சிகிச்சைக் கான பயிற்சிகள் வழங்கப்படுவதை உறுதிப்படுத்துமாறு வலியுறுத்தி, பேராதனை பல்கலைக்கழக சுகாதார விஞ்ஞான பிரிவு இளநிலைப் பட்டதாரிகள் ,விரிவுரைகளை பகிஷ்கரிப்பதற்கான போராட்டத்தை திங்கட்கிழமை முதல் ஆரம்பித்துள்ளனர். வைத்திய சபையில் நிர்வாகத்தினால் வழங்கப்பட்டு வந்த மருத்துவப் பயிற்சிகள் இடைநிறுத்தப்பட்டதைத் தொடர்ந்து கடந்த ஜனவரி 30 ஆம் திகதி முதல், மாணவர்களின் சிகிச்சை வகுப்புகளுக்காக மூடப்பட்டிருந்த சுகாதார விஞ்ஞான பீடம், கடந்தவாரம் மீண்டும் திறக்கப்பட்டிருந்தது.
மருத்துவ பயிற்சிகளை மீண்டும் வழங்குவதற்கும் சுகாதார விஞ்ஞான பீடத்தை மீண்டும் இயங்கச் செய்வதற்குப் பல்கலைக்கழக அதிகாரிகள் மற்றும் உயர் கல்வி அமைச்சர் பேராசிரியர் விஸ்வவர்ணபால ஆகியோர் வாக்குறுதிகளை வழங்கிய போதும் அவர் கூறியது போன்று பணிகள் ஆரம்பிக்கப்படவில்லை என மாணவர் கவுன்சிலின் சிரேஷ்ட உறுப்பினர் ஒருவர் தெரிவித்தார்.
இரண்டரை வருடங்களுக்கு முன்னர் இந்த விஞ்ஞான பீடத்தில் 460 மாணவர்கள் கல்வியை தொடர்வதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. மூன்று பிரிவுகளாக மாணவர்களின் கல்வி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுவந்தன. இப்பிரிவு, விசேடமாக, தாதியர், மருத்துவ ஆய்வு கூட சேவை, கதிரியக்க சிகிச்சை, மருந்தகம், உடற்பரிசோதனை போன்றவற்றுக்கு பயிற்சி அளிப்பதற்காக ஆரம்பிக்கப்பட்டிருந்தது.
இதேவேளை, மாணவர்களை பயிற்சி நடவடிக்கைகளுக்கு அனுமதிப்பதை, வைத்தியசாலை பணிப்பாளர்கள் நிராகரித்துள்ளதாக சுகாதார விஞ்ஞான பீடாதிபதி, டாக்டர் சுலா குணசேகர தெரிவித்தார். அதேசமயம் சுகாதார அமைச்சின் அதிகாரிகளுடன் பலசுற்றுப் பேச்சுகளை மேற்கொண்டுள்ளதுடன் அவர்களிடமிருந்து சாதகமான பதிலை எதிர்பார்த்திருப்பதாக உயர்கல்வி அமைச்சர் பேராசிரியர் விஸ்வ வர்ணபால தெரிவித்தார்.
இவ்விவகாரம் தொடர்பாக, சுகாதார அதிகாரிகளுக்கெதிராக உயர்நீதிமன்றத்தில் பல்கலைக்கழக நிர்வாகம் வழக்கொன்றைத் தாக்கல் செய்துள்ளது. இந்த வழக்கு எதிர்வரும் 20 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது. இப்பிரச்சினை தொடர்பில், நீதிமன்றத்தின் முடிவைதான் எதிர்பார்த்துள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் காமினி சமர நாயக்க தெரிவித்தார்.