பொது நலவாய நாடுகள் அமைப்பிலிருந்து இலங்கையை நீக்க வேண்டுமென பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர் ஜோன் ரைட் கொண்டுவந்துள்ள பிரேரனை வெறும் புஷ்வானமே. இதனால் இலங்கைக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது என சுகாதார அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்தார். மேல் மாகாண சபைத் தேர்தலை முன்னிட்டு ஐ.ம.சு.முன்னணி ஏற்பாடு செய்திருந்த ஊடகவியலாளர் சந்திப்பு நேற்று மகாவலி நிலைய கேட்போர் கூடத்தில் நடைபெற்றபோது ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கையிலேயே அமைச்சர் இவ்வாறு கூறினார்.
பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினரின் யோசனையால் பொதுநலவாய நாடுகள் அமைப்பிலிருந்து இலங்கையை நீக்கிவிட முடியாது. இது குறித்து பயப்பட எதுவுமில்லை. சர்வதேச மட்டங்களிலிருந்து வந்த பாரிய எதிர்ப்புக்களுக்கெல்லாம் வெற்றிகரமாக முகம்கொடுத்த அரசுக்கு இதற்கு முகம்கொடுப்பது பெரிய விடயமல்ல. இப்பிரச்சினைக்கு முகம்கொடுக்க வெளிவிவகார அமைச்சரும் எமது வெளிநாட்டுத் தூதுவர்களும் உரிய நடவடிக்கைகளை எடுத்துள்ளனர் என்றும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.