ஜே. வி. பி. உறுப்பினரின் கொலையுடன் தேசிய சுதந்திர முன்னணிக்கு தொடர்பு இருப்பதாக ஜே. வி. பி. நிரூபிக்குமானால் தேசிய சுதந்திர முன்னணியை கலைத்து அரசியலிலிருந்து ஒதுங்க தாங்கள் தயாராக இருப்பதாக தேசிய சுதந்திர முன்னணி பாராளுமன்ற உறுப்பினர் உதேசாந்த குணசேகர தெரிவித்தார். ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி ஏற்பாடு செய்திருந்த ஊடகவியலாளர் மாநாடு நேற்று முன்தினம் (08) மகாவலி நிலையத்தில் நடைபெற்றது. இங்கு கருத்துத் தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது :-
ஜே. வி. பி. உறுப்பினரான நந்தனபாலகேயின் கொலைக்கும் எமக்கும் எதுவித தொடர்பும் கிடையாது. தேசிய சுதந்திர முன்னணி உறுப்பினர்களே இந்தக் கொலையை செய்ததாக குற்றஞ்சாட்டி அரசியல் இலாபம் பெற ஜே. வி. பி. முயல்கிறது. ஐ. ம. சு. முன்னணியின் வெற்றியை தடுக்கவும் எம்மை அரசியலில் இருந்து ஒதுக்கவுமே ஜே. வி. பி. சதி செய்கிறது.
தமக்கு கிடைக்க உள்ள பாரிய தோல்வியை தடுக்க ஜே. வி. பி. நரபலி கொடுக்க முயன்று வந்தது. அதன் பலனா கவே நந்தன பாலகே சுடப்பட்டுள்ளார். அவரின் மறைவு தொட ர்பாக எமது கவலையைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
இந்தக் கொலையுடன் பியசிரி விஜேநாயக்க எம்.பிக்கோ எமது கட்சி மேல் மாகாண வேட்பாளர்களுக்கோ தொடர்பு இருப்பதாக நிரூபித்தால் அரசியலில் இருந்து ஒதுங்குவோம். இந்த சம்பவம் தொடர்பாக பூரண விசாரணை நடத்துமாறு பொலிஸ் மா அதிபரை கோரியுள்ளோம் என்றார்.