லிபிய வர்த்தக பிரதிநிதிகளுடன் இலங்கை உயர்மட்டக் குழு சந்திப்பு

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான தூதுக் குழுவினர் நேற்றுக்காலை லிபிய வர்த்தக சம்மேளனப் பிரதிநிதிகளைச் சந்தித்துக் கலந்துரையாடினர். லிபிய பிரதமர் தலைமையில் இச் சந்திப்பு இடம்பெற்றது.

இச் சந்திப்பில் லிபிய பிரதமருடன் லிபிய முதலீட்டாளர்கள், பொருளாதார ஆலோசகர்கள், வர்த்தக சம்மேளனப் பிரதிநிதிகள் போன்றோரும் இலங்கை வர்த்தக சம்மேளன பிரதிநிதிகளும், வர்த்தகர்களும் பங்குபற்றினர். இரண்டு நாடுகளுக்கிடையிலும் முதலீட்டுக்கான வாய்ப்புகளை மேம்படுத்துதல், வர்த்தக நடவடிக்கைகளை அதிகரித்தல், இரண்டு வர்த்தக சம்மேளனங்களுக்குமிடையிலும் நேரடி அன்னியோன்ய ஒத்துழைப்பை ஏற்படுத்திக்கொள்ளுதல் போன்ற விடயங்கள் குறித்து இருதரப்பினரும் நீண்ட நேரம் கலந்துரையாடினர்.

இச்சந்தர்ப்பத்தில் இலங்கைப் பிரதிநிதிகள் இந்நாட்டில் சுற்றுலா, தொலைத் தொடர்பு மற்றும் கைத்தொழில் துறைகளில் முதலீடுகளைச் செய்வதற்குரிய வாய்ப்புக்கள் தொடர்பாக எடுத்துக் கூறினர். விசேட முதலீட்டுத் திட்டங்களின்போது அரசாங்க மட்டத்தில் பெற்றுக்கொடுக்கக் கூடிய ஒத்துழைப்புகள் தொடர்பாக ஜனாதிபதியும், லிபியப் பிரதமரும் இச்சந்திப்பில் இணக்கப்பாட்டுக்கு வந்தனர்.

இரு நாடுகளுக்கிடையிலும் அன்னியோன்ய ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்காக கூட்டு ஆணைக்குழு தொடர்பான புரிந்துணர்வு உடன்படிக்கையொன்றும் நேற்று கைச்சாத்திடப்பட்டது. இந்த உடன்படிக்கையின் பயனாக இரு நாடுகளுக்குமிடையிலும் விவசாய, மாணிக்கக்கல் தொழில் மற்றும் வர்த்தக முதலீடுகளில் நன்மைகள் கிடைக்கப்ப பெறும்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *