ஏ9 பாதையூடாக தனியார் துறையினரும் பொருட்களை எடுத்துவர அரசாங்கம் ஏற்பாடுகளைச் செய்துள்ளமையால், குடாநாட்டில் பொருட்களின் விலை வெகவாக வீழ்ச்சியடைந்துள்ளன. கடந்த வியாழக்கிழமை யாழ். மாவட்டத்துக்கு உப உணவுப்பொருட்கள் பழவகைகள் மென்பானங்கள், பிஸ்கட், பட்டர், மாஜரின், மருந்துவகைகள் என்பன பதினெட்டு லொறிகளில் எடுத்துவரப்பட்டமையால், கடந்த மூன்று வருடங்களின் பின்னர் நாற்பதுசதவிகித விலை வீழ்ச்சியேற்பட்டுள்ளது.
ஒன்றரை லீற்றர் மென்பானம் முன்னர் 220 ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்டது. நேற்று முதல் இதனை 160க்கு வாங்கமுடிகின்றது. மருந்துவகைகள், பிஸ்கட், மாஜரின், பட்டர், போடப்பட்டவிலையில் ஐந்துசதவீத அதிகரிப்பில் விற்பனையாகின்றன.
அத்தியாவசிய உணவுப் பொருட்களான சீனி, பருப்பு, அரிசி, டின்மீன், நவதானியம் என்பன கொழும்பு விலைக்கு விற்பனையாகின்றன. கொழும்பிலிருந்து குடாநாட்டுக்கு ஏ9 பாதையூடாக பொருட்களை எடுத்துவர நூற்றுக்கணக்கான வர்த்தகர்கள் அத்தியாவசிய சேவைகள் ஆணையாளருக்கு விண்ணப்பம் செய்துள்ளனர்.
கப்பல்களில் பொருட்கள் வராவிட்டால் பதுக்கல் நடவடிக்கையில் ஈடுபட்ட வியாபாரிகளும் அதனைக் கைவிட்டு பதுக்கிய பொருட்களை சந்தைக்கு விடத்தொடங்கியுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
எதிர்வரும் சித்திரைப்புத்தாண்டை முன்னிட்டு ஏ9 பாதையூடாக பொருட்களை எடுத்துவர பல வர்த்தகர்கள் அத்தியாவசிய தேவைகள் ஆணையாளருக்கு விண்ணப்பித்துள்ளனர். சுமார் 100 லொறிகளில் சித்திரை புத்தாண்டுக்கு அத்தியாவசிய பொருட்களை அரசு அனுப்பவுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதேவேளை கொழும்பில் உள்ள சில தனியார் நிறுவனங்களும் தமது உற்பத்தி பொருட்களை குடாநாட்டுக்கு அனுப்பிவைக்க நடவடிக்கை எடுத்துவருகின்றன. உடு பிடவைகள், பாதணிகள், வீட்டு உபகரணங்கள் போன்றவையும் குடாநாட்டுக்கு ஏ9 பாதையூடாக எடுத்துவரப்படவுள்ளன.