சீனாவில் மக்கள் போரைாட்டத்தை அடுத்து தளர்த்தப்பட்டது கடுமையான ஊரடங்கு கட்டுப்பாடுகள் !

உலக நாடுகளில் இரண்டரை ஆண்டுகளாக தீவிர அச்சுறுத்தலாக இருந்து வரும் கொரோனா பெருந்தொற்று முதன்முறையாக சீனாவில் வுகான் நகரில் கடந்த 2019-ம் ஆண்டு டிசம்பர் இறுதியில் கண்டறியப்பட்டது. அதன் பின்னர் உலக நாடுகளில் பல்வேறு அலைகளாக பரவி பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தியது. எனினும், கடுமையான ஊரடங்கு கட்டுப்பாட்டு நடவடிக்கைகளால் பிற நாடுகளை விட, பரவலை முன்பே சீனா கட்டுப்படுத்தி இருந்தது.

இந்நிலையில், மீண்டும் சீனாவில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதன்படி, சீனாவில் புதிதாக ஒவ்வொரு நாளும் 30 ஆயிரம் முதல் 40 ஆயிரம் வரை கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு அதிர்ச்சி ஏற்படுத்தியது. கொரோனா அதிகரிப்பை முன்னிட்டு பல்வேறு மாகாணங்களில் கடுமையான ஊரடங்கு கட்டுப்பாடுகளை சீன அரசு விதித்தது. அரசின் இந்த ஊரடங்குக்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் வீதிகளில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

கடந்த வியாழ கிழமையன்று ஜின்ஜியாங் மாகாண தலைநகரான உரும்கி நகரில் குடியிருப்பு ஒன்றில் தீ விபத்து ஏற்பட்டதில் 10 பேர் உயிரிழந்தனர். ஊரடங்கு கட்டுப்பாடுகளால் தீயணைப்பு வாகனங்கள் சம்பவ பகுதிக்கு வந்து சேருவதில் காலதாமதம் ஏற்படுத்தியது என இதுபற்றி ஊடக செய்திகள் தெரிவிக்கின்றன. இதனை தொடர்ந்து, இந்த சம்பவம் மக்களிடையே கொந்தளிப்பு ஏற்படுத்தியது. அரசின் பூஜ்ய கொரோனா கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்தும் ஜனாதிபதி ஜி ஜின்பிங் பதவி விலக கோரியும் மக்கள் போராட்டம் வெடித்தது. தொடர்ந்து, பொதுமக்கள் வீதிகளில் இறங்கி மெழுகுவர்த்திகளை ஏந்தியபடியும், போராட்டத்தில் ஈடுபட்டனர்.

 

இவர்களில் குவாங்ஜவ் மாகாணத்தில் தெருக்களில் போராட்டம் நடத்தியவர்கள் மீது பெப்பர் ஸ்பிரே (மிளகு தூள்) தூவி அவர்களை கலைந்து போக செய்ய ஷாங்காய் போலீசார் முயற்சி செய்தனர். ஒரு தசாப்தத்திற்கு முன் ஜின்பிங் பதவியேற்றதில் இருந்து, இதுவரை இல்லாத வகையிலான அரசுக்கு எதிரான மக்களின் இந்த போராட்டம், மக்களின் மிக பெரிய கீழ்படியாமை தன்மை என அடையாளப்படுத்தப்பட்டு உள்ளது.

இந்த நிலையில், சீனாவில் தொடர்ந்து, புதிதாக கொரோனா பாதிப்புகள் உச்சம் அடைந்து வரும் சூழலில், மக்கள் போராட்டம் எதிரொலியாக மாவட்ட அளவிலான ஊரடங்கு கட்டுப்பாடுகளை அரசு தளர்த்தி வருகிறது. பல இடங்களில் போராட்டம் வன்முறையாக வெடித்த நிலையில், 7 மாவட்டங்களில் தற்காலிக ஊரடங்கு கட்டுப்பாடுகள் நீக்கப்படுகிறது என அறிவிக்கப்பட்டது.

இதனால், கிழக்கு பீஜிங் நகரில், லேசான அறிகுறிகள் ஏற்பட்ட ஆயிரக்கணக்கான மக்கள் தனிமைப்படுத்தும் மையங்களுக்கு பதிலாக, வீட்டிலேயே தங்க அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. அந்த மாடியிலேயே உள்ள அண்டை வீட்டுக்காரர்கள் மற்றும் அந்த தளத்தில் இருந்து மேலே மற்றும் கீழே என 3 மாடியில் வசிக்கும் மக்களும் வீட்டிலேயே தனிமைப்படுத்த அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. இதனை பெருமளவிலான மக்கள் வரவேற்று உள்ளனர். இதன்படி, மத்திய சீனாவில் சூப்பர் மார்க்கெட்டுகள், உடற்பயிற்சி கூடங்கள் மற்றும் உணவு விடுதிகளை மீண்டும் தொடங்குவதற்கான வர்த்தக நடவடிக்கைகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது.

இதற்கு ஏற்ற வகையில், கொரோனாவுக்கு எதிரான செயல்பாடுகளை கவனித்து வரும் துணை பிரதமர் சன் சுன்லான் கூறும்போது, கொரோனாவின் தொற்று நோய் ஏற்படுத்தும் வீரியம் குறைந்து வருகிறது என கூறியுள்ளார். ஒரு புது சூழலை நாடு எதிர்கொண்டு வருகிறது. தொற்று நோய் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டுக்கான புதிய பணிகளை மேற்கொள்ள வேண்டி உள்ளது. ஒமைக்ரான் பலவீனமடைந்து வருகிறது. அதிகளவில் மக்கள் தடுப்பூசி போட்டு கொண்டு, வைரசின் பெருக்கம் கட்டுப்படுத்தப்பட்டு வருகிறது என்று சன் கூறியுள்ளார். எனினும் மக்கள், பரிசோதனைகள், சிகிச்சை மற்றும் தனிமைப்படுத்தும் கொள்கைகளுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டுமென அவர் வலியுறுத்தி உள்ளார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *