இலங்கை யில் நடைபெற்று வரும் போரில், பல்லாயிரக் கணக்கான அப்பாவி பொது மக்கள் இராணுவத்துக்கும், விடுதலைப் புலிகளுக்கும் இடையே சிக்கித் தவிக்கின்றனர். இது குறித்து ஐ.நா.பாதுகாப்பு சபையில் இன்று (வெள்ளிக்கிழமை) விவாதம் நடைபெறுகிறது.
ஐ.நா., அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ், ஆஸ்திரியா மற்றும் இதர பாதுகாப்பு கவுன்சில் உறுப்பு நாடுகளுடன் இந்த விவாதத்துக்கு சபையின் மனித உரிமைகள் விவகார தலைவர் ஜோன் ஹோம்ஸ் ஏற்பாடு செய்துள்ளார். ஆனால் இந்த விவாதத்துக்கு சீனா, ரஷ்யா உள்ளிட்ட சில நாடுகள் எதிர்ப்பு தெரிவித்து உள்ளதாக ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் அதிகாரிகள் தெரிவித்தனர்.
இலங்கையில் இராணுவத்துக்கும், அந்த நாடு தீவிரவாதிகள் என்று அறிவித்துள்ள விடுதலைப் புலிகளுக்கும் இடையே நடக்கும் மோதல் ஒரு உள்நாட்டுப் போர். இந்த போரினால் உலக நாடுகளுக்கு எந்தவித அச்சுறுத்தலும் இல்லை. ஆகவே இது பற்றி ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் விவாதிக்கத் தேவை இல்லை என்று சீனாவும், ரஷ்யாவும் தெரிவித்ததாக அந்த அதிகாரிகள் கூறினார்கள்.