கடந்த சனிக்கிழமை (Mar 28, 2009)லண்டன் மாநகரில் பெரிய அளவில் கண்டன ஊர்வலம் ஒன்று “மக்களுக்கு முதலிடம் கொடு” என்னும் வானவில் கூட்டமைப்பினால் நூற்றி ஐம்பதுக்கும் அதிகமான தொழிற் சங்கங்கள், கிறிஸ்த்தவ தளங்கள், அரசு சார்பற்ற ஸ்தாபனங்கள் இணைந்து மிகவும் வெற்றிகரமாக நடாத்தினர். இது போன்று இன்னும் பல கண்டன ஊர்வலங்கள் இனிவரும் தினங்களில் நடாத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இதில் சித்திரை முதலாம் நாள் “யுத்தத்தை நிறுத்துவதற்கான கூட்டமைப்பு”, “நிதி அழிவு (Meltdown)”, “மக்களும் கிரகமும்” “சூழல் பாசறை” போன்ற அமைப்புகள் நடாத்த உள்ள எதிர்ப்பு ஊர்வலங்கள் மற்றும் இவற்றை தவிர சித்திரை இரண்டாம் நாள் பல விதமான ஜனநாயக போரட்டங்களையும் வேறுவேறு அமைப்புகள் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளன. அனைத்து அமைப்புகளும் வேறுவேறு நோக்கங்களுக்காக தங்கள் எதிர்ப்புகளை வெளிப்படுத்தினாலும் அவற்றின் அடிப்படை கோரிக்கையானது “லாபத்தை விட மக்களுக்கு முதலிடம் கொடு” என்பதே. இவ்வாறான ஒட்டுமொத்த எதிர்ப்புக்களையும், கண்டனங்களையும் சர்ச்சைகளையும் கிளப்பியிருப்பது சித்திரை இரண்டாம் நாள் நடைபெறவிருக்கும் G20 உச்சி மகாநாடு.
இம்மகாநாடு பத்தொண்பது நாடுகள், ஐரோப்பிய ஒன்றியம் (EU), தென் கிழக்காசிய நாடுகளின் கூட்டமைப்பு (ASEAN), ஆபிரிக்க அபிவிருத்திக்கான புதிய கூட்டுறவு (NEPAD), ஐக்கிய நாடுகள் சபை(EN) ஆகியவை பங்கு பற்றுகின்றன. G20 நாடுகளின் மொத்த சனத்தொகை உலக சனத்தொகையின் 67 சதவிகிதமும், இந்நாடுகளின் ஒட்டுமொத்த ஏற்றுமதி இறக்குமதி வர்த்தகம் அண்ணளவாக உலக நாடுகளின் 80 சதவிகித வர்த்தகத்திற்கு சமனாகவே உள்ளது. இவைதவிர உலக நாடுகளின் 90 விகித உள்நாட்டு உற்பத்தியை G20 நாடுகளே மேற்கொள்கின்றன. ஆகவே இந்நாடுகள் தமக்கிடையே உள்ள பொதுவான பொருளாதாரம் நிதி உலகமயமாக்கள் போன்ற விடயங்கள் தொடர்பாக தமது கருத்துக்களை பறிமாற்றிக்கொள்ளும் அத்தியாவசியத்தினை உணர்ந்து 1990 நடுப்பகுதியில் ஏற்பட்ட கிழக்காசிய நாடுகளின் அந்நியசெலாவணி நெருக்கடியினால் உந்தப்பட்டு 1999முதல் தொடக்கம் பல சந்திப்புகளை அந்நாடுகளின் அரசுகளின் தலைவர்களும், நிதி அமைச்சர்களும் மத்திய வங்கிகளின் ஆளுநர்களும் நிகழ்த்தியுள்ளனர். ஆனால் இம்முறை நடக்கவிருக்கும் சந்திப்பானது கடந்த ஆறு மாதங்களுக்குள் ஏற்பாடு செய்யப்பட்ட இரண்டாவது மிக முக்கியமான மகாநாடுவாகும்.
கடந்த பல வருடங்களாக பொறுப்பற்ற முறையில் உலக நிதியைக் கையாண்ட வங்கிகள், எச்சரிக்கையற்று இருந்த அரசு கட்டுப்பாட்டாளர்கள், பொறுப்பற்ற பொருளாதாரக் கொள்கைகள், நிபந்தனையற்ற எல்லைகளற்ற பணப்பாச்சல்கள், இவையனைத்தும் உருவாக்கியதே இந்த உலகளாவிய நிதியியல் நெருக்கடி. இந்த நெருக்கடியானது கடன் பெறுவதற்கான தட்டுப்பாட்டை ஏற்படுத்தி பொருளாதார தேக்கத்தையும் பின்னடைவையும் மேற்குலக நாடுகள் மட்டுமல்லாது ஏனைய வளர்ச்சியடையும் நாடுகளையும் பாதித்திருப்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
G20 குழுவின் நோக்கங்களும் கட்டுமாணங்களும்
இக்குழுவானது இதனுள் அங்கம் வகிக்கும் வளர்ச்சியடைந்த நாடுகளுக்கும் வளர்ந்து வரும் சந்தைகளை கொண்டிருக்கும் நாடுகளுக்குமிடையே உலக பொருளாதார திடநிலை தொடர்பாக வெளிப்படையானதும் உருப்படியானதுமான கருத்துப் பரிமாற்றம் செய்யும் கருத்தரங்காகவே ஸ்தாபிக்கப்பட்டது. நாடுகளின் அபிவிருத்தியயையும் அவற்றின் பொருளாதார வளர்ச்சியையும் ஆதரிப்பதும்; இவற்றிற்கு ஆதரவாக உலக நிதிக் கட்டுக்கோப்புக்களையும் பலப்படுத்துவதோடு தேசிய கொள்கைகள், உலகலாவிய ஒத்துழைப்பு, உலக நிதி ஸ்தாபனங்கள் போன்ற விடயங்களில் உரையாடலுக்கான வாய்ப்புக்களையும் ஏற்படுத்திக் கொடுப்பதும் இக்குழுவின் நோக்கமாக கொண்டு ஆரம்பிக்கப்பட்டது.
பேர்லினில் 2004 ஆண்டு கார்த்திகை மாதம் நடைபெற்ற நிதி அமைச்சர்கள் மத்திய வங்கி ஆளுநர்கள் அடங்கிய மகாநாட்டில் சில கொள்கை இணக்கங்கள் காணப்பட்டது. அவையாவன:
•பணம் நிதி ஆகியவற்றின் திடநிலை பேணல் (Stability)
•விலைகளின் திடநிலை பேணல், பணவீக்கத்தை கட்டுப்படுத்தல்
•உள்நாட்டு வரவு செலவுத்திட்ட பற்றாக்குறையை நிரவும் பொதுக்கடனானது அந்நாட்டின் உற்பத்திக்கு பொருத்தமான அளவில் பேணப்படல்.
•உள்நாட்டு நிதியியல் துறையை பலப்படுத்தல்
•அந்நிய செலாவணிக்கான கட்டுப்பாடுகளை கவனமாக தளர்த்தல்
•போட்டியை பேணல் (Competiton)
•உள்நாட்டு வெளிநாட்டு வர்த்தகங்கள் மீதுள்ள தடைகளை படிப்படியாக தளர்த்தல்
•நெகிழ்வான தொழிளாளர் சந்தையை உருவாக்குதல்
•சிறிய, மத்திய நிறுவனங்களை ஊக்குவித்தல்
•நேரடி வெளிநாட்டு மூலதனங்களை அனுமதித்தல்
•உரிமை கொடுத்தல் (empowerment).
•கல்வி கற்கவும் பயிற்சிகளைப் பெறவும் வசதிகளை செய்து கொடுத்தல்
•சிறிய நிறுவனங்களை ஆரம்பிக்க இலகு முறையில் கடன் பெற வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்தல்
•சமூக கட்டுமாணங்களான நன்நீர் வசதிகளை தருவது, சுகாதார சூழலை உருவாக்குதல்
கடந்த பத்துவருட காலங்களில் இக்குழுவின் சாதனைகள் என பட்டியல் போடப்படுபவை கீழே தரப்படுகின்றன:
•நாடுகளின் பொருளாதார வளர்ச்சி தொடர்பான கொள்கைகளில் இணக்கம்
•நிதி முறைமையை துஸ்பிரயோகங்களை குறைத்தல்
•நிதி நெருக்கடியை கையாள்வது
•பயங்கரவாதத்திற்கு பயன்படும் பண முதலீடுகளுக்கு எதிராக செயல்படல்
•உலகளவில் அங்கீகரிக்கப்பட்ட ஏற்புடைக் கோட்பாடுகளை பயன்படுத்தி இறைதிறை கொள்கைகளில் (Fiscal Policy) ஒளிவின்மையை கொணர்தல்
•உலகளவில் அங்கீகரிக்கப்பட்ட ஏற்புடைக் கோட்பாடுகளை பயன்படுத்தி பணச்சலவை, பயங்கரவாததிற்கு பயன்படும் பண முதலீடுகளுக்கு எதிராக செயல்படல்
•வரி ஏய்ப்பு, நிதி முறைமையை துஸ்பிரயோகங்கள், சட்டங்களுக்கு எதிரான நடவடிக்கைகள் தொடர்பான தகவல்களை பரிமாறிக் கொள்வது
•உலக நிதி கட்டுமாணத்தை மறுசீர்அமைப்பது.
•இவ்வருடம் பங்குனி 14 திகதி வெளிட்ட அறிக்கையில், இன்றைய நிதி குழப்ப நிலையிலிருந்து விடுபட நாடுகள் கூட்டாக செயல்பட வேண்டிய அவசியத்தினை வலியுறுத்தி மத்திய வங்கிகளின் ஆளுநர்கள், நிதி தொடர்பான விதிகளையும் அவற்றின் நிர்வாகத்தையும் செம்மைப்படுத்துவதன் மூலமே உலக நிதிச்சந்தையை சீராக்க முடியும் என ஏற்றுக்கொண்டனர்.
ruban
We welcome like this articles – it is very helpfull to understant the G20, we expect the other pats of the article must be expanded explanation please – Thank you Mr Vasanthan
MANITHA NEYAN
MR GORDON BROWN SAID GLOPAL PROBLEMS NEED GLOPAL SOLUTIONS.