மனித குண்டு தாக்குதல் நடத்தும் அபாயம் இருப்பதால் வீதிவீதியாக சென்று பிரசாரம் செய்ய வேண்டாம் என்று முக்கிய தலைவர்களை மத்திய அரசு எச்சரித்துள்ளது. குறிப்பாக சாலையோர பிரசார கூட்டங்களை தவிர்க்குமாறு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, பொதுச் செயலாளர் ராகுல் காந்தி ஆகியோருக்கு அறிவுறுத்தியுள்ளது.
தேர்தல் பிரசாரத்தின்போது, மக்களோடு மக்களாக மனித வெடிகுண்டுகளை ஊடுருவச்செய்து முக்கிய தலைவர்களை கொலை செய்ய தீவிரவாதிகள் சதித் திட்டம் தீட்டியிருப்பதாக மத்திய உளவுத்துறைக்கு தகவல் கிடைத்துள்ளது. இந்த தகவலை மத்திய அரசுக்கு உளவுத்துறை அனுப்பியது. இதையடுத்து, வீதி வீதியாக சென்று மக்களை சந்தித்து பிரசாரம் செய்ய வேண்டாம் என்று முக்கிய தலைவர்களை மத்திய அரசு எச்சரித்துள்ளது.
சோனியாவும் ராகுலும், பொதுக் கூட்டங்களில் பேசுவதை விட சாலையோரங்களில் மக்களை சந்திக்கும் நிகழ்ச்சிக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கின்றனர். அப்போது, மக்களுடன் நெருங்கி பேசுவதும் கைகுலுக்குவதும் வழக்கம். சோனியா, ராகுல் ஆகியோருக்கு சிறப்பு அதிரடிப்படை பாதுகாப்பு கொடுக்கப்பட்டுள்ளது.
‘சோனியாவும் ராகுலும் பாதுகாப்பு வளையத்தை மீறி கூட்டத்தினருடன் கலந்து விடுகிறார்கள். இதனால் பாதுகாப்பு அளிப்பதில் தங்களுக்கு சிக்கல் ஏற்படுகிறது’ என்று உள்துறை அமைச்சகத்திடம் சிறப்பு அதிரடிப்படை இயக்குனர் வாங்கூர் தெரிவித்துள்ளார். மனித குண்டு தாக்குதல் அபாயம் இருப்பதால், கூட்டத்துக்குள் செல்வது, அவர்களுடன் கைகுலுக்குவது ஆகியவற்றை தவிர்க்குமாறு சோனியாகாந்தியையும் ராகுல் காந்தியையும் உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தி உள்ளது.
மற்ற முக்கிய கட்சிகளின் தலைவர்களும் வீதிவீதியாக சென்று பிரசாரம் செய்வதை தவிர்க்க வேண்டும் என்றும் பிரசாரத்தின்போது, பாதுகாப்பு வளையத்தை மீறாமல், பாதுகாப்பு படையினருக்கு முழு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் என்றும் மத்திய அரசு கேட்டுக் கொண்டுள்ளது.