அமைச்சர் விஜித ஹேரத்

அமைச்சர் விஜித ஹேரத்

புதிய அரசமைப்பை உருவாக்குவதன் மூலம் தமிழ் மக்களின் அரசியல் பிரச்சினைக்குத் தீர்வு வழங்கப்படும் – அமைச்சர் விஜித ஹேரத்

புதிய நாடாளுமன்றத்தில் புதிய அரசமைப்பை உருவாக்குவதன் மூலம் தமிழ் மக்களின் அரசியல் பிரச்சினைக்குத் தீர்வு வழங்கப்படும் என அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்தார்.

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான அரசின் முதலாவது அமைச்சரவைக் கூட்டத்தில் எட்டப்பட்ட முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பு நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இதன்போது, செய்தியாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கையிலேயே அமைச்சர் விஜித ஹேரத் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

நடைபெற்று முடிந்த ஜனாதிபதித் தேர்தல் மூலம் புதிய ஜனாதிபதி நியமிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், அரசை அமைப்பதற்காக நாடாளுமன்றத் தேர்தல் நடத்தப்படவுள்ளது.

நாடாளுமன்றத் தேர்தலின் ஊடாகவே அரசு அமைக்கப்படும்.

எம்முடைய விஞ்ஞாபனத்துக்கு அமைய இனப்பிரச்சினைக்குத் தீர்வை வழங்க புதிய அரசமைப்பு உருவாக்கப்படும்.

அவ்வாறு உருவாக்கப்படும் அரசமைப்பு நாட்டு மக்களிடம் வழங்கப்பட்டு அவர்களின் கருத்துக்களுடன் கூடிய கொள்கை மற்றும் வேலைத்திட்டம் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படும்.

புதிய அரசு ஆட்சி அமைத்தமையைத் தொடர்ந்து அதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும். – என்றார்.

அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் எவரும் பொலிஸ் உயர் அதிகாரிகளை நேரடியாக தொடர்பு கொள்ள முடியாது – அமைச்சர் விஜித ஹேரத்

அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் எவரும் பொலிஸ் உயர் அதிகாரிகளை தொடர்புகொள்ளும் நடைமுறைகளில் மாற்றங்கள் ஏற்படுத்தப்படும் என அமைச்சர் விஜித ஹேரத் தொிவித்துள்ளாா்.

அமைச்சுப் பொறுப்புக்களைக் கையேற்ற பின்னா் ஊடகங்களுக்கு இவ்வாறு குறிப்பிட்டாா். இவ்விடயம் தொடா்பாக அவா் மேலும் தொிவிக்கையில்,

சட்டம் ஒழுங்கைப் பேணுவதற்கும் பொலிஸார் மீது நம்பிக்கையை ஏற்படுத்துவதற்கும் துரித நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

பொலிஸார் அரசியல் தலையீடுகள் இன்றி சுதந்திரமாக செயற்படுவதற்கான சூழல் உடனடியாக உருவாக்கப்படும்.

கடவுச்சீட்டினை வழங்குவதே இந்த அமைச்சு எதிர்கொண்டுள்ள முக்கியமான பிரச்சினையாகும். கடவுச்சீட்டு விவகாரத்திற்கு தீர்வை காண்பதற்கு உடனடி நடவடிக்கை எடுக்கப்படும்.

கடவுச்சீட்டிற்காக மக்கள் நீண்டவரிசையில் காத்திருக்கவேண்டிய நிலைக்கு முடிவு காண்பதற்கான நடவடிக்கைகள் இடம்பெறுகின்றன.

ஒக்டோபர் 15 முதல் 20 திகதிக்குள் புதிய கடவுச்சீட்டு முறை அறிமுகப்படுத்தப்படும்,அந்த காலத்திற்குள் இந்த விடயத்திற்கு தீர்வை காண விரும்புகின்றேன்,

பொலிஸார் மீதான பொதுமக்கள் நம்பிக்கை குறைவடைந்துள்ளதை ஏற்றுக்கொள்கின்றேன். அந்த நம்பிக்கையை மீள கட்டியெழுப்ப வேண்டியதன் அவசியம் காணப்படுகின்றது.

சட்டமொழுங்கை நடைமுறைப்படுத்தும்போது செய்த தவறுகளை சிரேஸ்ட பொலிஸ் அதிகாரிகள் திருத்திக்கொள்ளவேண்டும்.

சட்டமொழுங்கை நடைமுறைப்படுத்துவதில் பொலிஸாருக்கு முழுமையான சுதந்திரத்தை வழங்குவேன். எந்த அரசியல் தலையீடும் இருக்ககூடாது.

அரசாங்க அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் எவரும் பொலிஸ் உயர் அதிகாரிகளை தொடர்புகொள்ள மாட்டார்கள்.

இவ்வாறானதொரு மாற்றத்தை எதிர்பார்த்தே இந்நாட்டு மக்கள் தேசிய மக்கள் சக்திக்கு அதிகாரத்தை வழங்கினார்கள்” என மேலும் தொிவித்தாா்.

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தில் பொலிஸ் திணைக்கள விடயங்களில் அரசு தலையிடாது – அமைச்சர் விஜித ஹேரத்

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் கீழ் பொலிஸ் திணைக்களத்தில் அரசியல் தலையீடுகள் இருக்காது என இலங்கையின் புதிதாக நியமிக்கப்பட்டுள்ள பொது பாதுகாப்பு அமைச்சர் விஜித ஹேரத் உறுதியளித்துள்ளார்.

 

கடந்த காலங்களில் பொலிஸாரின் மீதான மக்களின் நம்பிக்கை குன்றியுள்ளதை ஏற்றுக்கொண்ட அமைச்சர், மக்களின் நம்பிக்கையை மீளக் கட்டியெழுப்புவதற்கு புதிய அரசாங்கம் பொறுப்பேற்றுள்ளதாக தெரிவித்தார்.

 

அமைச்சர் மற்றும் அமைச்சின் செயலாளர் என்ற ரீதியில் பொலிஸாரின் மீதான நம்பிக்கையை மீட்டெடுப்பது எமது கடமையாகும்.

 

இந்த முயற்சியில் காவல்துறை துணைக் கண்காணிப்பாளர்களும் பெரும் பொறுப்பு வகிக்கின்றனர்.

 

குறுகிய காலத்தில் மக்களின் நம்பிக்கையை மீட்டெடுக்க முடியாது, அரசியல் செல்வாக்கு இன்றி பொலிஸ் திணைக்களம் தனது கடமைகளை நிறைவேற்றுவதற்கு அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயற்படும் என்றும் வலியுறுத்தினார்.