இந்தியாவில் இளைஞர் ஒருவர் பேஸ்புக் நேரலையில் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அசாம் மாநிலத்தை சேர்ந்த ஜெய்தீப் ராய் (27) என்பவர் இளம்பெண்ணொருவரை சில ஆண்டுகளாக காதலித்து வந்த நிலையில் அவரை திருமணம் செய்ய விரும்பினார்.
ஆனால் அப்பெண் திருமணத்திற்கு மறுத்ததால் மனம் உடைந்த ஜெய்தீப் பேஸ்புக் நேரலையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
தற்கொலைக்கு முன்னர் அவர் பேசுகையில், நான் முறைப்படி திருமணம் செய்து கொள்ளலாம் என அவளிடம் காதலை முன்மொழிந்தேன்.
ஆனால், அனைவரின் முன்னிலையிலும் அவள் மறுத்துவிட்டாள். அவளின் மாமா எனக்கு கொலை மிரட்டல் விடுத்தார், நான் இந்த உலகை விட்டு போகிறேன் என்னால் என் காதலி கஷ்டப்படக்கூடாது.
அம்மா, மாமா, அத்தை, சகோதரி, மூத்த சகோதரர், மருமகள் மற்றும் அண்ணியிடம் மன்னிப்பு கேட்கிறேன். நான் உங்கள் அனைவரையும் விரும்புகிறேன், ஆனால் நான் என் காதலியை அதிகமாக நேசிக்கிறேன், அவள் இல்லாமல் என்னால் வாழ முடியாது என கூறியிருக்கிறார்.
ஜெய்தீப் சகோதரர் ரூபம் ராய் கூறுகையில்,
எங்கள் குடும்பம் ஆழ்ந்த அதிர்ச்சியில் உள்ளது.
எங்களுக்கு என்ன செய்வது என்று புரியவில்லை. அதனால்தான் இதுவரை நாங்கள் காவல்நிலையத்தில் முறைப்பாடு கூட பதிவு செய்யவில்லை. என் சகோதரரை கொன்றுவிடுவதாக அவளின் மாமா மிரட்டினார்.
என் சகோதரர் ஒரு நல்ல மனிதர், நன்றாக சம்பாதித்தார், ஆனாலும் அவர்களுக்கு என்ன பிரச்சனை என தெரியவில்லை என்றார்.
இது குறித்து காவல்துறையினர் தெரிவிக்கையில், ஜெய்தீப் குடும்பத்திடம் இருந்து எங்களுக்கு இன்னும் முறையான புகார் எதுவும் வரவில்லை, ஆனால் நாங்கள் விசாரணையைத் தொடங்கி விட்டோம் என்றார்.