அமரதாஸின் ஒளி ஓவிய நூல்: சொன்ன சேதியும், சொல்லாத சேதியும் விசிலடிச்சான் குஞ்சுகளின் எதிர்ப்பும்


நூல் வெளியீடு – சொன்ன சேதி:
கோவிட் பெரும் தொற்று பற்றிய பயம் விட்டுப்போக லண்டன் தமிழ் அரசியல் அரங்கும் விறுவிறுப்படைய ஆரம்பித்து இருக்கின்றது. பிரித்தானிய அரசியல் அளவுக்கு தமிழ் அரசியல் சூடாகாவிட்டாலும் அது தன்னுடைய அளவில் சலசலப்பை ஏற்படுத்தத் தவறவில்லை. நீண்டதொரு இடைவெளிக்குப் பின் திரள் கலை, இலக்கிய குழுமம் நடத்திய “Through the Fire Zones: Photographs of Amarathas in Sri Lanka’s War Zones” என்ற அமரதாஸின் இலங்கை யுத்தம் தொடர்பான புகைப்பட நூலின் வெளியீட்டு விழா நடைபெற்றது. ஒக்ரோபர் 22இல் ஹரோ பப்ரிஸ்ற் சேர்ச்சில் மாலை ஐந்துமணிக்கு மேலாக நிகழ்வு ஆரம்பித்தது. பா நடேசன் நிகழ்ச்சியைச் தொகுத்து வழங்கினார். இந்நிகழ்வில் பிபிசி ஊடகவியலாளர் பிரான்ஸிஸ் ஹரிசன் கலந்துகொண்டிருந்தார். அவருக்கு நூலின் முதற்பிரதி அவருக்கே வழங்கப்பட்டது. விடுதலைப் புலிகளின் இரண்டாம் கட்டத் தளபதிகளுடன் மிக நெருக்கமாக இருந்தவர் பிரான்ஸிஸ் ஹரிசன். இவர் “Still Counting the Dead: Survivors of Sri Lanka’s Hidden War” என்ற நூலை வெளியிட்டு இருந்தமை குறிப்பிடத்தக்கது. இந்நூலில் பதிவு செய்யப்பட்ட ‘போர் வலயங்கள்’ பற்றிய படத்தை தந்தமைக்காக பிராஸிஸ் ஹரிசனுக்கு நூலில் நன்றி தெரிவிக்கப்பட்டு இருந்தது. லண்டன் புகைப்படப் படக் கலைஞரும் அரசியல் சமூக ஆர்வலருமான சுகுன சபேசன் தமிழில் இருந்த புகைப்படக் குறிப்புகளை ஆங்கிலத்திற்கு மொழிபெயர்த்தமைக்காக அவருக்கும் அந்நூலில் நன்றி தெரிவிக்கப்பட்டு இருந்தது.

தமிழ் முறைப்படி கூட்டம் தாமதமாக ஆரம்பித்தாலும் பேச்சாளர்கள் நெருக்கமான நேரத்தை கவனத்தில் எடுத்து தங்கள் கருத்துக்களை சுருக்கமாக முன்வைத்தனர். பிரான்ஸிஸ் ஹரிசன் இந்த யுத்தத்தில் இருந்து தப்பி வந்த அமரதாஸ் போன்றவர்கள் தங்கள் கதைகளைச் சொல்ல முன்வந்ததை பாராட்டியதோடு, இவ்வாறு தப்பித்து வந்தவர்களின் ஆக்கங்கள் பல வெளிவர வேண்டும் அவை பல தரப்பினரிடமும் கொண்டு சேர்க்கப்பட வேண்டும் என்று தெரிவித்தார்.

நூலகவியலாளர் என் செல்வராஜா, புகைப்படக் கலைஞர் கெவின் காட்டரின் சூடானின் வறுமையை வெளிப்படுத்திய ஒரு ‘பெண் குழந்தையின் மரணத்திற்காகக் காத்திருந்த கழுகு’ புகைப்படம் பற்றிச் சுட்டிக்காட்டி அப்புகைப்படக் கலைஞர் அது ஏற்படுத்திய மன உளைச்சலில் தற்கொலை செய்து கொண்டமையைச் சுட்டிக்காட்டினார். ஒளி ஓவியங்கள் பற்றிய பதிவுகளைச் சுட்டிக்காட்டியதுடன் அவற்றின் அவசியத்தையும் வலியுறுத்தினார்.

அதே போல் வியட்நாம் யுத்தத்தில் அமெரிக்க நேபாம் குண்டினால் நிர்வாணமாக ஓடிய சிறுமியின் புகைப்படம் அமெரிக்காவினதும் உலகினதும் கண்களைத் திறக்க வைத்தது பற்றி அரசியல் கலை இலக்கிய விமர்சகர் யமுனா ராஜேந்திரன் சுட்டிக்காட்டினார். அவர் தனதுரையில் புகைப்படக் கலைஞரின் அறம் பற்றி பேசியதுடன் அமரதாஸ் அதனை கவனமாகக் கையாண்டிருப்பதாயும் குறிப்பிட்டார். புகைப்படம் என்பது ஒரு வரலாறல்ல என்று குறிப்பிட்ட யமுனா ராஜேந்திரன் அது ஒரு வரலாற்றின் சாட்சியம் என்று குறிப்பிட்டார். ஒரு படம் ஒரு சம்பவத்தை, ஒரு காலத்தை சொல்லக்கூடியது என்பதைச் சுட்டிக்காட்டிய யமுனா ராஜேந்திரன் அமரதாஸ் அந்த மக்களோடு வாழ்ந்து உருவாக்கிய இப்படங்கள் அந்த யுத்த காலத்தின் சாட்சியங்கள் என்றும் அதனை அமரதாஸ் திறம்பட பதிவு செய்திருப்பதாகவும் தெரிவித்தார்.

அமரதாஸின் ஒளி ஓவியங்கள் ஓடும் படத்தின் தன்மையைக் காட்டுவதாக சுகுன சபேசன் தெரிவித்தார். இப்படங்கள் கோர்வைப்படுத்தப்பட்டிருக்க வேண்டும் எனவும் சுகுன சபேசன் தெரிவித்தார்.

இந்நூல் விமர்சனங்களுக்கு அப்பாற்பட்டது என்று தமிழ் சொலிடாரிட்டி அமைப்பின் முக்கியஸ்தரும் சமூக, கலை இலக்கியச் செயற்பாட்டாளருமான சேனன் குறிப்பிட்டார். அமரதாஸ் ஏனைய சர்வதேச புகைப்படக் கலைஞர்கள் போலல்லாது அந்த மக்களோடு மக்களாக வாழ்ந்து அந்த மக்களின் வாழ்வை தன் புகைப்படங்களினூடாகப் பதிவு செய்துள்ளார். என்ன தான் ஜனநாயம் கருத்துச் சுதந்திரம் என்று சொன்னாலும் உண்மையில் அவற்றுக்கு மதிப்பளிக்கப்படுவதில்லை. பிபிசி போன்ற ஊடகங்கள் ஓடுக்கப்பட்டவர்கள் பக்கம் நிற்பதில்லை. இந்தப் படங்கள் எமக்கு அவசியமான ஆவணங்கள். எம்முடைய பொக்கிஸங்கள் என்றும் அதனால் இந்நூல் விமர்சனங்களுக்கு அப்பாற்பட்டது என்றும் சேனன் அந்நிகழ்வில் குறிப்பிட்டார்.

நூலகவியலாளர் என் செல்வராஜா ஒரு ஆவணக்காப்பாளர் என்ற ரீதியில் நீண்ட கால நோக்கில் நூலை விமர்சனப் பார்வையில் அணுகி இருந்தார். நூலிற்கு ஆங்கிலத்தோடு சேர்த்து தமிழ் தலைப்பையும் வழங்கத் தவறியது பிற்காலத்தில் தமிழ் நூல் சேகரிப்பில் இந்நூல் தவறவிடப்பட்டுவிடும் அபாயத்தைச் சுட்டிக்காட்டினார். அமரதாஸ் ஒரு கவிஞராக இருந்தும் புகைப்படங்களுக்கான குறிப்புகளை வழங்கத் தவறியிருப்பதையும் அவர் அங்கு சுட்டிக்காட்டினார்.

பேச்சாளர்களின் உரைகளின் முடிவில் கலந்துரையாடல் இடம்பெற்றது. இக்கலந்துரையாடலுக்கு முன்னதாகவே நிகழ்ச்சித் தொகுப்பாளர் பா நடேசன், நூலகவியலாளர் என் செல்வராஜா ஆகியோருக்கு இந்நூல் தொடர்பாக தொலைபேசியில் பல அதிருப்திகள், நெருக்கடிகள் வழங்கப்பட்டிருந்தது. அதனை நிகழ்வின் கலந்துரையாடலின் போது காணக்கூடியதாக இருந்தது. நூலில் தொகுக்கப்பட்ட படங்கள அமரதாஸ்க்கு மட்டும் சொந்தமானவை அல்ல, தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான கருத்துக்கள் உள்ளது, எனப் பலவாறான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன. இப்படங்களை கருப்பு வெள்ளையாக வெளியிட்டதன் மூலம் அப்படங்கள் ஏற்படுத்திய தாக்கத்தை அமரதாஸ் மழுங்கடித்துவிட்டார் என்ற குற்றச்சாட்டுக்களும் முன்வைக்கப்பட்டது.

இவை பற்றி அமரதாஸ் குறிப்பிடுகின்ற போது 2019இல் வரவிருந்த இந்நூல் சில காரணங்களால் அப்போது வெளியிடப்படவில்லை என்றும் மேம்படுத்தப்பட்ட பதிப்பாக தற்போது வெளிவந்திருப்பதாகவும் குறிப்பிடுகின்றார். ‘கூட்டுக்களவாணிகள்’ சிலர் மோசமான உள்நோக்கத்துடன் சர்ச்சைகளை கிளப்பி வருவதாகவும் குற்றம்சாட்டியிருந்தார். நியாயம் பேச வேண்டிய சிலர் மௌனம் காத்ததாகவும் சிலர் மட்டும் தனக்கு தகுந்த நேரத்தில் ஆதரவளிப்பதாகவும் தெரிவித்து இருக்கின்றார். ஆனால் விசமிகளுடைய சதிகளுக்கு தான் பணியப் போவதில்லை என்றும் அமரதாஸ் தெரிவிக்கின்றார். தான் பாதுகாத்து வைத்திருக்கும்படி வழங்கிய படங்கள் கைமாறி, திருடப்பட்டு சில நபர்களால் அநாமதேயமாக வெளியிடப்பட்டதாகவும் அப்படங்களை வேறவரது படங்கள் போலக் காண்பிக்க முற்படுவதாகவும் அமரதாஸ் குற்றம்சாட்டுகின்றார்.

விசிலடிச்சான் குஞ்சுகளின் எதிர்ப்பு:
அமரதாஸ் தன்னுடைய அல்லது தன்னிடமிருந்த புகைப்படங்களின் உரிமையை பொதுமைப்படுத்த முன்வராததால் புலம்பெயர் புலிகளின் வெவ்வேறு பிரிவினருக்கும் அமரதாஸ்க்கும் இடையே கடுமையான முரண்பாடுகள் எழுந்தது. ஒளிப்படங்களின் உரிமைசார்ந்த பிரச்சினைகளுக்கு அப்பாலும் அமரதாஸ் மீது பல குற்றச்சாட்டுகளை புலம்பெயர் புலி விசிலடிச்சான் குஞ்சுகள் வைக்கின்றன. ஒளிப்படங்களை இரத்தமும் சதையுமாக வெளியிட்டு இருந்தால் உணர்ச்சியைத் தூண்டிவிட்டு தங்கள் அரசியலுக்கு அதனைப் பயன்படுத்தலாம் என்பது அவர்களுடைய விருப்பம்.

மேலும் அமரதாஸ் இறுதி யுத்தத்தை ஒரு இனஒழிப்பு யுத்தமாக சொல்லவில்லை என்ற குற்றச்சாட்டும் உள்ளது. அதற்கு அமரதாஸ் முன்வைக்கின்ற விளகம் புரிந்துகொள்ளக் கூடியதே. நானும் இலங்கை அரசாங்கம் தமிழினவொழிப்புச் செய்ததாக நிரூபிக்க வேண்டும் என்று தான் விரும்புகிறேன். ஆனால் சர்வதேச அமைப்புகள் இன்னமும் அதனை ஏற்றுக் கொள்ளாததால் நான் அதனை இனவொழிப்பு யுத்தமாக குறிப்பிடவில்லை என்று குறிப்பிட்டார்.

அமரதாஸ் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரானவர் அல்ல. அவருடைய செயற்பாடுகள், எழுத்துக்கள் அவரை ஒரு தேசியவாதியாகவே உருவகப்படுத்துகின்றது. ஆனால் அமரதாஸ் விசிலட்டிச்சான் குஞ்சுகள் போன்று புலிகளுடைய அனைத்து நடவடிக்கைகளையும் கொண்டாடவில்லை. அமரதாஸ் அறிமுகவுரையில் “ஒரு போராட்டத்திலே போருக்குரிய நாசகாரப் பண்புகள் தலையெடுக்கக் கூடும். ஆகவே போராட்டத்திலும் போர்சார்ந்த குற்றங்கள் நிகழ வாய்ப்பிருக்கிறது. போரை ஒருவர் எதிர்ப்பது போராட்டத்தை எதிர்ப்பதாகாது. ஒரு போராட்டத்திலே தலையெடுக்கக்கூடிய நாசகாரப் பண்புகளை எதிர்ப்பதும் போராட்டத்தை எதிர்ப்பதாகாது. போரும் போராட்டமும் எப்படி உருவாக்கப்படுகின்றன எப்படி முன்னெடுக்கப்படுகின்றன என்று ஆராய்ந்து பார்க்க வேண்டியது அவசியம்” எனக் குறிப்பிடுகின்றார். தமிழீழ விடுதலைப் புலிகளையும் அவர்களது போராட்டத்தையும் கேள்விக்கு இடமில்லாமல் ஏற்றுக்கொள்ளாத அமரதாஸின் குறிப்புகள் விசிலடிச்சான் குஞ்சுகளை உசுப்பிவிட்டதில் எவ்வித ஆச்சரியமும் இல்லை.

தமிழீழ விடுதலைப் புலிகளின் பலாத்கார ஆட்சேர்ப்பு, மக்கள் தஞ்சமடையும் இடங்களில் இருந்து தாக்குதலை நடத்துவது, கூடுதலான அழிவை ஏற்படுத்தும் வகையிலான மூன்றாம்தர யுத்த தந்திரங்கள், மக்களை தங்கள் காவலரன்களாக பயன்படுத்தியமை போன்ற பல விடயங்களை இந்த ஒளி ஓவியங்கள் வெளிப்படுத்தவில்லை. இந்நூலில் அமரதாஸ் இறுதி யுத்தத்தில் ஒரு இலட்சத்திற்கும் அதிகமானவர்கள் கொல்லப்பட்டதாக குறிப்பிடுகின்றார். ஒருவரின் இறப்பே மிகக் கூடுதலானது. ஒரு லட்சம் பேர் இறந்திருக்க வேண்டும் அதற்கு ஆயிரம் ஆயிரம் படங்களின் சாட்சியம் தேவை என்று எண்ணத் தேவையில்லை. ஆதாரமற்ற கதையாடல்கள் இருக்கின்ற உண்மையையும் மழுங்கடிக்கச் செய்துவிடும். உண்மையை ஆதாரங்களோடு வெளிக்கொணர்வதே எமது நியாயங்களை முன்வைப்பதற்கான வழி. மிகைப்படுத்தல்கள் அவசியமற்றது.

சொல்லாத சேதி:
அமரதாஸ் சொல்லத் தவறிய விடயங்களே அவர் தொடர்பான பெரும் சர்ச்சையை ஏற்படுத்தக் காரணம். அமரதாஸினுடைய முழுப்பெயர் அல்லது குடும்பப் பெயரின் முதல் எழுத்துக் கூட அவருடைய நூலில் பதிவு செய்யப்படவில்லை. அவருடைய வைட்விஸன் – wide vision இணையத்தில் அவரைப் பற்றிய பக்கத்தில் கூட அமரதாஸ் தன்னை அறிமுகம் செய்யத் தவறி இருக்கின்றார். அல்லது அறிமுகப்படுத்த விரும்பவில்லை. இப்புகைப்பட நூலை பிரான்ஸிஸ் ஹரிசன் முதல் எல்லோருமே மிக முக்கியமான ஆவணமாகவே கருதுகின்றனர். சேனன் ஒரு படி மேலே சென்று அதனை தமிழர்களின் பொக்கிசம் என்று சுட்டிக்காட்டி இருக்கின்றார். ஆனால் இந்த ஒளி ஒவியங்களைத் தாங்கிய இந்நூல் அது ஆவணமாவதற்கு வேண்டிய முக்கிய அம்சங்களைத் தவறவிட்டு இருக்கின்றது. அமரதாஸ் தன்னிடம் இன்னும் சில ஆயிரம் படங்கள் இருப்பதாகக் கூறுகின்றார் அவற்றை மேலும் ஓரிரு நூல்களாக வெளியிடத் திட்டமிட்டு இருப்பதாகவும் குறிப்பட்டுள்ளார். அதனால் இதே போல் எதிர்காலத்தில் அந்நூல்களை வெளியிடாமல் இருக்க இதனைப் பதிவு செய்கின்றேன்.

அமரதாஸின் புகைப்பட நூல் ஒரு ஆவணமாக கருதப்பட வேண்டுமானால் அதற்கான அந்த அறத்தை அந்நூல் கொண்டிருக்க வேண்டும். அமரதாஸ் தான் யார் என்பதை வெவ்வேறு காரணங்களுக்காக வெளிப்படுத்துவதைத் தவிர்த்து இருக்கின்றார். இதன் மூலம் அவர் படைப்பின் நம்பகத் தன்மையையும் நேர்மைத் தன்மையையும் கேள்விக்கு உள்ளாக்கி உள்ளார். இதன் மூலம் அமரதாஸ் மிகத் துரதிஸ்டமான நிலையை தனக்கு ஏற்படுத்தி உள்ளார்.

அமரதாஸ் தமிழீழ விடுதலைப் புலிகளில் போராளியாக இணைந்து போராடியவர் என்றும் இலங்கை – இந்திய ஒப்பந்த காலத்தில் புலிகளால் மரண தண்டனைக்கு உட்படுத்தப்பட்ட மாத்தையா மற்றும் பதவி பறிக்கப்பட்ட யோகி தரப்பினருடன், யோகிக்கு நெருக்கமாக இருந்ததாகவும், அப்போது அமரதாஸின் இயக்கப்பெயர் இளம்திரையன் என்றும், லண்டனில் தலைமைச் செயலகம் என்று இயங்கும் அமைப்பின் முக்கியஸ்தர் ஒருவர் தெரிவிக்கின்றனர். இவர் யோகியின் மெய்ப் பாதுகாப்பாளராக இருந்ததாகவும் அவர் கூறுகின்றனர். ஆனால் சுயாதீனமாக அதனை உறுதிப்படுத்த முடியவில்லை.

மாத்தையா இந்திய அமைதிப் படையுடனான யுத்தத்தை விரும்பி இருக்கவில்லை என்றும் இந்திய உளவுத்துறையோடு தொடர்பில் இருந்ததாகவும் அவர் மீது குற்றம்சாட்டப்பட்டு இருந்தது. இத்தகவலை யோகி அறிந்திருந்தும் இயக்கத்துக்கு தெரிவிக்கவில்லை என்பதால் அவர் பதவியிறக்கப்பட்டார். இக்களையெடுப்பில் இவர்களுக்கு நெருக்கமானவர்கள் அல்லது விசுவாசமானவர்கள் என்று கருதப்பட்ட சிலர் மரண தண்டனைக்கு உட்படுத்தப்பட்டு இருந்தனர். அன்றைய காலகட்டத்தில் மாத்தையா மிகப்பெரும் படையணியை வைத்திருந்தமையும் அவர்களே தாக்குதல்களை முன்னின்று நடத்தியமையும் குறிப்பிடத்தக்கது.

அதன் பின்னும் தமிழீழ விடுதலைப் புலிகளோடு இணைந்திருந்த அமரதாஸ் யுத்தகளத்தில் (ஜெயசுக்குரு) தாக்குதலில் காலில் காயம்பட்டு இயக்கத்தின் இராணுவ நடவடிக்கைகயில் இருந்து விடுவிக்கப்பட்டதாக கிளிநொச்சியில் இவரோடு கூட இருந்த நண்பர் தேசம்நெற்க்குத் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில் விடுதலைப் புலிகளில் காயம்பட்டவர்களுக்கு வழங்கப்படும் மறுவாழ்வு நடவடிக்கைகளில் புகைப்படக் கலைஞர்களை உருவாக்குவதும் ஒன்று என்றும் அவ்வாறான பல புகைப்படக் கலைஞர்கள் வன்னியில் உருவாக்கப்பட்டதாகவும் அந்நண்பர் தேசம்நெற்க்குத் தெரிவித்தார். தன்னுடைய நூலில் கிளிநொச்சியில் இயங்கிய ஊடக அறிவியற் கல்லூரியில் புகைப்பட ஊடகத்துறையை கற்பித்ததாக அமரதாஸ் குறிப்பிட்டுள்ளார். தமிழீழ விடுதலைப் புலிகளைத் தவிர வேறு யாரும் அங்கு அதனைச் செய்திருக்க வாய்ப்பில்லை.

மேலும் தன்னுடைய நூலில் “சர்வதேச பொது நிறுவனங்கள் வெளியேற்றப்பட்டிருந்த நிலையில், எந்த ஊடகங்களும் வெளியில் இருந்து போர் வலயங்களுக்குள் அனுமதிக்கப்பட்டிருக்கவில்லை. அப்போது விடுதலைப் புலிகள் இயக்கம் சார்ந்த சில ஊடகங்கள் மட்டுமே இறுதிப் போர் நடைபெற்ற வன்னிப் பகுதிக்குள் இயங்கிக் கொண்டிருந்தன” என்று குறிப்பிடும் அமரதாஸ் அடுத்த வரியில் இவ்வாறு குறிப்பிடுகின்றார் “நெருக்கடிகள் பலவும் நிறைந்திருந்த இறுதிப் போர்க்களத்தில், எனது ஊடகவியல்சார் நடவடிக்கைகள் அனைத்துமே சுயாதீனமானவையாக இருந்தன”. அமரதாஸின் இப்பதிவு அவர் தன்னை வலிந்து ஒரு சுயாதீனமான ஊடகவியலாளராகக் காட்ட முயல்கின்றார் என்பதனையே வெளிப்படுத்துகின்றது. விடுதலைப் புலிகளின் ஆட்சிக்காலத்தில் அவர்களுடைய கட்டுப்பாட்டுப் பகுதிகளில் சுயாதீனம் என்ற பேச்சுக்கே இடமில்லை. அமரதாஸ் விடுதலைப் புலிகளின் உறுப்பினராக இல்லாமல் புகைப்படப் பிடிப்பாளராகச் செயற்பட்டிருக்க வாய்ப்பேயில்லை.

அமரதாஸ் தமிழீழ விடுதலைப் புலிகாளல் பயிற்றுவிக்கப்பட்டு புலிகளுடைய நிதர்சனம் தொலைக்காட்சின் புகைப்படக் கலைஞராக செயற்பட்டதாக அக்காலத்தில் அமரதாஸ் உடன் நட்பாக இருந்த போராளிகள் தெரிவிக்கின்றனர். அமரதாஸினுடைய புகைப்படக் கருவியும் இயக்கத்தினாலேயே அவருக்கு வழங்கப்பட்டதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர். ஒரு தொழிலாளி ஒரு நிறுவனத்திற்காக பணியாற்றுகின்ற போது அவனது படைப்புகள் அவர்களுடைய ஒப்பந்தத்திற்கமைய அவை அந்நிறுவனத்திற்கே சொந்தமாகின்றது. இது அறிவுசார் சொத்துரிமைச் சட்டம் சார்ந்தது. ஆனால் அதனை உரிமை கோருவதற்கு தமிழீழ விடுதலைப் புலிகளோ, நிதர்சனம் தொலைக்காட்சியோ இன்றில்லை. அவ்வமைப்பில் இருந்தவர்களுக்கோ அதில் பணியாற்றியவர்களுக்கோ அதனை உரிமை கோருவதற்கான எந்தச் சட்ட உரிமையும் கிடையாது. ஆனால் அமரதாஸ் உணர்வு ரீதியாக அதனை பொறுப்புணர்வுடன் கையாண்டு இருந்திருக்க வேண்டும். அப்படிச் செய்திருந்தால் அவருக்கு இன்று ஏற்பட்டுள்ள இந்நிலையைத் தவிர்த்து இருக்கலாம்.

2019 இல் நோர்வே தமிழ் சங்கம் இந்நூலை வெளியிடுவதற்கு உடன்பட்டு நூலையும் பதிப்பித்து இருந்தது. ஆனால் அப்பதிப்பில் புகைப்படத்திற்கான உரிமையை அமரதாஸிற்கு அல்லாமல் போராளிகளின் வெளியீடாக நோர்வே தமிழ் சங்கம் குறிப்பிட்டு இருந்தது. இதற்குப் பின்னணியில் தமிழ் சமூகம் மையம் TCC – Tamil Community Centre இருந்ததாகக் கருதப்பட்டது. ஒளிப்படங்களுக்கான தன்னுடைய உரிமையை நோர்வே தமிழ் சங்கம் நூலின் பதிப்பில் நீக்கியதற்கு எதிராக அமரதாஸ்; நோர்வே தமிழ் சங்கத்தை நீதிமன்றத்துக்கு கொண்டு சென்று அதில் வெற்றியும் பெற்றார். நீதிமன்றத்தில் வென்ற அமரதாஸினால் மக்கள் மன்றத்தை வெற்றிகொள்ள முடியுமா?

புலம்பெயர் தேசம் தன்னுடைய முதலாளித்துவ நோக்கில் தனிமனிதனின் நலன்களை முன்நிறுத்துகின்ற சட்டங்களையே கொண்டுள்ளது. உணர்வு ரீதியான, அறிவியல் ஒழுக்கம் சார்ந்த பண்புகள் பலவீனமான தேசத்தில் அனைத்து விடயங்களுமே சட்ட ரீதியாக அணுகப்பட வேண்டியதாகவே உள்ளது. அந்த வகையில் அமரதாஸின் ஒளிப்படங்கள் சட்டரீதியாக அவருடையதாகவே இருக்கலாம். ஆனால் அது மட்டும் போதுமானதா? என்றால் என்னைப் பொறுத்தவரை இல்லையென்றே சொல்வேன். உணர்வு ரீதியாகவும் அறிவியல் ஒழுக்கம், சார்ந்து தார்மீகக் பண்புகள் – அறம் கடைப்பிடிக்கப்பட்டிருக்க வேண்டும். அமரதாஸ் தான் யாரென்ற உண்மையை வெளிப்படுத்தி இருந்தால் அவருடைய இந்நூலுக்கு அது இன்னமும் வலுச்சேர்த்து இருக்கும் என்றே நம்புகின்றேன். தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைமைகள் பல்வேறு தவறுகளை விட்டிருந்தபோதும் அதிலிருந்த போராளிகளின் அர்ப்பணிப்பை மறுக்கவோ நிராகரிக்கவோ முடியாது. தமிழீழ விடுதலை புலிகளில் உறுப்பினராக இருப்பதோ, தமிழீழ விடுதலைப் புலிகளிடம் புகைப்படப் பயிற்சி பெற்றதோ, நிதர்சனம் தொலைக்காட்சியில் பணியாற்றியதோ தவறோ குற்றமோ அல்ல. ஆனால் அவற்றை இருட்டடிப்புச் செய்வது அவணப் பதிவின் நம்பகத் தன்மையைக் கேள்விக்கு உள்ளாக்க வழி செய்துள்ளது.

இச்சட்டம் சார்ந்த விவாதங்களுக்கு அப்பால் ஒரு ஆவண ஒளிப்படத் தொகுப்பு எப்படி வெளியடப்படக்கூடாது என்பதற்கு அமரதாஸின் இந்நூலும் ஒரு உதாரணமாக இருக்கும். அதற்காக இந்நூலின் ஒளிப்படச் சாட்சியங்களை நான் நிராகரிப்பதாகவோ அல்லது அமரதாஸின் அர்ப்பணிப்பை நிராகரிப்பதாகவோ அர்த்தமில்லை. ஒரு படம் ஆயிரம் வாரத்தைகளுக்குச் சமமானது என்று சொல்கின்ற போது அமரதாஸ் 450 படங்களைக் கொண்ட ஒரு ஆவணத்தை எவ்வித ஒழுங்கமைப்பும் குறிப்பும் இன்றி ‘கும்பையாகக் கொட்டியுள்ளார்’ என்றே எண்ணத் தோண்றுகின்றது. இது அவர் தெரியாமல் விட்ட தவறு அல்ல. தெரிந்துகொண்டே செய்த தவறு அல்லது சோம்பேறித்தனம். “அனைத்து ஒளிப்படங்களுக்குமான விரிவான குறிப்புகள் அல்லது தலைப்புகள் அவசியமில்லை எனக் கருதுகிறேன்” என்று தன்னுடைய நூலில் அமரதாஸ் குறிப்பிட்டுள்ளார்.

வன்னியில் நடைபெற்ற இறுதி யுத்தம் 2006இல் மாவிலாறு அணை மூடியதில் இருந்து 2009 மே 19 பிரபாகரனின் உடல் கண்டெடுக்கப்பட்டவரை நீண்டது. அக்காலத்தில் மக்கள் அணியணியாக இடம்பெயர்ந்த வண்ணமே இருந்தனர். ஒரு ஒளிப்படத்திற்கு அதன் அடிக்குறிப்பு மிக மிக அவசியமானது. ஒவ்வொரு ஒளிப்படமும் பலநூறு சிந்தனைகளை தூண்டக் கூடியவை. அடிக்குறிப்புகள் தான் அவ்வொளிப்படத்தை அந்தக் காலத்தோடும் அந்தச் சூழலோடும் அப்பதிவை பிணைத்துக் கொள்ளும் .

நூற்பது ஆண்டுகளுக்கு முன் எரிக்கப்பட்ட யாழ்ப்பாண நூலகம் எந்த நாளில் எரிக்கப்பட்டது என்ற சர்ச்சை நூலகவியலாளர் என் செல்வராஜா மே 31 1981 இரவு என்று உறுதிப்படுத்தும் வரை சர்ச்சையாகவே இருந்தது. அதனை மறுப்பவர்களும் இல்லாமல் இல்லை. இந்நிலையில் படம் பற்றிய அடிக்குறிப்புகள், படம் எடுக்கப்பட்ட திகதி, படம் எடுக்கப்பட்ட இடம் என்பவற்றைக் குறிப்பிடாமல் எவ்வித ஒழுங்கமைப்பும் இன்றி இவ்வொளிப்படங்களை வெளியிட்டிருப்பதன் மூலம் அமரதாஸே தனது நூலுக்கான மதிப்பை குறைமதிப்பீடு செய்துள்ளார்.

இந்நூலில் அமரதாஸ் தோண்றுகின்ற பத்துக்கும் மேற்பட்ட படங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளது. அப்படங்கள் அமரதாஸ் எடுத்த படங்களுக்கு நிகராக கனதியானதாகவும் உள்ளது. அப்படங்களை நிச்சயமாக அமரதாஸ் எடுக்கவில்லை. அப்படங்களை அமரதாஸ் போன்ற ஒரு புகைப்படக் கலைஞரே எடுத்திருக்க வேண்டும். போர் வலயங்கள் கொண்ட ஒரு சாதாரண இலங்கையின் வடக்குப் பகுதியின் படத்தை (இதனை கூகிள் சேர்ச்சில் தேடியே எடுத்திருக்க முடியும். எங்கிருந்து எடுக்கப்பட்டது என்பதை நூலில் பதிவு செய்திருக்கலாம்.) தந்ததாக பிரான்ஸிஸ் ஹரிசனுக்கு நன்றி தெரிவித்து இருக்கிறார் அமரதாஸ். ஆனால் இப்படம் பிரான்ஸிஸ் ஹரிசனுக்கு உரிமையானதும் அல்ல. அப்படியிருந்தும் இந்நூலில் அவருக்கு நன்றி சொல்லப்பட்டுள்ளது. ஆனால் யுத்த பிரதேசத்திற்குள் தன்னுடைய படத்தை எடுத்தவருக்கு அல்லது எடுத்தவர்களுக்கு அமரதாஸ் நன்றி தெரிவிக்கவிலை. அவர்களைப் பற்றிய எந்தக் குறிப்பும் இல்லை.

உண்மைகள் சில சமயங்களில் கசக்கும். ஆனால் அவை அடுத்த படிகளுக்கு எம்மை இட்டுச் செல்லும். அடுத்த ஒளி ஓவிய நூல்களை வெளியிடுவதற்கு முன் அமரதாஸ் புகைப்படக் கலை பற்றிய தனது புரிதலையும் ஆழத்தையும் வளர்த்துக்கொள்வது மிக அவசியம். புகைப்படக் கலையின் நுட்பங்களைத் தெரிந்திராத எனக்கு இந்த ஒளி ஓவியங்களின் மதிப்பை அல்லது அதன் ஆழத்தை அமரதாஸ் உணரத்தவறிவிட்டாரோ என எண்ணத் தோண்றுகிறது. அமரதாஸினுடைய உழைப்பும் ஓவியங்களும் விலைமதிப்பிட முடியாதவை. அந்தக் காலத்தின் சாட்சியங்கள் அவற்றை அதன் பெறுமதி குன்றாது வெளிக்கொணர்வது மிக முக்கியமானது. அப்படங்களை மீண்டும் மீண்டும் பார்க்கின்ற போது ஒவ்வொரு தடவையும் அவை வேறொரு கதையைச் சொல்வது போல் தோண்றுகின்றது. எந்த விடயமாக இருந்தாலும் தொடர்ச்சியான முன்னேற்றம் அவசியம். அமரதாஸின் அடுத்த நூல்கள் தற்போது விடப்பட்ட தவறுகளைக் களைந்து நேர்த்தியுடன் வரவேண்டும் என்று எதிர்பார்க்கின்றேன்.

 

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *