுகள் சபை

ஐக்கிய நாடுகள் சபை

“இலங்கையிலுள்ள கடுமையான பாதுகாப்புச் சட்டங்களை உடனடியாக முடிவுக்கு கொண்டு வர வேண்டும்.” – ஐ.நா வலியுறுத்தல்!

இலங்கையில் உள்ள கடுமையான பாதுகாப்புச் சட்டங்களை உடனடியாக முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என ஐக்கிய நாடுகள் சபை வலியுறுத்தியுள்ளது.

பலவீனமான கடன் மற்றும் பொருளாதார நெருக்கடி, இலங்கையில் அடிப்படை பொருளாதார மற்றும் சமூக உரிமைகளுக்கான மக்களின் அணுகலை கடுமையாக தடை செய்துள்ளதாகவும் சுட்டிக்காட்டியுள்ளது.

ஆகவே மீட்புக் கொள்கைகளில் ஏற்றத்தாழ்வுகளை சரிசெய்ய வேண்டும் என்றும் சமூகப் பாதுகாப்பு மற்றும் பொருளாதார பின்னடைவுக்கான பிற விடயங்களில் ஆர்வம் காட்ட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளது.

ஊழல், வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புக்கூறல் போன்ற அடிப்படை பிரச்சினைகளையும் நிவர்த்தி செய்ய வேண்டும் என ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் வோல்கர் டர்க் கேட்டுக்கொண்டுள்ளார்.

மேலும் கடுமையான பாதுகாப்புச் சட்டங்களை நம்புவதும், சிவில் சமூகம் மற்றும் பாதிக்கப்பட்டவர்கள் மீதான துன்புறுத்தல் மற்றும் கண்காணிப்பு ஆகியவை முடிவுக்கு வர வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

நிலைமாறுகால நீதிக்கான உண்மையான மற்றும் விரிவான அணுகுமுறையை ஆதரிக்க தனது அலுவலகம் தொடர்ந்தும் அர்ப்பணிப்புடன் செயற்படும் என்றும் ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் கூறினார்.

ஐ.நா வாக்கெடுப்பில் கலந்து கொள்ளாத இலங்கை !

ரஷ்யா – உக்ரைன் போரை நிறுத்துமாறும், உக்ரைனிலிருந்து ரஷ்ய படைகளை உடனடியாக வெளியேறுமாறும் ஐக்கிய நாடுகள் பொதுச் சபையில் முன்வைக்கப்பட்ட தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பில் இலங்கை கலந்து கொள்ளவில்லை.

ஜேர்மன் பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி பீற்றர் ராம் சோரும் தனது இலங்கை விஜயத்தின் போது ரஷ்யாவிற்கு எதிராக கொண்டுவரப்பட்ட இந்த பிரேரணைக்கு ஆதரவளிக்குமாறு இலங்கையிடம் கோரிக்கை விடுத்திருந்தார்.

ஐக்கிய இராச்சியம், ஐக்கிய அ‍மெரிக்கா, பிரான்ஸ், ஜப்பான்,ஜேர்மனி, கனடா உள்ளிட்ட 141 உறுப்பு நாடுகள் தீர்மானத்திற்கு ஆதரவாகவும், ரஷ்யா, பெலாரஸ், ‍கொரியா, எரித்திரியா,மாலி, நிகரகுவா, சிரியா ஆகிய 7 உறுப்பு நாடுகள் எதிராகவும் வாக்களித்திருந்தன. இ‍தேவேளை, இலங்கை, சீனா, பாகிஸ்தான், கியூபா  உள்ளிட்ட 32 உறுப்பு நாடுகள் வாக்கெடுப்பில் கலந்து கொள்ளவில்லை.

“ஒவ்வொரு 11 நிமிடமும் ஒரு பெண் அல்லது சிறுமி தனது நெருங்கிய உறவினராலோ அல்லது காதலனாலோ கொல்லப்படுகின்றனர்.” – ஐக்கிய நாடுகள் சபை

சர்வதேச பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு தினம் நவம்பர் 25 அன்று கடைபிடிக்கப்படுகிறது.

“ஒவ்வொரு 11 நிமிடமும் ஒரு பெண் அல்லது சிறுமி தனது நெருங்கிய உறவினராலோ அல்லது தனது காதலனாலோ கொல்லப்படுகின்றனர்.” என ஐ.நா தெரிவித்துள்ளது.

பெண்களுக்கு எதிரான வன்முறையை ஒழிப்பதற்கான சர்வதேச தினத்தை முன்னிட்டு ஐ.நா. பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ் ஆற்றிய உரையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிரான வன்முறை என்பது உலகளவில் மிகவும் பரவலாக நிகழும் மனித உரிமை மீறலாகும். ஒவ்வொரு 11 நிமிடமும் ஒரு பெண் அல்லது சிறுமி தனது நெருங்கிய உறவினராலோ அல்லது தனது காதலனாலோ கொல்லப்படுகின்றனர்.

கொரோனா தொற்றிலிருந்து பொருளாதாரக் கொந்தளிப்பு வரை தவிர்க்க முடியாமல் இன்னும் அதிகமான உடலாலும் மற்றும் மனதாலும் பெண்கள் பாதிக்கப்படுகின்றனர். உலக நாடுகளின் அரசுகள், பெண்களுக்கு எதிரான வன்முறையை தடுக்க தேசிய அளவில் செயல் திட்டத்தை வகுத்து, நடைமுறைப் படுத்த வேண்டும். பெண்களின் உரிமைகளுக்கு ஆதரவாக நின்று குரல் எழுப்புங்கள் என தெரிவித்தார்.

ஐக்கிய நாடுகளுடன் ஒத்துழைத்து செயற்பட்டவர்களுக்கு இலங்கையில் பழிவாங்கல் மற்றும் அச்சுறுத்தல் !

மனித உரிமைகள் தொடர்பாக ஐக்கிய நாடுகளுடன் ஒத்துழைத்ததற்காக இலங்கை உட்பட 42 நாடுகளில் உள்ள மக்கள் பழிவாங்கல் மற்றும் அச்சுறுத்தல்களை எதிர்கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த விடயம் தொடர்பாக ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகளுக்கான உதவி பொதுச் செயலாளர் இல்சே பிராண்ட்ஸ் கெஹ்ரிஸின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

முக்கியமாக மனித உரிமை மீறல்களால் பாதிக்கப்பட்டவர்கள், மனித உரிமைகள் பாதுகாவலர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள், அரச சார்பற்ற நிறுவனங்களின் உறுப்பினர்கள் பழிவாங்கல் மற்றும் அச்சுறுத்தல்களை எவ்வாறு சந்தித்தார்கள் என்பது குறித்து அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தடுத்து வைத்தல், கட்டுப்படுத்தப்பட்ட சட்டத்தால் இலக்கு வைக்கப்படல் மற்றும் இணையங்கள் மூலம் அவர்கள் கண்காணிக்கப்பட்டனர் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இந்த அத்துமீறல்கள் அனைத்தும் 2021 மே 1ஆம் திகதி முதல் 2022 ஏப்ரல் 30ஆம் திகதி வரையில் இடம்பெற்றுள்ளன என்றும் உதவி பொதுச்செயலாளரின் வருடாந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த செயற்பாடுகள் காரணமாக, குறிப்பிடப்பட்டுள்ள நாடுகளில் உள்ளவர்கள் ஐக்கிய நாடுகளுடன் ஒத்துழைப்பதைத் தவிர்த்தனர் என்று ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகளுக்கான உதவி பொதுச்செயலாளரின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

“உலக மக்களின் நலனுக்காக போரை முடித்துக் கொள்ளுங்கள்.”- ஐக்கிய நாடுகள் சபை வலியுறுத்தல் !

ஐக்கிய நாடுகள் சபையும், பல்வேறு நாடுகளும் உக்ரைனில் ரஷ்யாவின் போரை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர்.

சீனா, அமெரிக்கா, அயர்லாந்து, பிரான்ஸ் மற்றும் மெக்சிகோ உள்ளிட்ட பெரும்பாலான பாதுகாப்பு கவுன்சில் உறுப்பினர்கள் பல மாதங்களாக நீடித்து வரும் போருக்கு முடிவு கட்ட வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், இதுகுறித்து  ஐ.நா பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ் கூறியதாவது:-

உக்ரைன் மீதான ரஷியாவின் படையெடுப்பு அதன் பிராந்திய ஒருமைப்பாடு மற்றும் ஐக்கிய நாடுகள் சபையின் சாசனத்தை மீறுவதாகும். உக்ரைன், ரஷியா மக்களுக்கு மட்டுமல்லாமல் உலக மக்களின் நலனுக்காக போர் முடிவுக்கு வர வேண்டும்.” இவ்வாறு அவர் கூறினார்.

சோமாலியாவில் உணவு , நீரின்றி தவிக்கும் 20 இலட்சம் மக்கள்.” – ஐ.நா வெளியிட்ட அதிர்ச்சி தகவல் !

சோமாலியாவில் 20 இலட்சத்துக்கும் மேற்பட்டோர் போதிய உணவு மற்றும் குடிநீரின்றி தவிப்பதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது. சோமாலியாவில் தொடர்ந்து நான்காவது பருவமாக, இந்த ஆண்டும் போதிய அளவுக்கு மழைவீழ்ச்சி கிடைக்கப்பெறவில்லை என அந்த நாட்டு அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.

அங்குள்ள நீர் நிலைகளில் அதிவேகமாக நீர் குறைந்து வறட்சி அதிகரித்து வருகிறது.

சுமார் ஒரு இலட்சம் பேர் உணவு, குடிநீர், தங்கள் கால்நடைகளுக்கான உணவு ஆகியவை இல்லாமல் இருப்பிடங்களை விட்டு வெளியேறி உள்ளனர்.

அடுத்த ஆண்டு, சுமார் 80 லட்சம் பேர் உணவுப் பற்றாக்குறை பிரச்சனையை எதிர்கொள்ளலாம் என ஐக்கிய நாடுகள் சபை எதிர்வு கூறியுள்ளது. சோமாலியாவில் கடந்த மூன்று தசாப்தங்களாக உள்நாட்டு யுத்தங்கள் இடம்பெற்று வருகின்றன.

அத்துடன் கடுமையான வறட்சி, வெள்ளம், பூச்சிகள் பயிரை அழிப்பது போன்ற பிரச்சனைகளையும் சோமாலிய மக்கள் எதிர்நோக்கியுள்ளனர்.