உறுதிகொண்ட நெஞ்சினாள் நூல் வெளியீடும் ஞாபகார்த்த விருது வழங்கலும் !

உறுதிகொண்ட நெஞ்சினாள் நூல் வெளியீடும் ஞாபகார்த்த விருது வழங்கலும் !

ஊடகவியலாளரும் சமூக சேவையாளருமான சிவஜோதியின் 51ஆவது பிறந்த தினத்தை முன்னிட்டு திருமதி ஹம்சகௌரி சிவஜோதியின் உறுதிகொண்ட நெஞ்சினாள் நூல் வெளியீடும் சிவஜோதி ஞாபகார்த்த விருது வழங்கும் நிகழ்வும், நாளை 20ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை முற்பகல் 10 மணிக்கு, கிளிநொச்சி திருநகரிலுள்ள லிற்றில் எய்ட் அரங்கில் இரு அமர்வுகளாக இடம்பெறவுள்ளது.

முதலாவது அமர்வில் கிளிநொச்சி, ஜெயந்திநகர், மீனாட்சி அம்மன் ஆலயப் பிரதமகுரு சிவஸ்ரீ கேஷ்வரநாத சர்மா மற்றும் கருணா நிலையத்தின் தலைமைக்குரு டானியல் ஆகியோர் ஆசியுரை வழங்கவிருப்பதுடன், தலைமையுரையை கிழக்கு மாகாணத்தின் சிரேஷ்ட கலை கலாசார அலுவலர் குணபாலன் நிகழ்த்துவார்.

இளையோரை விருத்தி செய்தல் எனும் தலைப்பில் சிறப்புரையை எழுத்தாளர் கருணாகரனும், சிவஜோதியின் நினைவுப் பகிர்வை சமத்துவக் கட்சியின் பொதுச் செயலாளர் முருகேசு சந்திரகுமாரும் வழங்கவுள்ளனர்.

இரண்டாவது அமர்வில் தலைமையுரையை செல்வி யாழ்.பல்கலைக்கழக கலைப்பீட முதலாம் வருட மாணவி வர்ஷனா வரதராசாவும், உறுதிகொண்ட நெஞ்சினாள் நூல் வெளியீட்டுரையை யாழ்.பல்கலைக்கழக மெய்யியல் துறை மாணவி இறுதி வருட மாணவி செல்வி விராஜினி காயாத்திரி இராஜேந்திரனும் ஆற்றவுள்ள நிலையில் நூலின் முதற் பிரதியை செல்வி அபிலாஷா தேவராஜாவும் பெற்றுக் கொள்ளவுள்ளார்.

இதேவேளை உறுதி கொண்ட நெஞ்சினாள் பிரதிபலிக்கும் பெண்ணியம் எனும் தலைப்பில், யாழ்.பல்கலைக்கழக முகாமத்துவ பீட முதலாம் வருட மாணவி செல்வி ஹார்த்தியாயினி இராஜேஸ்கண்ணாவும், உறுதிகொண்ட நெஞ்சினாள் பேசும் பெண் கல்வியும் அதன் இன்றைய நிலையும் எனும் தலைப்பில் யாழ்.பல்கலைக்கழக விஞ்ஞான பீட மூன்றாம் வருட மாணவி செல்வி மயூரகா ஸ்ரீஸ்கந்தராசாவும் உறுதிகொண்ட நெஞ்சினாள்களின் பெண்கள் தொடர்பான சமூகப் பார்வை எனும் தலைப்பில் ஆய்வாளரும் எழுத்தாளரும் மனிதம் அமைப்பின் உருவாக்குநர் சபை உறுப்பினருமான நிவேதா சிவராஜாவும் உரையாற்றவுள்ளனர். நிகழ்வின் இறுதியில், சிவஜோதியின் ஞாபகார்த்த நினைவு விருது வழங்கப்படவுள்ளது.

கலை இலக்கியச் செயற்பாட்டாளரும் ஊடகவியலாளருமான வைத்தீஸ்வரன் சிவஜோதி 2020ஆம் ஆண்டு 12ஆம் மாதம் 30ஆம் திகதி காலமானார். தேசிய கலை இலக்கியப் பேரவை, கொழும்புத் தமிழ்ச்சங்கம், கிளிநொச்சி கலை இலக்கிய நண்பர் வட்டம், மக்கள் சிந்தனைக்களம் – கிளிநொச்சி, நூலகம், இலக்கியச் சந்திப்புகள் ஆகியவற்றோடு இணைந்து பங்காற்றிய சிவஜோதி, நல்லதொரு நாடகக் கலைஞர். யாழ்ப்பாணம், கொழும்பு ஆகிய இடங்களில் பல நாடகங்களில் நடித்தவர். தினகரன் பத்திரிகையின் ஆசிரிய பீடத்தில் பணியாற்றியவர். இறுதியாக கிளிநொச்சியில் உள்ள Little Aid அமைப்பின் நிர்வாக இயக்குநராகச் செயற்பட்டு அந்த மக்களுக்கும், மாணவர்களுக்கும் பல்வேறு சமூகப் பணிகளை ஆற்றியவர்.

வைத்தீஸ்வரன் சிவஜோதியின் மறைவைத் தொடர்ந்து அவரது பிறந்ததினத்தன்று சிவஜோதி ஞாபகார்த்த விருதும் 1லட்சம் ரூபா பணப் பரிசும் நாடகத்துறை சார்ந்து வழங்கப்படுகின்றது. அந்த வகையில் இந்த ஆண்டும் இரண்டாவது முறையாக இந்த விருது வழங்கப்படவுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *