வருண் காந்தி குற்றவாளி – வேறு வேட்பாளரை நிறுத்த பாஜகவுக்கு தேர்தல் ஆணையம் அறிவுரை

20-varun-ganthi.jpgமத உணர்வைத் தூண்டும் வகையில் வருண் காந்தி பேசியது உண்மையே என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அவரை தேர்தலில் நிற்க பாஜக தலைமை அனுமதிக்கக் கூடாது என்றும் அது அறிவுறுத்தியுள்ளது. முன்னாள் மத்திய அமைச்சர் மேனகா காந்தியின் மகன் வருண் காந்தி. உ.பி. மாநிலத்தில் உள்ள தனது தாயாரின் தொகுதியான பிலிபித்தில் போட்டியிடுகிறார்.

சமீபத்தில் அங்கு நடந்த கூட்டத்தில் அவர் பேசுகையில், இஸ்லாமியர்களுக்கு எதிராக, துவேஷமாக பேசினார். கைகளை வெட்டுவேன், தலையை வெட்டுவேன் என்று அவர் பேசியது மத வெறியைத் தூண்டும் வகையில் அமைந்தது. இதையடுத்து வருண் காந்தி மீது காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் புகார் கூறின. இதுதொடர்பான சிடிக்களும் தேர்தல் ஆணையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டன.

தன் மீதான புகார்களை மறுத்தார் வருண் காந்தி. தனது பேச்சு திரிக்கப்பட்டு விட்டதாக அவர் கூறியிருந்தார். இந்த நிலையில் கடந்த 2 நாட்களாக வருண் காந்தி மீதான புகார்களை தேர்தல் ஆணையம் ஆராய்ந்தது. இதன் இறுதியில், வருண் காந்தி மத உணர்வுகளைத் தூண்டும் வகையில் பேசியது உண்மையே என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

இதுகுறித்து, தனது 10 பக்க உத்தரவில் தேர்தல் ஆணையம் கூறியுள்ளதாவது: இம்மாத தொடக்கத்தில் வருண் காந்தி பிலிபித் தொகுதியில் பேசிய பேச்சுகள், ஒரு குறிப்பிட்ட மதத்துக்கு எதிரான மிகவும் தரக்குறைவான, முற்றிலும் ஏற்க முடியாத பேச்சுகளாக உள்ளன.

மத உணர்வை தூண்டும்வகையில் பேசிய அவர், இந்த தேர்தலில் வேட்பாளராக நிற்க தகுதி அற்றவர். அவர் கோர்ட்டால் தண்டிக்கப்படாத சூழ்நிலையில், அவர் போட்டியிட சட்டப்படி தடை விதிக்க முடியாது என்று தெரியும். எனவே, வருண்காந்தியின் பேச்சில் உள்ள கருத்துகளை அங்கீகரிக்கவில்லை என்று பா.ஜனதா கூறி இருப்பதால், அக்கட்சி நடப்பு பாராளுமன்ற தேர்தலுக்கு வருண்காந்தியை வேட்பாளராக நிறுத்தக்கூடாது என்று தேர்தல் கமிஷன் எதிர்பார்க்கிறது என்று கூறப்பட்டுள்ளது.

வருண் காந்தி குற்றவாளி என்று மட்டுமே தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. ஆனால் கோர்ட் மூலமாக அவர் இன்னும் குற்றவாளி என்று சொல்லப்படாததால் அவருக்கு போட்டியிட தடை விதிக்கப்படவில்லை. அதேசமயம், அவரை நிறுத்தக் கூடாது என பாஜகவுக்கு அறிவுறுத்தியுள்ளது.

இதுகுறித்து பாஜக செய்தித் தொடர்பாளர் பிரகாஷ் ஜாவேத்கர் கூறுகையில், எந்த விதியின் கீழ் தேர்தல் ஆணையம் அறிவுரை கூறியிருக்கிறது என்று தெரியவில்லை. இது ஒரு அறிவுரைதான், உத்தரவு அல்ல என்று கூறினார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *