அமைச்சர் விஜித ஹேரத்

அமைச்சர் விஜித ஹேரத்

அச்சமூட்டும் டிரம்பின் வரிக்கொள்கை – அமெரிக்கா பயணமாகிறார் அமைச்சர் விஜித ஹேரத் !

அச்சமூட்டும் டிரம்பின் வரிக்கொள்கை – அமெரிக்கா பயணமாகிறார் அமைச்சர் விஜித ஹேரத் !

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், தனது இரண்டாவது பதவிக் காலத்தின் முதல் உரையில், காங்கிரஸின் இணைக் கூட்டத்தில் தனது கடுமையான வரிக் கொள்கைகளை வெளியிட்டிருந்ததுடன் , அமெரிக்கா நீண்ட காலமாக பல நாடுகளிடமிருந்து அதிக வரிகளை எதிர்கொண்டுள்ளது என்பதை எடுத்துக்காட்டினார். ஏப்ரல் 2 முதல் கனடா, மெக்ஸிகோ, சீனா மற்றும் இந்தியா உள்ளிட்ட பல நாடுகள் மீது தனது நிர்வாகம் வரிகளை விதிக்கும் என்று அவர் அறிவித்திருந்தார்.

கடந்த ஆண்டு, அமெரிக்கா இலங்கையிலிருந்து 3 பில்லியன் அமெரிக்க டொலர் மதிப்புள்ள பொருட்களை இறக்குமதி செய்தது, ஆடைத் துறையின் 70% க்கும் அதிகமான பொருட்கள் அமெரிக்காவிற்குச் சென்றன, இதனால் அந்த நாடு இலங்கையின் மிகப்பெரிய வர்த்தக பங்காளிகளில் ஒன்றாக மாறியிருந்த நிலையில் ட்ரம்பின் அறிவிப்பு இலங்கை பொருளாதாரத்தில் கணிசமான தாக்கத்தை ஏற்படுத்தலாம் என கூறப்படுகின்றது. இலங்கை அமெரிக்காவிலிருந்து 330 மில்லியன் டொலர்கள் பெறுமதியான பொருட்களை இறக்குமதி செய்கின்றது.

அமெரிக்கா இலங்கைக்கான நேரடியான வரிக்கொள்கையை அறிவிக்காவிட்டாலும் ஏனைய நாடுகளுக்கு விதிக்கப்பட்ட இறக்குமதி வரி அதிகரிப்பு இலங்கையிலும் கணிசமான தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இந்நிலையில், 2025 ஏப்ரல் 02 முதல் நடைமுறைக்கு வரும் வரிகள் குறித்து அமெரிக்க வர்த்தக அலுவலகத்துடன் கலந்துரையாடுவதற்காக இலங்கை தூதுக்குழு அடுத்த மாதம் அமெரிக்காவிற்கு விஜயம் செய்யும் என்று வெளியுறவு அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

நாட்டின் பொருளாதார நிலைமை ஸ்திரமின்றி இருப்பதால், ஏற்றுமதிகள் மீதான இத்தகைய வரிகளை இலங்கையால் தாங்க முடியாது என்று அமைச்சர் ஹேரத் சுட்டிக்காட்டியதுடன், சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) திட்டத்திற்குள் செயல்படும் இலங்கைக்கு, அதிகரித்த கட்டணங்களைத் தாங்க முடியாததால், வரிச் சலுகை கிடைக்கும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

உள்நாட்டு பொறிமுறைகளை அரசியலமைப்பிற்குள் கொண்டுவந்து தீர்வு எட்டப்படும் – ஜெனீவாவில் அமைச்சர் விஜித ஹேரத் !

உள்நாட்டு பொறிமுறைகளை அரசியலமைப்பிற்குள் கொண்டுவந்து தீர்வு எட்டப்படும் – ஜெனீவாவில் அமைச்சர் விஜித ஹேரத் !

காணாமல் போனோர் அலுவலகம், இழப்பீட்டு அலுவலகம் மற்றும் தேசிய ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்திற்கான அலுவலகம் போன்ற உள்நாட்டு நிறுவனங்கள் பலப்படுத்தப்படும் என வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் ஜெனீவாவில் நேற்று முன்தினம் நடைபெற்ற ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 58ஆவது அமர்வில் தெரிவித்துள்ளார்.

இம்மாநாட்டில் இம்முறை தமிழ் தரப்புகளின் மனித உரிமைத் தளம் மிகப் பலவீனப்பட்டுப் போயுள்ளது. தமிழ் மனித உரிமைச் செயற்பாட்டாளர்களே நீண்டகாலமாக மனித உரிமைக்காகச் செயற்பட்டு வந்த மரியதாஸ் பொஸ்கோவைக் காட்டிக்கொடுத்து விட்டனர் என்ற குற்றச்சாட்டு பலமாகியுள்ளது. மரியதாஸ் பொஸ்கோ ஜனவரி 16 இல் இடம்பெற்ற கூட்டத்தொடரில் வைத்து சட்டவிரோதமாகக் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.

கடந்த திங்கட்கிழமை ஜெனிவாவின் மனித உரிமைக் கூட்டத்தொடர் ஆரம்பமானபோது மனித உரிமை ஆணையாளர் வோல்கர் டேக் தனது ஆரம்ப உரையில் இலங்கை பற்றி எதனையும் குறிப்பிடவில்லை. மேலும் அமைச்சர் விஜித ஹெரத் தன்னுடைய உரை முடிந்து வெளியே வந்த போது தமிழ் மனித உரிமைச் செயற்பாட்டாளர்கள் சிலர் அவரோடு உரையாட முற்பட்டனர். அது தொடர்பில் தமிழ் மனித உரிமைச்செயற்பாட்டாளர் கூறியது:

அமைச்சர் விஜித ஹேரத் தனது உரையில், தற்போதைய பாராளுமன்றமானது, இலங்கை வரலாற்றில் இரண்டு மலையக சமூகத்தைச் சேர்ந்த பெண்கள் மற்றும் ஒரு பார்வைக் குறைபாடுள்ள நபர் ஆகியோரைக் கொண்டதும், அனைத்து தரப்பினரையும் பிரதிநித்துவப்படுத்துவதுமான ஒன்றாகவுள்ளது.

2025 ஆம் ஆண்டுக்கான தேசிய பாதீட்டில், சமூக நலன் மற்றும் பாதுகாப்பிற்கான அதிகரித்த ஒதுக்கீடு உட்பட மக்களுக்கு மிகவும் தேவையான நிவாரணங்களை வழங்குவதற்கான, தொடர் நடவடிக்கைகளுக்கு உறுதியளித்துள்ளோம். வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் சமூக-பொருளாதார நிலைமைகளை மேம்படுத்துவதற்கும், மீள்குடியேற்றம், வீடளித்தல், இழப்பீடு மற்றும் உட்கட்டமைப்பு மேம்பாடு போன்ற முக்கியமான தேவைகளை நிவர்த்தி செய்வதற்குமான சிறப்பு கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

ஜனவரி முதலாம் திகதி ஜனாதிபதியால் தொடங்கப்பட்ட, “தூய்மையான இலங்கை” திட்டத்தின் மூலம், அரசாங்கம் ஒரு புதிய அரசியல் கலாசாரத்தையும் தார்மீக மற்றும் நெறிமுறை நிர்வாகத்திற்கான அர்ப்பணிப்பையும் அறிமுகப்படுத்தியுள்ளது. எசமூகங்களுக்கு இடையிலான இடைவெளிகளைக் குறைப்பதற்கான எமது, தொலைநோக்குக்கு ஏற்ப, இலங்கை தினத்தை அறிவிக்க ஜனாதிபதி முன்மொழிந்துள்ளார்.

முரண்பாடுகள் தவிர்த்த, ஏனைய எஞ்சியுள்ள சவால்களை எதிர்கொள்ள நிறுவப்பட்ட உள்நாட்டு செயன்முறைகள் சுயாதீனமான மற்றும் நம்பகமான முறையில் தங்கள் பணிகளைத் தொடரும் என்பதை நாம் உறுதி செய்வோம். காணாமல் போனோர் அலுவலகம், இழப்பீட்டு அலுவலகம் மற்றும் தேசிய ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்திற்கான அலுவலகம் போன்ற உள்நாட்டு நிறுவனங்கள் மேலும் பலப்படுத்தப்படும். அனைத்து இலங்கையர்களின் நம்பிக்கையையும் பெறும் செயன்முறையொன்றை உறுதி செய்வதற்காக, உண்மை மற்றும் நல்லிணக்கக் கட்டமைப்பின் வரையறைகள், பங்குதாரர்களின் சாத்தியமான மிகப்பரந்த பிரிவினருடன் மேலும் விவாதிக்கப்படும்.

உள்நாட்டு பொறிமுறைகளை அரசியலமைப்பு கட்டமைப்பிற்குள் நம்பகமானதாகவும், உறுதியானதாகவும் மாற்றுவதே எமது நோக்கமாகும். இலங்கை சமூகத்திற்குள் பதட்டங்களை ஏற்படுத்தும் வன்முறைச் செயற்பாடுகளை விசாரிக்க உண்மை மற்றும் நல்லிணக்க ஆணையத்திற்கு அதிகாரம் அளிக்கப்படும் என்றார் அமைச்சர் விஜித ஹேரத்.

முஸ்லீம் அமைச்சர் ஒருவர் இல்லை என்று அதைப் பிடித்துக்கொண்டு தொங்காதீர்கள். – விஜித ஹேரத்

அமைச்சர் விஜித ஹேரத்துக்கும் அக்குரணை பிரதேச முஸ்லிம் மக்களுக்கும் இடையிலான சந்திப்பொன்று நேற்று (22) இடம்பெற்றது.

அங்கு கருத்து வௌியிட்ட அமைச்சர் விஜித ஹேரத், முஸ்லிம் மக்களுக்கு அநீதி இழைக்க இடமளிக்கப்பட மாட்டாது என தெரிவித்தார்.

நாங்கள் ஜாதி அடிப்படையில் அமைச்சரவை அமைச்சு ஒன்றை கேட்கவில்லை எனவும் தங்களது பிரச்சினையை அமைச்சரவையில் தெரிவிக்கும் போது அதை புரிந்துகொள்ள அங்கு யாரும் இருக்க மாட்டார்களே என முஸ்லிம் சமூகத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் ஒருவர் இதன்போது அமைச்சரிடம் கேள்வி எழுப்பினார்.

 

அதற்கு அமைச்சர் பதிலளிக்கையில்… “அப்படி கேட்காதீர்கள், அது தவறு…2004இல் நான் அமைச்சரவை அமைச்சர். இஸ்லாமிய மகளிர் அணியும் ஹிஜாப்பிற்காக துணி வழங்க வேண்டுமென அமைச்சரவையில் யோசனை முன் வைத்தேன். அதை முஸ்லிம் அமைச்சர்கள் செய்யவில்லை, நான்தான் செய்தேன்”

“நாம் அப்படி இல்லை. இவற்றை செய்தவதற்கு முஸ்லிம் அமைச்சர் தேவை இல்லை. மறுபுறம் உங்களுடன் பேசுவதற்கு அம்பாறையில் இருந்து எங்களுக்கு ஒரு முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர் கூட வரவில்லை. ஆனால் ஆதம் பாவாவை தேசிய பட்டியலிலிருந்து நியமித்தோம். மேல் மாகாண ஆளுநராக முஸ்லிம் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார். அமைச்சர் இல்லை என்று அதைப் பிடித்துக்கொண்டு தொங்காதீர்கள். தேவையான இடங்களில் தேவையானவர்களை நியமித்துள்ளோம்” என்றார்.

வேண்டாத மனைவி கை பட்டாலும் குற்றம் கால் பட்டாலும் குற்றம் என்பது போல நடைபெற்று முடிந்த பொது தேர்தலில் மண் கவ்விய தமிழ்தேசிய பரப்பில் உள்ள அரசியல்வாதிகள் முஸ்லிம் அமைச்சர் ஒருவர் இல்லை இது ஓர் இனவாத அரசு என பேசுவது நாட்டை முன்னேற்ற நினைக்கும் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்திற்கு முட்டுக்கட்டை போடுவது போல ஓர் செயல் என மூத்த அரசியல் ஆய்வாளர் சிவலிங்கம் தேசம் நெற்க்கு தெரிவித்தார். இதேநேரம் தேசிய மக்கள் சக்தி மீது முன்வைக்கப்பட்ட முஸ்லீம் அமைச்சர் ஒருவர் இல்லையே என்ற சமூக வலைத்தளவாசிகளின் கருத்துக்கு அக்குரணை பிரதேச முஸ்லிம் மக்களுடனான சந்திப்பில் அமைச்சர் விஜித ஹேரத் பதிலளித்துள்ளார். அங்கு பேசிய அவர் , முஸ்லீம் அமைச்சர் ஒருவர் இல்லை என்று அதைப் பிடித்துக்கொண்டு தொங்காதீர்கள். தேவையான இடங்களில் தேவையானவர்களை நியமித்துள்ளோம்.2004இல் நான் அமைச்சரவை அமைச்சர். இஸ்லாமிய மகளிர் அணியும் ஹிஜாப்பிற்காக துணி வழங்க வேண்டுமென அமைச்சரவையில் யோசனை முன் வைத்தேன். அதை முஸ்லிம் அமைச்சர்கள் செய்யவில்லை, நான்தான் செய்தேன். மேலும் அம்பாறையில் இருந்து எங்களுக்கு ஒரு முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர் கூட வரவில்லை. ஆனால் ஆதம் பாவாவை தேசிய பட்டியலிலிருந்து நியமித்தோம். மேல் மாகாண ஆளுநராக முஸ்லிம் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார்.” என அவர் தெரிவித்துள்ளார்.

என்.பி.பியின் விஞ்ஞாபனம் ஐந்து வாரங்களுக்கானது அல்ல, அது ஐந்து வருடங்களுக்கானது – அமைச்சர் விஜித ஹேரத்

தேசிய மக்கள் சக்தியின் விஞ்ஞாபனம் ஐந்தாண்டுகளுக்குள் பூர்த்தி செய்யப்படும் எனத் தெரிவித்த அமைச்சர் விஜித ஹேரத்,விஞ்ஞாபனம் ஐந்து வாரங்களுக்கானது அல்ல என்றும் தெரிவித்தார்.

வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றத் தவறியுள்ளதாக எதிர்க்கட்சி அரசியல்வாதிகள் சிலர் குற்றஞ்சாட்டி வருவதற்குப்  பதிலளிக்கும் வகையிலேயே, அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.

தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் உரையாற்றிய அமைச்சர் மேலும் கூறியதாவது:

தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் தனது தேர்தல் விஞ்ஞாபனத்தில் கூறிய விடயங்கள் ஐந்தாண்டுகளில் பூர்த்திசெய்வதற்கானதாகும். சஜித் பிரேமதாச போன்ற சில எதிர்க்கட்சி அரசியல்வாதிகள் கூறுவது போன்று, ஐந்து வாரங்களுக்குள் அந்த வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாது.

நாங்கள் இன்னும் பல முடிவுகளை எடுக்க வேண்டும். ஐந்தாண்டுகளுக்குத் திட்டமிடப்பட்ட ஒரு பணியை ஐந்து வாரங்களுக்குள் முடிக்க முடியாது. தேசிய மக்கள் சக்தியின் தேர்தல் விஞ்ஞாபன அறிக்கை ஐந்தாண்டுகளுக்குள் நிறைவேற்றப்படும். நாங்கள் இன்னும் அரசாங்கத்தை அமைக்கவில்லை. கடந்த ஐந்து வாரங்களுக்குள் அரசியல் மற்றும் பொருளாதாரத்தில் முக்கிய முடிவுகளை எடுத்ததை வைத்து அரசாங்கம் கவிழ்ந்துவிடும் என எதிர்க்கட்சிகள் பகல் கனவு காண்கின்றன. நூற்றுக்கணக்கான அமைச்சர்கள் இருந்தும் பொருளாதார பிரச்சினைகளுக்குத் தீர்வு காணத் தவறிய நிலையில், இறுதியில் நாட்டை வங்குரோத்து நிலைக்குத் தள்ளியுள்ளனர். இருப்பினும் தற்போது மூன்று அமைச்சர்கள் மட்டுமே நாட்டை இயக்குகின்றனர். நாங்கள் இப்போது ஒரு புதிய பாதையில் பயணிக்கிறோம். ஊழல்மிக்க அரசியல் கலாசாரம், மோசடி போன்ற விடயங்களே பொருளாதார வீழ்ச்சிக்கு முக்கிய காரணம் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.

கடவுச்சீட்டில் இரண்டாவது இடத்திற்கு தள்ளப்பட்ட சிங்களம் – அமைச்சர் விஜித ஹேரத் விளக்கம்!

புதிய கடவுச்சீட்டில் அரச கரும மொழிகளான சிங்களம், தமிழ் மொழிகள் முன்னிலையில் இருந்து பின்னிலைக்கு கொண்டு செல்லப்பட்டமை தொடர்பிலான முடிவு சமகால அரசாங்கத்தினால் எடுக்கப்பட்ட முடிவு அல்ல. அது கடந்த அரசாங்கத்தின் முடிவு என அமைச்சரவை பேச்சாளரான அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்தார்.

 

அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற வாராந்த அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகச் சந்திப்பில், கடவுச்சீட்டு நெருக்கடி நிலைமை தொடர்பிலும், புதிதாக விநியோகிக்கப்படும் கடவுச்சீட்டில் பழைய கடவுச்சீட்டில் முதல் இரண்டு இடங்களில் இருந்த சிங்களம் மற்றும் தமிழ் மொழிகள் இரண்டாம், மூன்றாம் நிலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளமை தொடர்பிலும் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

 

அவர் மேலும் கருத்து வெளியிடுகையில்,

 

கடவுச்சீட்டு பிரச்சினை நாம் வந்து ஏற்படுத்தியது அல்ல. கடந்த அரசாங்கம் முறையாக கடவுச்சீட்டுகளை கொண்டுவர நடவடிக்கை எடுத்திருந்தால் இந்த நெருக்கடி ஏற்பட்டிருக்காது. இலத்திரனியல் கடவுச்சீட்டை அறிமுகப்படுத்த புதிய நிறுவனத்திற்கு ஒப்பந்தம் வழங்கப்பட்டிருந்தது. ஆனால் அவர்கள் அவற்றை உரிய காலத்தில் அனுப்ப தவறியுள்ளனர். இந்த நேரத்தில் பழைய கடவுச்சீட்டும் போதுமான அளவு கையிருப்பில் இருக்கவில்லை. நாம் வரும் போது இதுவே நிலைமையாக இருந்தது.

 

இன்னுமொரு நிறுவனம் குறித்த டென்டருக்கு எதிராக நீதிமன்றத்திற்கும் போயிருந்தது. இந்நிலையில் முன்னாள் அரசாங்கம் சென்ற பாதையில் சென்றிருந்தால் ஒரு கடவுச்சீட்டும் இருந்திருக்காது. நீதிமன்றத்தினால் வழங்கப்பட்ட தீர்ப்புக்கமைய முன்னர் கடவுச்சீட்டை பெற்ற நிறுவனத்திடம் இருந்து அவற்றை கொள்வனவு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

 

பல மாதங்களா கடவுச்சீட்டு இல்லாமல் இருந்தமையினால் இப்போது கேள்விகள் அதிகரித்துள்ளதால் அதிகமானவர்கள் கடவுச்சீட்டு பெற செல்கின்றனர். இதனால் மக்களிடம் அத்தியாவசிய தேவையாக இருந்தால் மாத்திரம் கடவுச்சீட்டு அலுவலகம் செல்லுமாறு கோருகின்றோம்.

 

இதேவேளை, புதிய கடவுச்சீட்டுகளை வடிவமைத்தது நாம் அல்ல. அதனை நாங்கள் மாற்றம் செய்ய போகவில்லை. அதற்குள் புகைப்படங்கள் பல உள்ளன. அவை ஏற்கனவே அனுமதிக்கப்பட்டிருந்தமையாகும். அனைத்தையும் மாற்றினால் நெருக்கடிகளே ஏற்படும். இப்போதுள்ள தொகை 6 மாதங்களுக்கு போதுமானது. அடுத்தக் கட்டமாக புதிய கடவுச்சீட்டுகளை கொண்டுவர புதிய நிறுவனத்திற்கு விலைமனு கோரல் வழங்கப்பட வேண்டும்.” என்றார்.

தொடரும் கடவுச்சீட்டு வரிசை – அமைச்சர் விஜித ஹேரத் முன்வைத்துள்ள கோரிக்கை!

அத்தியாவசிய தேவைகள் இல்லாத எவரும் கடவுச்சீட்டை பெற வரவேண்டாம் என வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் கோரிக்கை விடுத்துள்ளார்.

 

கடந்த வாரம் எடுக்கப்பட்ட அமைச்சரவை தீர்மானத்தின் பிரகாரம் 40 ஆயிரம் கடவுச்சீட்டுகளை அரசாங்கம் இரண்டு கட்டங்களாக இறக்குமதி செய்துள்ளது.

 

அதன் பிரகாரம் ஏற்கனவே, பதிவு செய்யப்பட்டு நிலுவையில் உள்ளவர்களுக்கு கடவுச்சீட்கள் தற்போது வழங்கப்பட்டு வருகின்றன.

 

என்றாலும், குடிவரவு – குடியகல்வு திணைக்களத்தில் தொடர்ந்து அதிகளவான மக்கள் வருவதால் வரிசைகள் இன்னமும் முடிவடையவில்லை.

 

இதுதொடர்பில் விசேட அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ள அமைச்சர் விஜித ஹேரத், ”கடந்த காலங்களில் கடவுச்சீட்டு வழங்குவதில் தாமதம் ஏற்பட்டதன் காரணமாக கடவுச்சீட்டுக்கான தேவை அதிகரித்துள்ளது. புதிய முறையின் கீழ் அத்தியாவசியமான அனைத்து நபர்களுக்கும் கடவுச்சீட்டு வழங்கப்படும்.

 

குறிப்பிட்ட அளவான கடவுச்சீட்டுகள் கையிருப்பில் உள்ளன. எதிர்காலத்தில் சில இலட்சம் கடவுச்சீட்டுகள் பெறப்படும். இதனால் அத்தியாவசிய தேவையுடையவர்கள் மாத்திரம் இக்காலப்பகுதியில் கடவுச்சீட்டுகளை பெற்றுக்கொள்ள வேண்டும். வெளிநாடு செல்லாதவர்கள் பெற வேண்டாம்.” எனவும் விஜித ஹேரத் கோரிக்கை விடுத்துள்ளார்.

முன்னாள் ஜனாதிபதிகளுக்கு வழங்கப்பட்டுள்ள வசதிகள் அவசியமா..? – விசாரணைகளுக்காக புதிய குழு நியமனம்!

முன்னாள் ஜனாதிபதிகளுக்கு வழங்கப்பட்டுள்ள வசதிகள் அவசியமா என்பதை கண்டறிய குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

ஊடகவியலாளர்களிடம் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்புக்காக அமர்த்தப்பட்ட பொலிஸ் உத்தியோகத்தர்கள் தற்போது வீடுகளில் பணிபுரியும் குழுவாக மாறியுள்ளமை பொலிஸ் அதிகாரிகளை அவமதிக்கும் செயலாகும்.

இவ்வாறு கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ள பொலிஸ் உத்தியோகத்தர்கள் தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

இதன்படி, முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்பிற்கு தேவையான உத்தியோகத்தர்களை மாத்திரம் கடமையில் ஈடுபடுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என குறிப்பிட்டுள்ளார்.

 

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பிலான அறிக்கை தேவையான போது வெளிப்படுத்தப்படும் – அமைச்சர் விஜித ஹேரத்

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பிலான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கையை தேவையான போது வெளிப்படுத்த தயார் என அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

 

கம்பஹா பிரதேசத்தில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

 

எதிர் தரப்பினர் கூறுவதை போல விசாரணை அறிக்கையை நினைத்தப்படி வெளியிடுவதற்கு இது ஒன்றும் குழந்தைகள் வைத்து விளையாடும் பொம்மை அல்ல எனவும் விஜித ஹேரத் சாடியுள்ளார்.

 

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பில் இதுவரை வெளியிடப்படாத இரு ஜனாதிபதி ஆணைக்குழுக்களின் அறிக்கைகளை ஏழு நாட்களுக்குள் வெளியிடுவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்காவிட்டால் அவற்றை நான் வெளியிடுவேன் என கடந்த திங்கட்கிழமை நடைபெற்ற ஊடக சந்திப்பில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்பன்பில தெரிவித்திருந்தார்.

 

அறிக்கையை வெளியிடுவதில் அரசாங்கம் ஏன் தயங்குகின்றது என்பதை அமைச்சர் விஜித ஹேரத் வெளிப்படுத்த வேண்டும் எனவும் அவர் சுட்டிக்காட்டியிருந்தார்.

 

இந்நிலையில் இது தொடர்பில் ஊடகவியளாலர்களின் கேள்விக்கு பதில் வழங்கிய விஜித ஹேரத்,

 

ஒவ்வொரு தனிநபர் கோரிக்கையின் அடிப்படையில் அவற்றை வெளியிட முடியாது. பொறுப்புள்ள அரசாங்கம் என்ற வகையில், தங்கள் பணிகளைச் சரியாகச் செய்யத் தயாராக உள்ளோம்.

 

கம்பன்பில கூறுவதை போல அவரின் அறிக்கைகள் தொடர்பில் தாம் கவலைப்படவில்லை என தெரிவித்துள்ளார்.

வரி செலுத்தாமல் இருக்கும் வர்த்தகர்களுக்கு எதிராக விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் -அமைச்சர் விஜித ஹேரத்

நாட்டில் பாரியளவில் வரி செலுத்தாமல் இருக்கும் வர்த்தகர்களுக்கு எதிராக விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின் போது அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

நாட்டில் பாரிய வர்த்தகர்கள் பலரும் கோடிக்கணக்கில் அரசாங்கத்துக்கு வரி செலுத்தாமலிருக்கின்றனர். விரைவில் அவர்களும் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்கள் என்றும் அவர் இதன்போது தெரிவித்தார்.

நாட்டில் பாரிய வர்த்தகர்கள் பலரும் கோடிக்கணக்கில் அரசாங்கத்துக்கு வரி செலுத்தாமலிருக்கின்றனர்.

 

இவ்வாறு செலுத்தப்படாமல் இருக்கும் பாரிய தொகையைப் பெற்றுக் கொள்வதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். விரைவில் அதனை செய்ய நாம் எதிர்பார்த்துள்ளோம்.

 

இந்த விவகாரத்தில் நபர்கள் தொடர்பான தராதரம் இன்றி நடவடிக்கை எடுப்பதிலிருந்து பின்வாங்கப் போவதில்லை. அது முறையான வழிமுறைக்கமைய முன்னெடுக்கப்படும் என குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, அரசாங்கத்திற்கு செலுத்த வேண்டிய வற் வரியில் மோசடி செய்தமைக்காக பிரபல வர்த்தகர் அர்ஜூன் அலோசியஸூக்கு 6 மாத கால சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

எமது புதிய அரசாங்கத்தில் இராஜாங்க அமைச்சர்கள் எவரும் நியமிக்கப்பட மாட்டார்கள் – அமைச்சர் விஜித ஹேரத்

எதிர்வரும் பொதுத் தேர்தலுக்குப் பின்னர் புதிய அரசாங்கத்தை தேசிய மக்கள் சக்தியே அமைக்கும். அந்த அமைச்சரவையில் 25 அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்கள் இடம்பெறுவர் என அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்தார்.

அந்த புதிய அரசாங்கத்தில் இராஜாங்க அமைச்சர்கள் எவரும் நியமிக்கப்பட மாட்டார்கள் என தெரிவித்த அமைச்சர், அந்தந்த துறைக்கான நடவடிக்கைகளை உரிய முறையில் முன்னெடுக்கும் வகையில் 25 பிரதியமைச்சர்களும் நியமிக்கப்படுவார்கள் என்றும் தெரிவித்தார்.

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாடு நேற்று தகவல் திணைக்களத்தில் இடம்பெற்றது. ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

மூன்று பாராளுமன்ற உறுப்பினர்களே தமது கட்சியில் உள்ளனர்.இதனால் தற்போதைய அரசாங்கத்தில் ஜனாதிபதி பிரதமர் மற்றும் ஒரு அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சரே இடம்பெறுகிறார்.இதனால், அமைச்சின் செயலாளர்கள் நியமிக்கப்பட்டு மக்களுக்கான சேவைகள் முறையாக முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

எமது உறுப்பினரான நிபுண ஆரச்சியை மற்றும் ஒரு அமைச்சராக நியமிப்பதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட போதும் சட்டப் பிரச்சினை காணப்பட்டதால் அதனை மேற்கொள்ள முடியவில்லை.

அடுத்து அமைக்கப்படும் அரசாங்கத்தில் குறைந்தளவு அமைச்சர்கள் நியமிக்கப்பட்டு மக்களுக்கான நிறைவான சேவை வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.