மோதல் பகுதிகளிலிருந்து வெளியே வரும் மக்களுக்கு அவசர மருத்துவ, உளவியல் சிகிச்சைக்கான உதவி தேவைப்படுவதாக எல்லைகளற்ற மருத்துவர்கள் அமைப்பு நேற்று வியாழக்கிழமை தெரிவித்துள்ளது.
அத்துடன் தற்போதும் மோதல் பகுதியில் சிக்கியுள்ள 1 1/2 இலட்சம் மக்களின் நிலைமை தொடர்பாகவும் இந்த சர்வதேச அமைப்பு தீவிரமான கரிசனையை வெளிப்படுத்தியிருக்கிறது.
வன்னியிலிருக்கும் சுமார் 1 1/2 இலட்சம் மக்களின் நிலைமை தொடர்பாக எல்லைகளற்ற மருத்துவர்கள் அமைப்பு ஆழ்ந்த கவலை அடைந்திருப்பதாகவும் அங்கிருந்து வெளியேறியோரில் அநேகமானோருக்கு சத்திர சிகிச்சை மேற்கொள்ளப்பட வேண்டி இருப்பதாகவும் அநேகமானவை சிதறல்களாலும் (ஆயுத) சுடப்பட்டதாலும் ஏற்பட்ட காயங்கள் என்றும் அந்த அமைப்பு தெரிவித்திருக்கிறது. எந்தத் தரப்பையும் அந்த அமைப்பு குற்றம் சாட்டவில்லை.
பலர் உறவினர்களையும் முழுக் குடும்பத்தினரையும் இழந்துள்ளனர். அவர்களுக்கு தமது குடும்பத்தினருடனோ நண்பர்களுடனோ தொடர்பு இல்லை. அவர்கள் எங்கு சென்றுவிட்டனர் என்பதும் உயிருடன் இருக்கின்றார்களா என்பதும் அவர்களுக்கு தெரியாது. 40 ஆயிரம் பேர் அங்கிருந்து வெளியேறி விட்டதாகவும் 70 ஆயிரத்திற்கும் குறைவானோரே வன்னிப்பகுதியில் இருப்பதாகவும் அரசாங்கம் கூறுகிறது. அரச கட்டுப்பாட்டுப் பகுதிக்கு வந்தவர்கள் இடைத்தங்கல் முகாம்களில் வைக்கப்பட்டுள்ளனர்.
காத்திருப்பதைத் தவிர அவர்களுக்கு வேறு எதுவும் இல்லை. முகாம்களில் வேலையோ, பாடசாலையோ இல்லை. சுயாதீனமான சகலவற்றையும் அவர்கள் இழந்துவிட்டனர். தமது அன்புக்குரியவர்களின் பாதுகாப்பு தொடர்பான தொடர்ச்சியான பீதியுடனேயே அவர்கள் இருக்கின்றனர் என்று எல்லைகளற்ற மருத்துவர்கள் அமைப்பு தெரிவித்திருக்கிறது.