வெளிநாடுகளில் புலம்பெயர்ந்து வாழும் தமிழ் சமூகப் பிரதிநிதிகளோடு காத்திரமானதொரு பேச்சுவார்த்தையை இலங்கை அரசாங்கம் கடந்த சனிக்கிழமை ஆரம்பித்து வைத்ததாக ஜனாதிபதி செயலகம் அறிவித்துள்ளது. நாட்டிலிருந்து பயங்கரவாதத்தை முற்றாக ஒழித்துக்கட்டும் இராணுவ நடவடிக்கைகளின் காரணமாகவும் புலிகளது பயங்கரவாத நடவடிக்கைளாலும் சிதைவடைந்துள்ள வடமாகாணத்தை மீள் கட்டமைப்பதற்கான பொருளாதாரத்திட்டத்தை அமுல்படுத்துவதற்கும் நாட்டிலுள்ள சமூகங்கள் மத்தியில் இன ஒருமைப்பாட்டை கட்டியெழுப்புவதற்கும் வெளிநாடுகளில் வாழும் தமிழ் மக்களது பங்களிப்பைப் பெற்றுக்கொள்ளும் நோக்கிலேயே இப்பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இலங்கை அரசாங்கத்துடனான இந்த முதலாவது கலந்துரையாடலில் ஐக்கிய இராச்சியம், கனடா, , அவுஸ்திரேலியா, நோர்வே, ஜேர்மனி, சுவிச்சர்லாந்து மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளில் புலம்பெயர்ந்து வாழும் தமிழ் மக்கள் பங்குபற்றியுள்ளனர்.
இச்சந்திப்பின்போது வட மாகாணத்தின் பொருளாதார அபிவிருத்தி மற்றும் மக்களை அரசியல் ரீதியாக வலுப்படுத்தல் போன்ற அம்சங்கள் குறித்து கலந்துரையாடப்பட்டுள்ளது. புலிகளது பலம் இலங்கையிலும் இலங்கைக்கு வெளியேயும் வலுவிழந்துபோயுள்ள நிலையில், நாட்டைக் கட்டியெழுப்புவதற்காக தமது பங்களிப்பை வழங்குவதற்கான சிறந்ததொரு சந்தர்ப்பமாக இதனை அவர்கள் கருதுகின்றார்கள்.
கடந்த சனிக்கிழமை நடைபெற்ற முதலாவது அமர்வுக்கு வெளிவிவகார அமைச்சர் ரோஹித்த போகொல்லாகம அவர்கள் தலைமை தாங்கியதோடு விஞ்ஞான தொழிநுட்ப அமைச்சர் பேராசிரியர் திஸ்ஸ விதாரன, அரசியல்யாப்பு விவகார அமைச்சர் டியூ குணசேக்கர ஜனாதிபதியின் சிரோஷ்ட ஆலோசகர் பசில் ராஜபக்ஷ, ஜனாதிபதியின் செயலாளர் திரு.லலித் வீரதுங்கா, வெளிவிவகார அமைச்சின் செயலாளர் கலாநிதி பாலித கொஹனவும் கலந்து கொண்டனர். தமிழ் பிரதிநிதிகள் குழுவின் ஒருங்கிணைப்பாளராக அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த கலாநிதி நொயெல் நடேசன் பங்குபற்றினார் என அறிவிக்கப்பட்டுள்ளது
thurai
//புலிகளது பயங்கரவாத நடவடிக்கைளாலும் சிதைவடைந்துள்ள வடமாகாணத்தை மீள் கட்டமைப்பதற்கான //
இலஙகையே சிதைவடைந்துள்ளது. தமிழரும்,சிங்களவரும் ஒன்று சேர்ந்து இலங்கையை மீளகட்டமைப்பதன் மூலமே சமூக ஒற்ருமையும், தமிழரிடம் ஒற்றுமையுமேற்படும்.
துரை
பார்த்திபன்
பல்லிக்கு இச் சந்திப்புப் பற்றி தவறான தகவல்கள் கிடைத்தாக ஏற்கனவே வேறொரு பக்கத்தில் பார்த்ததாக ஞாபகம். அதில் TBC ஊடகத்தில் அரசியல் ஆய்வு செய்பவர், தான் இந்த சந்திப்பில் கலந்து கொள்வதாக முன்பு கூறிவிட்டு பின்பு கலந்து கொள்ளவில்லை என நீங்கள் அறிந்ததாகவும் எழுதியிருந்தீர்கள். அதில் தவறுகள் இருந்தால் என்னை திருத்தி விடும்படியும் கேட்டிருந்தீர்கள். இன்றைய TBC அரசியல் நிகழ்ச்சியில் அதன் அரசியல் ஆய்வாளர் இச்சந்திப்புப் பற்றி கூறியவை பற்றி தாங்களும் கேட்டிருப்பீர்கள் என நானும் நம்புகின்றேன். அதனால் மேலதிக விளக்கத்தை தங்களுக்கு நான் தர வேண்டிய அவசியம் இருக்காதெனவும் நம்புகின்றேன்.
பல்லி
பார்த்திபன் பல்லி அவ்வளவு சீக்கிரம் முட்டாளாக மாறாது. இதில் யாராவது பாதிக்கபட்ட தமிழர் கலந்து கொண்டனரா?? அது என்ன புலம்பெயர் தமிழரும் அரசுக்கு எடுபிடியான தமிழரும் கலந்து கொல்லும் மகாநாடு?? வடக்கை அபிவிருத்தி செய்ய யார் பேச வேண்டும்?? புலம் பெயர் புண்ணாக்குகளா?? தமது சுயநலத்துக்காக 74 புண்ணாக்குகள் கைஒப்பம் இட்டதை இந்த இடத்தில் பல்லி சுட்டி காட்டுகிறது. அவர்களுக்கு எது வியாபார லாபமோ அதுக்கு தகுந்தாபோல் தான் அவர்களது ஆட்டம் இருக்கும். ஆகவே சம்பந்த பட்டவர்கள் (ஈழத்தில் இருக்கும் கல்வியாளர்கள், புலிகள் அல்ல.) அரசுடன் பேசி ஒரு தீர்வுக்கு வர புலம் பெயர் தமிழர் உதவியாகவோ அல்லது பாலமாகவோ இருக்க வேண்டுமே ஒழிய மற்றபடி இந்த சிட்டு குருவி லேகியம் விற்க்கும் விளையாட்டை காட்டபடாது. ரிபிசி அதுதான் இப்போது அரசின் அதிகார ஊடகமாச்சே. பார்த்திபன் முதல் மகாநாடு முடிந்து விட்டது. மற்றது இந்தியாவில் கழகத்தின் பின் தழ மகானாடாக இந்தியாவில் நடக்க போகிறது. அதிலாவது ஏதாவது ஈழதமிழர் பிரச்சனை பற்றி பாடுகிறார்களா என பார்ப்போம். பல்லியை பொறுத்த மட்டில் இரண்டுமே மணமகள் இல்லாத கலியாணம்தான்.
பார்த்திபன்
பல்லி தயவுகூர்ந்து தற்போது ஈழத்திலிருக்கும் தமிழ்ப் புத்திஜீவிகளின்( கல்வியாளர்கள்) குறைந்தது 10 பெயர்களையாவது இங்கு இணைகக்க முடிந்தால் இணைதத்து விடுங்கள். எனக்கும் பார்க்க ஆசையாகவுள்ளது.
பல்லி
//பல்லி தயவுகூர்ந்து தற்போது ஈழத்திலிருக்கும் தமிழ்ப் புத்திஜீவிகளின்( கல்வியாளர்கள்) குறைந்தது 10 பெயர்களையாவது இங்கு இணைகக்க முடிந்தால் இணைதத்து விடுங்கள். எனக்கும் பார்க்க ஆசையாகவுள்ளது//
ஆக நாம்தான் அந்த மக்களுக்கு ஏதாவது பார்த்து போட வேண்டும் என பார்த்திபன் நினைப்பது பல்லிக்கு வருத்தத்தைதான் கொடுக்கிறது. பார்த்திபன் கண்டிப்பாக சொல்லுகிறேன் தமிழர்க்கு ஒரு தீர்வு வருமாயின் அதை நீங்கள் பார்க்க ஆசை கொள்ளும் மக்களே நிர்வகிப்பார்கள். அதுக்காக பல்லியின் உழைப்பும் இருக்கும். அதை விட்டு விட்டு இந்த நடைமுறைக்கு சாத்தியமில்லாத செயல்பாடுகளில் பல்லிக்கு உடன்பாடு இல்லை.
இதில் பல்லியின் வருத்தம் மக்கள்பற்றி சிந்திப்பவர்கள் கூட இப்போது அரசின் செயல்களை நியாயபடுத்த பார்ப்பது வேடிக்கைதான். ஆனால் பார்த்திபனின் சிந்தனையை மறுக்கும் உரிமை பல்லிக்கு கிடையாது. சிலவேளை பார்த்திபன் நினைக்கும் அல்லது ஆதரவு கொடுக்கும் சிலரது நிர்வாகம் கூட சாத்திய படலாம். அப்போது முதல் பாராட்டு பல்லியினதுதான். ஆனால் எந்த ஒருதீர்வும் சம்பந்தபட்டவர்கள் இல்லாமல் திராது என்பது பல்லியின் அறிவல்ல அனுபவம்.
பார்த்திபன்
பல்லி தற்போது நாட்டிலிருக்கும் கல்விமான்கள் தான் அரசுடன் பேச்சுவார்த்தை நடாத்தி தீர்வு காண வேண்டுமென்று எழுதியதால்த் தான், அப்படி நாட்டிலுள்ள கல்விமான்கள் குறைந்தது 10 பெயர்களையாவது இணைக்கும் படி நான் கேட்டிருந்தேன். ஆனால் தறபோது பல்லி தடுமாறி மக்கள் தான் தீர்வு ஏற்படுத்த வேண்டுமென்கின்றது. ஆக பல்லிக்கே தெரிகின்றது நாட்டில் பல்லி நினைக்கும் கல்விமான்கள் எவருமேயில்லையென்று. அதற்கு புலிகள் அவர்களை போட்டுத் தள்ளியதும், தப்பியோரை மிரட்டியே நாட்டை விட்டு வெளியேறச் செய்ததும் தான் காரணம் என்பது பல்லி அறியாததல்ல.
இந்த நிலையில் தமிழ் மக்களுக்கான ஒரு அரசியல் தீர்வு ஏற்படுவதற்கு அரசியல் மற்றும் பொருளாதார அனுபவமுள்ள தமிழ்க் கல்விமான்களே அரசுடன் பேச்சுவார்த்தை நடாத்த முன்வர வேண்டும். அவர்கள் எட்ட நினைக்கும் தீர்வு அனைத்து தமிழ் மக்களின் (முஸ்லீம் மற்றும் மலையக மக்கள் உள்ளடங்கிய) அபிலாசைகளை தீர்த்து வைக்கக் கூடியதாக அமைய வேண்டுமென்பதில் எவருக்கும் மாறுபட்ட கருத்து கிடையாது. ஆனால் பல்லியைப் பொறுத்தவரை புலியை விமர்சிப்பவர்கள் என்றால் அவர்கள் அரசு ஆதரவாளர்கள் என்ற தவறான கருத்து மேலோங்கியிருப்பதால் எதைப் பார்த்தாலும் தவறாகவே தெரிகின்றது. ஏற்கனவே நடந்த சந்திப்பில் கலந்து கொண்டவர்களில் நானறிந்தவரை புலி எதிர்ப்பாளர்களை விட சிறந்த கல்விமான்களே அதிகம் கலந்து கொண்டுள்ளார்கள். அதுமட்டுமன்றி அரசின் நியாயமான செயற்பாடுகளுக்கு அவர்கள் பாராட்டுத் தெரிவித்த அதே வேளை தவறுகளையும் சுட்டிக் காட்டி அவற்றிற்கும் பரிகாரம் காணும் படியும் கேட்டிருக்கின்றார்கள். பல்லி நடந்தவற்றை அறிந்து விமர்சிப்பதை விடுத்து ஊகங்களின் அடிப்படையில் விமர்சிப்பதே அதிகமாக உள்ளது. பல்லிக்கு அதிக அனுபவம் இருக்கலாம். அதற்காக மற்றவர்கள் அனுபவமில்லாதவர்களென்று பல்லி நினைத்து விடலாமோ??