இலங்கை தமிழரசுக் கட்சி
இலங்கை தமிழரசுக் கட்சி
யார் அங்கே ? மாவை எங்கே ? அவர் உள்ளேயா ? வெளியேயா ? – பாவம் தமிழரசுக் கட்சி : சுமந்திரன் பீலிங்ஸ்
பாராளுமன்ற தேர்தலுக்கு பின் டிசம்பர் 14 இல் வவுனியாவில் கூடிய தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழு கூட்டத்தில் குழாய் அடிச்சண்டை. 10 மணிக்கு வர வேண்டிய பதவி விலகிய மாவை சேனாதிராஜா வரத் தாமதித்தே இந்த வாய்க்கால் சண்டைக்கு காரணம். பதவி விலகியவர் கூட்டத்தை தலைமைதாங்க முடியாது. தாமதியாமல் கூட்டத்தை தொடங்கும்படி செயலாளரை கிழக்கின் தமிழ்த்தேசியத் தலைவர் இரா சாணக்கியன் தூண்ட அதற்கு முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எதிர்ப்பு தெரிவித்தார். மாவைக்கு தொலைபேசி அழைப்பெடுத்து கூட்டத்திற்கு அழையுங்கள் என சிவமோகனும் இடையில் குறுக்கிட்ட சாணக்கியன் ” இது கோல் சென்ரர் அல்ல , கட்சி … ‘ உங்கள் வைத்தியசாலை இதுவல்ல என்று பதிலளித்தார் . இப்படியே உறுப்பினர்களிடையே வார்த்தைகள் தடிக்க சாணக்கியனுக்கு வக்காலத்திற்கு வந்த பீற்றர் இளஞ்செழியனும் சிரேஷ்ட உபதலைவர் தலைமையில் கூட்டத்தை நடத்துங்கள் அல்லது குழப்பவாதிகளை வெளியேற்ற வேண்டும் என உறுமினார் . இதற்கிடையில் விடாப்பிடியாக நின்ற சிவமோகனை நாற்காலி அருகில் சமாதானப்படுத்த முயன்ற சுமந்திரனின் இராஜதந்திரமும் தோற்றுப்போனது . வென்றது என்னவோ மாவை தான் . அடித்துப்பிடித்து ஒருவழியாக 10:45 கூட்டத்திற்கு வந்து சேர்ந்த மாவை குடுகுடு என்று ஓடிப்போய் முன்வரிசையில் தலைவர் இருக்கையில் இடத்தைப் பிடித்துக் கொண்டார் . இலங்கை தமிழரசுக்கட்சியின் தலைமைத்துவம் தொடர்பாக விவாதிக்க இக் கூட்டம் நடைபெற்றது . ஓக்டோபரில் மாவை பதவி விலகல் கடிதத்தைக் கையளித்தார் . அது தொடர்பில் கட்சி செயலாளர் விளக்கத்தை கேட்ட போது மாவை உடனடியாகப் பதில் வழங்கவில்லை . அதனைத் தொடர்ந்து செயலாளர் , மாவையின் பதவி விலகல் நடைமுறைக்கு வந்ததாக எடுத்துக்கொண்டு மேலதிக நடவடிக்கைகளை எடுப்பதாக அறிவித்தார். இதற்கிடையில் சிறிதரன் ஊடாக மாவை கையொப்பமிட்ட பதவி விலகலை மீளப்பெறும் கடிதமொன்று செயலாளரிடம் ஒப்படைத்திருந்தார் . மறுநாள் மாவையும் நேரடியாக குறிப்பிட்ட கடிதத்தை செயலாளருக்கு அனுப்பியிருந்தார் . இந்த இழுபறிக்குள் கட்சியின் அடுத்த மாநாடு வரைக்குமான எஞ்சிய காலப்பகுதிக்கு தமிழரசுக்கட்சியின் யாப்பின் பிரகாரம் சி.வி. கே . சிவஞானம் தலைவராக முன்மொழியப்பட்டு வழிமொழியப்பட்டார் . இதற்கு போட்டியாக மாவை பதவி விலகலை மீளப்பெற்றதால் அவர் தொடர்ந்தும் தலைவராக இருக்க வேண்டும் என முன்மொழியப்பட்டது , யார் தலைவர் ? என்ற கேள்விக்கு விவாதங்களுாடாக பதில் கிடைக்கவில்லை . அதனால் மாவையின் பதவிவிலகலை ஏற்றுக்கொண்ட தரப்பு இந்த விடயத்தை வாக்கெடுப்பிற்கு விட அழைப்பு விடுத்தது . எந்தவொரு முடிவும் எடுக்கப்படாத நிலையில் டிசம்பர் 28 இல் வாக்கெடுப்பிற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது .
இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் பாராளுமன்றக் குழு தலைவராக சிவஞானம் சிறிதரன் தெரிவுசெய்யப்பட்டார்.
இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் அரசியல் குழுக் கூட்டம் வவுனியா ஈரற்பெரியகுளத்தில் அமைந்துள்ள தனியார் விருந்தினர் விடுதியில் இன்று (17) காலை நடைபெற்றது. இதன்போது இத்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
இதேவேளை கட்சியின் பேச்சாளர் பதவி தொடர்பாக பாராளுமன்ற முதலாவது அமர்வின் பின்னர் தீர்மானிக்கப்படவுள்ளதாக சிறிதரன் இதன்போது தெரிவித்தார்.
தமிழரசுக் கட்சியின் தேசியபட்டியல் ஆசனத்தை வைத்தியர் ப.சத்தியலிங்கத்திற்கு வழங்க கட்சியின் அரசியற்குழு தீர்மானித்துள்ளதாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.எ.சுமந்திரன் தெரிவித்தார்.
நடைபெற்று முடிந்த பாராளுமன்றப் பொதுத் தேர்தலில், தங்கள் வாக்குகளால் எனக்கு ஆணை வழங்கிய யாழ்ப்பாணம், கிளிநொச்சி மாவட்ட மக்களுக்கு எனது மனப்பூர்வமான நன்றிகள். மக்கள் ஆணையை மனதார ஏற்று, எனது அறவழி அரசியற் பயணத்தை உறுதியோடு தொடர்வேன் என நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார்.
பொதுத் தேர்தலில் வெற்றிபெற்றதன் பின்னர், இன்றைய தினம் ஊடகங்களுக்கு அனுப்பிவைத்துள்ள அவரது செய்திக் குறிப்பில் மேலும் உள்ளதாவது, கடந்த 15 வருடகால அரசியற் பயணத்தில் என் ஆத்ம பலமாகவும், அரசியற் பலமாகவும் தம் உடனிருப்பை வழங்கி, கொள்கையின்பாற்பட்ட பயணத்தின் பங்குதாரர்களாக இருந்த உங்கள் ஒவ்வொருவரது கரங்களையும் நன்றியோடு பற்றிக்கொள்கிறேன்.
திட்டமிட்டு பின்னப்பட்ட சதிவலைகளின் உள்ளிருந்தவாறே, தமிழ்த்தேசியத்தின் இருப்புக்காய் போராடத் தலைப்பட்ட என்னையும், எனது பாதையையும் எமது மக்கள் ஏற்றுக் கொண்டுள்ளார்கள் என்ற நிறைவே, எனது அரசியற் பணியையும் பயணத்தையும் இன்னும் வலுவூட்டும்.
என்னுள் நானாக இருந்து என்னை இயக்கும் எங்கள் தேசத்தில் விதையுண்ட ஆத்மாக்களின் அரூப பலத்தோடு, என் மக்களுக்கான தமிழ்த்தேசியப் பயணத்தை தடையற்றுத் தொடர்வேன்.
நிலையிழக்க வைத்த அலைகளின் நடுவே தமிழ்த்தேசியக் கொள்கைக்கு கிடைத்த இந்த வெற்றி கார்த்திகையின் கனதியை உறுதி செய்யட்டும் – என்றுள்ளது.
தமிழரசுக் கட்சியில் இருந்து வெளியேறியோர் அனைவருமே கொள்கைகளுக்காக வெளியேறவில்லை – சுய நலன் அடிப்படையிலும் ஆசனங்களுக்காகவும் சண்டையிட்டே வெளியேறினர் – பொன் சிவசுப்பிரமணியம்
வன்னி மாவட்டத்தில் நாடாளுமன்றத் தேர்தலுக்கான வேட்புமனுவினை தமிழரசுக்கட்சி தாக்கல் செய்துள்ளது.
வவுனியா மாவட்ட செயலகத்தில் அமைந்துள்ள தேர்தல் காரியாலத்தில் இன்று (10) மாலை வேட்புமனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
எதிர்வரும் நவம்பர் மாதம் இடம்பெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் வடக்கு மற்றும் கிழக்கில் தமிழரசுக்கட்சி வீட்டு சின்னத்தில் போட்டியிடுகின்றது.
வன்னி மாவட்டத்தில் தமிழரசுக்கட்சி சார்பாக வவுனியாவில், வைத்தியர் ப.சத்தியலிங்கம், ஆசிரியர் கா. திருமகன், சமூக செயற்ப்பாட்டாளர் தே.சிவானந்தராசா, அபிவிருத்தி உத்தியோகத்தர் பா.கலைதேவன் ஆகியோர் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்தோடு, முல்லைத்தீவு மாவட்டத்தில் முன்னாள் மாகாணசபை உறுப்பினர், து.ரவிகரன், விரிவுரையாளர் ந.ரவீந்திரகுமார், ஓய்வுநிலை தொழில்நுட்ப உத்தியோகத்தர் வ.கமலேஸ்வரன் ஆகியோரின் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது.
மன்னார் மாவட்டத்தில் சட்டத்தரணி செ.டினேசன் மற்றும் சட்டத்துறை மாணவி அ. டலிமா ஹலிஸ்ரா ஆகியோர் வேட்பாளர்களாக பெயர் குறிப்பிடப்பட்டுள்ளனர்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் இலங்கை தமிழரசு கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் தலைமையில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து சிறினேசன், மட்டு மாநகரசபை முன்னாள் முதல்வர் தியாகராசா சரவணபவன், ஏறாவூர் பற்று முன்னாள் தவிசாளர் சின்னத்துரை சர்வானந்தன், வைத்தியர் இளையதம்பி ஸ்ரீநாத், இளைஞர் அணித் தலைவர் கிருஸ்னபிள்ளை செயோன், அருணாச்சலம் கருணாகரன், ஜெயந்தி ரவிச்சந்திரன் உட்பட எட்டு பேர் வேட்பாளராக களமிறங்குகின்றனர்.
அத்தோடு, யாழ். மாவட்டத்தில் சிவஞானம் சிறீதரன் தலைமையில் இலங்கைத் தமிழரசுக் கட்சி வேட்பு மனுக்களை கையளித்திருந்தது.
இதேவேளை கடந்த வாரம் தமிழ் மக்கள் முன்னணியின் சார்பில் வன்னி தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடுகிறார் என பெயர் குறிப்பிடப்பட்டு பதாகைகள் வெளியிடப்பட்டிருந்த சட்டத்துறை மாணவி அ. டலிமா ஹலிஸ்ரா என்பவர் இன்று தமிழரசுக்கட்சி சார்பாக வன்னி தேர்தல் மாவட்டத்தில் வேட்பு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளமை தொடர்பில் பலரும் அதிருப்தி வெளியிட்டு வருவதையும் அவதானிக்க முடிகிறது. தமிழரசுக்கட்சி சார்பாக பல ஆண்டுகளாக சமூக மட்டத்தில் இயங்கி வரும் பலருக்கு அந்த வாய்ப்பு கொடுக்கப்படாமல் வேறு கட்சியில் இருந்து திடீரென தமிழரசுக் கட்சுக்குள் வந்தவருக்கு இந்த வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளதாக சமூக வலைத்தளங்களில் பலரும் அதிருப்தி வெளியிட்டு வருகின்றனர்.
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ஐக்கிய மக்கள் கூட்டணியின் வேட்பாளர் சஜித் பிரேமதாசவை ஆதரிப்பதென்ற எமது கட்சியின் மத்திய குழுத் தீர்மானத்திற்கு அமைவாக வாக்காளர்கள் உரியவாறு தங்கள் வாக்கை அவருக்கு வழங்க வேண்டும் என தமிழரசுக்கட்சி அறிக்கை வெளியிட்டுள்ளது.
வவுனியாவிலுள்ள தமிழரசுக்கட்சியின் அலுவலகத்தில் இன்று இடம்பெற்ற ஜனாதிபதித்தேர்தல் தொடர்பான தீர்மானம்மிக்க உயர்மட்ட கலந்துரையாடலையடுத்தே குறித்த அறிக்கை வெளியிடப்பட்டது.
குறித்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது” இலங்கையில் எதிர்வரும் 21 ஆம் திகதி ஜனாதிபதித் தேர்தல் நடைபெறவிருக்கின்றது.
இத்தேர்தலில் மூன்று பிரதான வேட்பாளர்களின் தேர்தல் விஞ்ஞாபனங்கள் பரிசீலிக்கப்பட்டன. இத்தேர்தல் விஞ்ஞாபனங்களில் குறிப்பாக தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வு மற்றும் தமிழ் மக்களின் பிரதேசங்களின் பொருளாதார மேம்பாடு பற்றி கவனம் செலுத்தப்பட்டது.
இவ்விஞ்ஞாபனங்களில் புதிய அரசியலமைப்பு உருவாக்குதலும் ஏற்கனவே அரசியலமைப்பில் உள்ள பதின்மூன்றாவது அரசியலமைப்புத் திருத்தத்தை முழுமையாக அமுலாக்குவதும் ஆகும். ஒற்றையாட்சி மற்றும் புத்த மதத்திற்கு முன்னுரிமை வழங்கப்பட்டுள்ளமை ஏற்றுக்கொள்ள முடியாதவொன்றாகும்.
அதற்குப் பதிலாக இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வாக தமிழ் மக்களுக்கான சுயநிர்ணய உரிமை அடிப்படையில் சமஷ்டிக் கட்டமைப்பின் மூலம் தீர்வு காணப்படுதல் வேண்டும் என்பது பிரதானமாகும்.
முக்கியமாக இவ்விடயங்களில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, ஐக்கிய மக்கள் கூட்டணி தலைவர் சஜித் பிரேமதாச, ஜேவிபீ தலைவர் அநுர குமார திசாநாயக ஆகியோருடன் நேரடியாக பேச்சுக்கள் இடம்பெற்றன.
தமிழ் அரசியல் தலைமைகள் தமிழ்ப் பேசும் மக்களின் தேசிய இனப் பிரச்சினைக்கு தீர்வு காணும் பொருட்டு இணைப்பாட்சி அடிப்படையிலான சமஷ்டிக் கட்டமைப்பில் முழுமையான தன்னாட்சி சம்பந்தமாக தொடர்ந்து போராடி வந்துள்ளோம். ஜனாதிபதித் தேர்தல் முடிந்ததும், புதிய அரசியலமைப்பு உருவாக்கத்தின் பொருட்டு தமிழ்த் தேசிய இனத்தின் அரசியல் தீர்வுக்கான பிரேரணை முன்வைக்கப்படுதல் வேண்டும்.
தமிழ்ப் பேசும் மக்கள் என்ற வகையில் முஸ்லீம் சமூகத்துடனும் மலையக தமிழர்களுடன் இணைந்து செயற்படுதல் வேண்டும்.
13ஆவது அரசியல் திருத்தம் அரசியலமைப்பின் ஒற்றையாட்சிக்குட்பட்டது. இதனை அரசியல் தீர்வாக எம்மால் ஏற்றுக்கொள்ளப்படவில்லை என்பதைக் குறிப்பிட வேண்டும். இருப்பினும் தமிழினத்தின் பிரச்சினைக்கு நிரந்தர அரசியல் தீர்வொன்றை அடையும் வரை இந்திய அரசின் நட்புறவுடன் 13ஆவது திருத்தச் சட்டத்தின் மூலம் நடைமுறையிலிருக்கும் மாகாண அரசியலமைப்பை முழுமையாக நடைமுறைப்படுத்த நாம் முழு ஒத்துழைப்பையும் வழங்க வேண்டும்.
2002 டிசம்பரில் ஏற்பட்ட ஒஸ்லோ உடன்பாட்டில் சில அடிப்படைக் கோட்பாடுகளின் மீது இணக்கம் காணப்பட்டது. அக்கோட்பாடு பின்வருமாறு அமைந்தது. இந்த வரலாற்று நிகழ்வு இன்றும் பரிசீலனைக்குரியது. ‘ஒன்றுபட்ட இலங்கைக்குள் தமிழ்பேசும் மக்களின் வரலாற்று ரீதியான வாழ்விடப்பகுதிகளில் உள்ளக சுயநிர்ணய கொள்கையின் பிரகாரம் சமஷ்டிக் கட்டமைப்பின் அடிப்படையிலமைந்த தீர்வொன்றை ஆராய்தல் என்பதாகும்.
சர்வதேச நியமங்களின் படியும், சர்வதேச சாசனங்களின் படியும் தமிழர்களாகிய நாங்கள் தனிச்சிறப்புமிக்க மக்கள் குழாமாவோம்.
ஒருமக்கள் குழாமான நாங்கள் பேரினவாதத்தின் பிடிக்கு ஆட்படாது கெளரவத்துடனும் சுயமரியாதையுடனும்,
சுதந்திரமாகவும், அச்சமின்றியும் நாட்டின் ஏனைய மக்களுடன் சமத்துவமுள்ள மக்களாக வாழ விரும்புகிறோம்.
2015 இல் இலங்கை வந்த பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் மார்ச் 13இல் இலங்கையில் பாராளுமன்றத்தில் உரையாற்றிய போது பின்வருமாறு கூறினார். ‘எமது சமூகத்திலுள்ள அனைத்துப் பாகங்களின் அபிலாசைகளுக்கு நாம் மதிப்பளிக்கும் போது எம்நாட்டின் ஒவ்வொரு பிரஜையின் சக்திகளையும் எமதுநாடு உள்வாங்கிக் கொள்ளும். மாநிலங்கள், மாவட்டங்கள் மற்றும் கிராமங்களை இவ்வாறு வலுவூட்டும் பொழுது நாடு மென்மேலும் மேம்படும் கூட்டுச் சமஷ்டியில் நான் திடமான நம்பிக்கை கொண்டவன்’ என்பதையும் குறிப்பிட்டார்.
‘இறையாண்மை என்பது மக்களிடமே உண்டு அரசிடம் அல்ல என்பதை நாம் வலியுறுத்துகிறோம். ‘ஜனாதிபதித் தேர்தல் முடிந்தபின் எங்களால் சமர்ப்பிக்கப்படும் அரசியலமைப்புக்கான அறிக்கையில் குறிப்பிடப்படும் தமிழ்த்தேசிய இனத்திற்கான அரசியல் தீர்வை அடைவதற்கும், தமிழ் மக்கள் எதிர்நோக்கியுள்ள நெருக்கடிகளுக்கும் தீர்வுகாண வெற்றிபெறும் ஜனாதிபதியுடனும் அரசுடனும் வேண்டிய பொருத்தமான நடவடிக்கைகளை எடுப்போம்.’ தமிழ்த்தேச மக்கள் அரசியல் தீர்வைத் தீர்மானிப்பதிலும் அந்த இலட்சியத்தை அடைவதற்கும் இடர்களோ முரண்பாடுகளோ ஏற்படாமல் நல்லெண்ணத்துடன், ஒற்றுமை உணர்வுடன் தேர்தலின் போதும், எதிர்காலத்திலும் ஒன்றாக நின்று உழைப்போம் என திடமான தீர்மானத்தைக் கொண்டிருக்கிறோம்.’
இந்த நோக்கத்தை நாடளாவிய ரீதியில் செயல்படுத்துவதற்கென நாம் கடந்த காலத்தில் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தல்களில் எமது பெரும் பங்களிப்பை வழங்கி இருந்தோம். ஆனால் பெரும் ஏமாற்றங்களும், வெறுப்பும், வேதனைகளுமே எஞ்சியுள்ளன. இப்போதைய ஜனாதிபதி தேர்தல் தொடர்பாக எம்மால் பரிசீலிக்கப்பட்ட மூன்று பிரதான வேட்பாளர்களின் தேர்தல் விஞ்ஞாபனங்கள் எதுவும் எமது அடிப்படை அரசியல் கோரிக்கைகளை முழுமையாக உள்ளடக்கவில்லை என்பதைக் கருத்தில் கொள்கிறோம். இந்த விஞ்ஞாபனங்களின் அடிப்படையில் எமது தாயகம், தேசியம், தன்னாட்சி, சுயநிர்ணயம் என்ற எமது அடிப்படைக் கோட்பாடுகளில் எந்தவித விட்டுக்கொடுப்பும் இல்லாத வகையில் ஐக்கிய மக்கள் கூட்டணி வேட்பாளர் சஜித் பிரேமதாசவின் விஞ்ஞாபனம் ஒப்பீட்டு ரீதியில் ஓரளவு திருப்தியாகக் காணப்படுகின்றது.
எனவே, 2024 செப்டெம்பர் 21 ஆம் திகதி நடைபெற உள்ள ஜனாதிபதித் தேர்தலின் வாக்களிப்பின் போது ஐக்கிய மக்கள் கூட்டணியின் வேட்பாளர் சஜித் பிரேமதாச அவர்களை ஆதரிப்பதென்ற எமது கட்சியின் மத்திய குழுத் தீர்மானத்திற்கு அமைவாக வாக்காளர்கள் உரியவாறு தங்கள் வாக்கை அவருக்கு வழங்க வேண்டும் என அன்புடன் கோருகின்றோம் ” எனக் குறித்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேவேளை இன்றையதினம் கலந்துகொண்ட ஆறு உறுப்பினர்களில் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் மாத்திரம் குறித்த தீர்மானத்திற்கு இணக்கப்பாடு தெரிவிக்காதநிலையில் ஏனைய ஐவரும் தமது இணக்கப்பாட்டினை தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
ஜனாதிபதி தேர்தலில் இலங்கை தமிழரசுக் கட்சி சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவு வழங்க தீர்மானித்துள்ளமை தொடர்பில் தனக்கு எதுவும் தெரியாது என தமிழரசுக் கட்சியின் தலைவரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
இலங்கை தமிழரசுக் கட்சியானது எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் சஜித் பிரேமதாசவிற்கு ஆதரவு வழங்கவுள்ளதாக இன்று இடம்பெற்ற கட்சியின் மத்திய குழு கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அக் கட்சியின் ஊடக பேச்சாளர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்தார்.
இந்நிலையில் குறித்த தீர்மானம் தொடர்பில் அக்கட்சியின் தலைவர் மாவை.சேனாதிராஜா கொழும்பு ஊடகமொன்றுக்கு கருத்து தெரிவிக்கையில்,
ஐக்கிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசாவுக்கு இலங்கை தமிழரசுக் கட்சியானது ஆதரவளிக்க தீர்மானித்துள்ளமை தொடர்பில் தனக்கு எதுவும் தெரியாது.
குறித்த தீர்மானம் தொடர்பில் இதுவரை தனக்கு உத்தியோகபூர்வமான அறிவிப்புக்கள் எதுவும் கிடைக்கவில்லை எனவும் இதனை தமிழரசுக்கட்சியின் உத்தியோகபூர்வமான அறிவிப்பு என்று ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் திட்டவட்டமாக அறிவித்தார்.
அதேவேளை,இது ஒரு சிலரின் தனிப்பட்ட முடிவு எனவும் மாவை.சேனாதிராஜா தெரிவித்தார்.
இன்றையதினம் இடம்பெற்ற மத்திய குழு கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் சி. சிறீதரன், சார்லஸ் நிர்மலநாதன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் யோகேஸ்வரன் மற்றும் ஸ்ரீநேசன் ஆகியோரும் கலந்துகொள்ளவில்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது.
இந்தநிலையில் ஜனாதிபதி தேர்தலில் இலங்கை தமிழரசு கட்சி சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவு தெரிவிப்பதாக அறிவித்தற்கு சஜித் பிரேமதாச தனது நன்றியை தன்னுடையX தளப்பதிவில் தெரிவித்துள்ளார்.
இலங்கை தமிழரசு கட்சி, ஜனாதிபதி தேர்தலில் எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவிற்கு ஆதரவளிக்க தீர்மானித்துள்ளது.
அந்த கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் இன்று வவுனியாவில் நடைபெற்றது.
இதன்போது இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாகக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர். எம். ஏ. சுமந்திரன் தெரிவித்தார்.
அத்துடன் தமிழ் பொது வேட்பாளர் பா.அரியநேத்திரனுக்கு ஆதரவளிப்பதில்லை எனவும் அவரை போட்டியிலிருந்து விலகுமாறு கோருவதற்கும் இதன்போது தீர்மானிக்கப்பட்டதாகவும் எம்.ஏ.சுமந்திரன் குறிப்பிட்டார்.








