போதைப்பொருள் பாவனை தொடர்பில் கைது செய்யப்படுவோரில் 25 சதவீதம் பேர் மாணவர்கள் – பகல் கனவு கண்டுகொண்டிருக்கும் கல்வி அமைச்சரும் ஆசிரியர்களும் !

இலங்கையில்  போதைப்பொருள் பாவைனை தொடர்பான அறிக்கைகள் மற்றும் தரவுகளின் படி “ போதைப்பொருள் பாவனை தொடர்பில் கைது செய்யப்படுவோரில் பெரும்பாலானோர் 30 வயதிற்குட்பட்ட இளைஞர்களே எனவும் அவர்களில் 20 அல்லது 25 சதவீதம் பேர் பாடசாலை மாணவர்களாாக அடையாளம் காணப்பட்டுள்ளார்கள்.” எனவும் சுட்டிக்காட்டுகின்றன.

இந்த நிலை வட-கிழக்கில் இன்னமும் மோசமடைந்துள்ளது. பாராளுமன்ற அமர்வுகளில் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட இது தொடர்பான பதற்றமான நிலை தொடர்பில் பாராளுமன்றில் பதிவு செய்திருந்தனர்.

போதைப்பொருள் ஒழிப்புக்கான  முறையான தீர்வுத்திட்டம் ஒன்றை கல்வி அமைச்சு முன்வைக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்ட நிலையில் இந்த போதைப்பொருள் ஒழிப்புக்கான கல்வி அமைச்சின் நடவடிக்கைகள் என்ன என்ற கேள்வி பாராளுமன்றின் ஏனைய உறுப்பினர்களாலும் அதிகமாக  விமர்சிக்கப்பட்டன. அண்மையில் பாராளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரதன தேரர் இது தொடர்பான கேள்வியை கல்வி அமைச்சரிடம்  எழுப்பியிருந்தார்.

இதற்கு பதிலளித்து கல்வி அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த உரையாற்றிய போது

“பாடசாலை மாணவர்களின் புத்தகப் பைகளை பரிசோதிக்கும் நடைமுறை மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளது. மேலும் எதிர்காலத்தில் இது தொடர்பான சுற்றறிக்கை ஒன்று வெளியிடப்படும் எனவும் பாடசாலை மாணவர்கள் மத்தியில் நுட்பமான வழிகளில் பல்வேறு போதைப் பொருட்கள் பரிமாற்றப்படுகின்றன எனவும்  இது தொடர்பில் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டிய தருணம் வந்துள்ளதாகவும்   கூறியிருந்தார்.  இதனை  தற்காலிகமான – வழமையான அமைச்சர்கள் வழங்கும் சராசரியான உறுதிப்பாடற்ற பதிலாகவே எடுத்துக்கொளள முடியும். தவிர இது பற்றி எந்த முன்னேற்றமும் ஏற்படப்போதில்லை என்பதையும் கல்வி அமைச்சரின் பதில் மூலமாக உணர முடிகிறது.

 

ஒப்பீட்டளவில் தெற்கை விட வட-கிழக்கில் வடக்கில் குறிப்பாக யாழ்ப்பாணத்தில் ஐஸ்போதைப்பொருள், ஊசி போதப்பொருள் பாவனை அசுர வளர்ச்சி கண்டு வருவதுடன் இதன் விளைவாக வாள்வெட்டு மற்றும் வன்முறை கலாச்சாரம் ஒன்றும் நமது பகுதிகளில்  மேலோங்கிக்கொண்டிருக்கின்றது. கடந்து முடிந்த குறுகிய கால இடைவெளியில் ஊசி போதைப்பொருள் பாவனையால் யாழ்ப்பாணத்தில் ஐந்து  இளைஞர்கள் வரையில்  உயிரிழந்துள்ளமையும் இங்கு நோக்கப்பட வேண்டியது. இது அண்மைய காலத்தில் போதைப்பொருள் பாவனையின் தீவிர தன்மையை நன்கு தெளிவுபடுத்துகிறது.

இலங்கையின் குறிப்பாக வட-கிழக்கு நகர்ப்புற இளைஞர்களிடையேயும் – மாணவர்கள் மத்தியிலும் தூள், ஊசிபோதை, ஐஸ் போதை பொருள் என இந்த போதைப்பொருள் சர்வசாதாரணமான விடயமாக மாறிக்கொண்டிருக்கின்ற நிலையில் இதனை தடுப்பதற்கான அடிப்படை  நடவடிக்கைகளில் கூட கல்வி அமைச்சோ – அரசாங்கமோ இறங்கவில்லை என்பதே ஆகக்கவலையான உண்மை.

பாடசாலை மாணவர்களின் புத்தகப்பைகளில் போதைப்பொருள் உள்ளனவா என சோதிப்பதை விட முக்கியமானது போதைப்பொருள் பாவனை தொடர்பான விழிப்புணர்வை மாணவர்கள் மத்தியில் ஏற்படுத்துவதாகும். இதற்கான எந்த  நடவடிக்கைகளையும் கல்வி அமைச்சு முன்னெடுக்க முனைவதாக தெரியவில்லை. மாணவர்கள தனதுகட்டுப்பாட்டிலுள்ள பாடசாலை நேரங்களில் எந்த பிழையும் நடந்து விடக்கூடாது என்பதில் மட்டுமே கல்வி அமைச்சர் கவலைப்படுவதாகவே அமைச்சரின் மேற்சொன்ன  கருத்தை எடுத்துக்கொள்ள முடிகிறது.

பாடசாலைகளில் போதைப்பொருள் கிடைக்காவிட்டால் என்ன மாணவர்களுக்கு பாடசாலைகளுக்கு வெளியில் கிடைக்க தான் போகிறது. இதற்கான தீர்வு பாதுகாப்பு நடவடிக்கைகளை தீவிரமாக்கி வெளிநாடுகளில் இருந்து போதைப்பொருட்கள் இலங்கையினுள் வருவதை தடுப்பது மட்டுமேயாகும் .

போதைப்பொருள் பாவனை கல்வி அமைச்சு மட்டுமே கவனம் செலுத்தி கட்டுப்படுத்துகின்ற விடயமல்ல என்பது கவனத்தில் கொள்ளப்பட வேண்டும். பாதுகாப்பு துறையினர் மிக விழிப்புடன் செயலாற்ற வேண்டும்.

தென்னிலங்கை பகுதியில் போதைப்பொருள் கடத்தல்காரர்கள் அடுத்தடுத்து கைது என்ற தகவல்கள் வெளியாகும். ஆனால் வட – கிழக்கில் அவ்வாறான செய்திகளை பார்ப்பதே அபூர்வம். போதைப்பொருள் மிதந்து வந்ததது – போதைப்பொருள் மீட்பு போன்ற செய்திகள் கிடைக்குமே தவிர கடத்தலில் ஈடுபட்டவர்கள்- விற்பனையாளர்கள் கைது என்ற செய்திகளை பார்ப்பதே அபூர்வமானது. திட்டமிட்ட வகையில் நமது பகுதி இளைஞர்களின் கவனம் வேறு திசைக்கு மாற்றப்படுகிறதா என்ற அச்சத்தையும் – சந்தேகத்தையும் இது ஏற்படுத்துகிறது. போதைப்பொருள் மாபியாவுக்கு வாலாட்டுவோராக வட – கிழக்கு காவல்துறை அதிகாரிகள் செயற்படாது எதிர்கால தலைமுறையை பாதுகாக்க இதயசுத்தியுடன் செயற்பட வேண்டும்.

இது தவிர பெற்றோர்களிடமும் – கிராமத்து இளைஞர்களிடமும் சமூக அமைப்புக்கள் போதைப்பொருள் பாவனைக்கு எதிரான இயக்கங்களை – கருத்துக்களை பரப்ப முன்வர வேண்டும். பெற்றோர் தமது பிள்ளைகளை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். இப்படியாக போதைப்பொருள் பாவனையற்ற சமூகத்தை உருவாக்க கல்வி அமைச்சு மட்டுமே நினைத்து முடியாது ஒட்டுமொத்த சமூகமுமே பாடுபடவேண்டிய தேவையுள்ளது.

இதனை கருத்தில் கொண்டு இந்த மாற்றத்துக்கான அழுத்தத்தையே கல்வி அமைச்சர் கொடுக்க வேண்டும். அதுவே காலத்தின் தேவையும் கூட. ஒவ்வொரு பாடசாலைகளும் – ஒவ்வொரு ஆசிரியர்களும் – ஒவ்வொரு பிள்ளைகளின் பெற்றோரும் இதன் தேவையை உணர்ந்து போதைப்பொருள் அற்ற எதிர்காலத்தை உருவாக்க முன்வரவேண்டும்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *