ஐக்கிய நாடுகள் சபையின் கீழ் இயங்கும் இடம்பெயர்ந்தோருக்கான மனித உரிமை அமைப்புச் செயலாளரின் பிரதிநிதியான வோல்டர் கீலின் இன்று இலங்கை வரவுள்ளதாக ஐ.நா. மனித உரிமைகள் சங்கம் தெரிவித்துள்ளது. இலங்கை அரசாங்கத்தின் அழைப்பின் பேரில் இங்கு வரும் ஐ.நா. பிரதிநிதி இடம்பெயர்ந்தோர் தொடர்பான எதிர்காலத் திட்டங்கள் குறித்து அரசின் உயர்மட்ட அதிகாரிகளுடன் கலந்துரையாடவுள்ளார்.
இவர் இலங்கையில் தங்கியிருக்கும் நாட்களில் இங்கு நிவாரணப் பணிகளில் ஈடுபட்டுள்ள ஐ.நா. வின் தொண்டு நிறுவனங்களைச் சேர்ந்த அதிகாரிகள் மற்றும் சிவில் சமூக பிரதிநதிகள் ஆகியோரைச் சந்திக்கவுள்ளதோடு இடம்பெயர்ந்தோரையும் சந்தித்துக் கலந்துரையாடவுள்ளார். சுவிட்சர்லாந்திலுள்ள பேர்ன் பல்கலைக் கழக சட்ட பீடத்தின் யாப்பு மற்றும் சர்வதேச பொதுச் சட்டத்துறை பேராசிரியரான வோல்டர் கீலின், கடந்த 2004ஆம் ஆண்டு முதல் ஐ.நா.வின் இடம்பெயர்ந்தோருக்கான மனித உரிமை அமைப்பு செயலாளரின் பிரதிநிதியாகக் கடமையாற்றுவதோடு இவ்வமைப்பின் உறுப்பினராகவும் உள்ளமை குறிப்பிடத்தக்கது.