வருண் காந்தி இன்று பிலிபித்தில் கைதாகலாம்?

20-varun-ganthi.jpgவருண் காந்தியின் முன்ஜாமீன் இன்றுடன் முடிவடைகிறது. இதையடுத்து இன்று பிலிபித் தொகுதிக்கு வருண் காந்தி செல்கிறார். அங்கு போலீஸாரிடம் கைதாக அவர் பாஜக தலைவர்கள் மற்றும் தொண்டர்களுடன் செல்லவுள்ளதாக கூறப்படுகிறது. பிலிபித் தொகுதியின் பாஜக வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள வருண் காந்தி, அங்கு நடந்த கூட்டத்தில், இஸ்லாமியர்களை தலையை வெட்டுவேன், கையை வெட்டுவேன் என்று பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி விட்டது.

இதுதொடர்பாக தேர்தல் ஆணையத்தின் புகாரின் பேரில் பிலிபித் தொகுதிக்குட்பட்ட காவல் நிலையத்தில் வருண் காந்தி மீது இரு மதப் பிரிவினருக்கிடையே மோதலை உருவாக்கும் வகையில் பேசுதல், அரசு அதிகாரியின் உத்தரவை மீறுதல் ஆகிய பிரிவுகளின் கீழ் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது. இதை ரத்து செய்யக் கோரி அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் மனு செய்தார் வருண் காந்தி. மேலும், முன்ஜாமீ்ன் கோரி டெல்லி உயர்நீதிமன்றத்திலும் மனு செய்தார். இதில் அவருக்கு முன்ஜாமீன் கிடைத்தது. இந்த முன்ஜாமீன் இன்றுடன் முடிகிறது.

அதேசமயம், அலகாபாத் நீதிமன்றம், வருண் காந்தியின் கோரிக்கையை தள்ளுபடி செய்து விட்டது.  இந்தச் சூழ்நிலையில் தனது முன்ஜாமீனை நீட்டிக்க விரும்பாமல் கைதாக முடிவு செய்து விட்டாராம் வருண் காந்தி. அதன்படி இன்று பாஜகவினருடன் அவர் பிலிபித் செல்கிறார். அங்கு அவர் போலீஸாரிடம் கைதாவார் என்று கூறப்படுகிறது. மேலும் வருண் காந்தியின் முன்ஜாமீன் மனுவை இன்று அவரது வக்கீல்கள் உயர்நீதிமன்றத்தில் வாபஸ் பெறலாம் என்றும் கூறப்படுகிறது.

முன்ஜாமீனை நீட்டிக்காமல், அலகாபாத் உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து அப்பீல் செய்யாமல் கைதாக வருண் காந்தி முடிவு செய்திருப்பது அரசியல் லாபம் கருதியே என்று கூறப்படுகிறது. தான் கைதானால் அதனால் அனுதாபம் ஏற்படும், அது தனக்கும், பாஜகவுக்கும் லாபமாக அமையும் என்பதால் இந்த முடிவை வருண் காந்தி எடுத்திருப்பதாக தெரிகிறது. ஆனால் தனது முடிவை இதுவரை வருண் காந்தி கட்சி மேலிடத்தில் சொல்லவில்லையாம். இருப்பினும் எது செய்தாலும், சட்டத்திற்கு உட்பட்டு செய்யுமாறு வருண் காந்திக்கு கட்சி மேலிடம் அறிவுரை கூறியுள்ளதாம்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *