இலங்கை இராணுவத்தின் போர்க்குற்றங்கள் தொடர்பாக விசாரணை நடத்த வேண்டுமென ஐ.நா.வை ஞாயிற்றுக்கிழமை வலியுறுத்தியுள்ள விடுதலைப் புலிகள், தமது அமைப்பும் போர்க்குற்றங்களை இழைத்திருப்பதாக ஐ.நா. தெரிவித்திருக்கும் குற்றச்சாட்டுகள் தொடர்பாக எதனையும் குறிப்பிடவில்லை என்று பாகிஸ்தானின் “டெய்லி ரைம்ஸ்’ பத்திரிகை திங்கட்கிழமை குறிப்பிட்டுள்ளது. இது தொடர்பான விடுதலைப் புலிகளின் அழைப்பை இலங்கை அரசாங்கம் உடனடியாக நிராகரித்திருப்பதுடன், பிரிவினைவாதிகள் (புலிகள்) தொடர்பாகவே விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று தெரிவித்துள்ளது.
மீள பலத்தை அதிகரிக்கவே விரக்தி நிலையில் யுத்தநிறுத்தத்தை புலிகள் கோருவதாக அரசாங்கம் கூறுகிறது. தற்போது 35 சதுர கி.மீ.பரப்புக்குள் முடக்கப்பட்டிருக்கும் புலிகளை முழுமையாக ஒழிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டிருப்பதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.
இருதரப்பும் மேற்கொண்டுவரும் யுத்தமானது போர்க்குற்றத்தை ஒத்ததெனவும் மோதல் பகுதியில் சிக்கியுள்ள பல்லாயிரக்கணக்கான மக்கள் பாதுகாப்புடன் வெளியேறுவதற்காக இரு தரப்பும் மோதல்களை இடைநிறுத்த வேண்டும் என்றும் ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை வெள்ளிக்கிழமை தெரிவித்திருந்தார்.
இலங்கைப் படையினரின் செயற்பாடுகள் தொடர்பாக ஐ.நா. விசாரணை நடத்த வேண்டும் என்று புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் பா.நடேசன் வலியுறுத்தியதாக ஞாயிற்றுக்கிழமை இணையத்தள செய்திகள் தெரிவித்திருந்தன.
“பொதுமக்கள், அதிகாரிகள், உள்ளூர் நிவாரணப் பணியாளர்கள் மத்தியிலிருந்து ஆயிரக்கணக்கான சாட்சியங்கள் உள்ளன. பொதுமக்கள் மீதான தாக்குதலுக்கு ஐ.சி.ஆர்.சி.யே சாட்சியாகும்’ என்று அவர் கூறியதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
போர் வலயத்தில் நிரந்தரமான பிரசன்னத்தை மேற்கொண்டிருக்க அனுமதிக்கப்பட்டிருக்கும் ஒரேயொரு உதவி வழங்கும் அமைப்பு சர்வதேச செஞ்சிலுவைச் சங்கமாகும். அரசு அமைத்திருக்கும் பாதுகாப்பு வலயத்திற்குள் இராணுவம் ஷெல் தாக்குதல் நடத்துவதாகவும் அப்பகுதியிலுள்ள பொதுமக்கள் வெளியேற முயற்சிக்கையில் புலிகள் சுடுவதாகவும் சிறுவர்கள் உட்பட ஆட்களை பலவந்தமாக படைக்குத் திரட்டுவதாகவும் நவநீதம்பிள்ளை குற்றச்சாட்டுத் தெரிவித்திருந்தார்.
விடுதலைப் புலிகள் மீதான நவநீதம்பிள்ளையின் குற்றச்சாட்டுகள் தொடர்பாக நடேசன் எதனையும் குறிப்பிடவில்லை. இலங்கைப் பாதுகாப்புச் செயலாளர் பாலித கோஹண ராய்ட்டருக்கு தெரிவிக்கையில், போர்க்குற்றங்களுக்கு புலிகளே பொறுப்பு என்று கூறியிருக்கிறார்.சிறிய நிலப்பரப்புக்குள் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் இருக்கையில் அவர்களை மனிதக் கேடயங்களாக பயன்படுத்துவதும் ஆயுதங்களை வைத்துக்கொண்டு அவர்கள் வெளியே நகர அனுமதிக்காமல் இருப்பதும் சர்வதேச மனிதாபிமான சட்டத்தைக் கடுமையாக மீறும் நடவடிக்கையென நான் நினைக்கிறேன் என்று கோஹண கூறியிருக்கிறார்.