ஐக்கிய தேசியக் கட்சியை அழித்தொழிப்பதற்கு கட்சிக்குள்ளும் வெளியேயும் பெரும் சதி நடப்பதாக தெரிவிக்கும் எதிர்க்கட்சித்தலைவர் ரணில் விக்கிரமசிங்க, சதிக்காரர்களிடமிருந்து கட்சியைப் பாதுகாப்பதற்காக மக்கள் சக்தியை அணிதிரட்டி பலப்படுத்தப் போவதாகவும் சவால்களை எதிர்கொண்டு முறியடிக்கும் சக்தி தம்மிடம் இருப்பதாகவும் குறிப்பிட்டார். அரசியல் ரீதியில் பலவீனமடைந்துள்ள சக்திகளே இந்தச் சதித்திட்டத்தை மேற்கொண்டுவருவதாகவும் அதற்கு கட்சிக்குள்ளும் சிலர் துணைபோக முனைவதாகவும் ரணில் விக்கிரமசிங்க சுட்டிக்காட்டியுள்ளார்.
ஐக்கிய தேசியக்கட்சியின் தேர்தல் நிதியத்தை திங்கட்கிழமை ஆரம்பித்து வைத்துப் பேசுகையிலேயே எதிர்க்கட்சித்தலைவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். கட்சித் தலைமையகமான ஸ்ரீகொத்தாவில் நேற்று இந்த வைபவம் இடம்பெற்றது.கட்சியின் அமைப்பாளர்களும் உயர்மட்டத்தினரும் மேல்மாகாணசபைத் தேர்தலில் போட்டியிடும் கட்சி வேட்பாளர்களும் இதில் கலந்துகொண்டனர்.
எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க இங்கு தொடர்ந்து பேசுகையில் கூறியதாவது; தேர்தல்களில் ஏற்படக்கூடிய வெற்றி, தோல்விகளை வைத்துக்கொண்டு அரசியல் கட்சியொன்றின் வளர்ச்சியையும் பின்னடைவையும் எடைபோடமுடியாது. மிகப்பழைமையான ஜனநாயக அரசியல் கட்சியான ஐக்கிய தேசியக்கட்சி பலம் குன்றப்போவதில்லை. ஜனநாயக அரசியலில் வெற்றி தோல்வியென்பது சகஜமானது.கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது எமது கட்சி 48 இலட்சம் மக்களின் ஆதரவைப்பெற்றுள்ளது. ஐக்கிய தேசியக்கட்சி ஆதரவாளர்களின் வாக்குகளால் பிரதி நிதித்துவம் பெற்றவர்கள் சுயநலத்துக்காக கட்சியை காட்டிக்கொடுத்துப் பதவிகளை பெற்றுக்கொண்டனர். அவர்கள் வெளியேறினாலும் அவர்களுக்கு வாக்களித்த மக்கள் கட்சியை விட்டும் வெளியேறவில்லை. மக்கள் சக்தி ஐக்கிய தேசியக்கட்சியிடம் தொடர்ந்தும் காணப்படுகின்றது.
இந்த ஆண்டும் எதிர்வரக்கூடிய ஆண்டும் தேர்தல்களுக்கான ஆண்டாக காணப்படுவதால் கட்சியைப்பலப்படுத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளதை உணர்கிறோம். கட்சிக்கு மேலும் ஆதரவாளர்களை அணிதிரட்ட வேண்டும்.இதன் பொருட்டே தேர்தல் நிதியை ஆரம்பித்துள்ளோம்.
“ஆயிரம் ரூபா நிதி’ என்ற நிதித்திட்டத்தை இன்று ஆரம்பிக்கின்றோம். இரண்டு வாரங்களுக்கு தலைநகரிலும், நகர்ப்புறங்களிலும் இத்திட்டத்தை அமுல்படுத்திவிட்டு அடுத்த கட்டமாக கிராமப்புறங்களுக்குச் செல்லவிருக்கின்றோம். மக்களிடமிருந்து பெறப்படும் நிதியல்ல முக்கியம். அதனூடாக இணைத்துக் கொள்ளப்படும் மக்கள் சக்தியே முக்கியமானதாகும். கட்சி மீதான நம்பிக்கையை முழு நாட்டிலும் கட்டியெழுப்புவதுதான் மிக முக்கியமான நோக்கமாகும்.
அண்மைக்காலமாக ஐக்கிய தேசியக் கட்சியை அழித்தொழிப்பதற்கு சதிகள் இடம்பெற்றுவருகின்றன. அது கட்சிக்குள்ளிருந்தும் வெளியே இருந்தும் மேற்கொள்ளப்படுகின்றன. பலவீனப்பட்டுப் போய்க் கொண்டிருக்கும் வங்குரோத்து நிலைக்குத்தள்ளப்படும் சில சக்திகளே இந்தச் சதியின் பின்னாள் காணப்படுகின்றன.
இக்கட்சியை அழிப்பதற்கு எந்தச் சக்திக்கும் நாம் இடமளிக்கப் போவதில்லை. இந்த விடயத்தில் எத்தகைய நெருக்கடியையும் சவாலையும் எதிர்கொள்ளத் நான் தயாராகி இருக்கிறேன். ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை கொண்ட சகலரையும் ஒன்றுதிரட்டி நாட்டின் ஜனநாயகத்தைப் பாதுகாத்து விரைவில் இந்த மண்ணில் நல்லாட்சியொன்றை மலரச் செய்வதற்காக நாமனைவரும் ஒன்றுபட்டு அர்ப்பணிப்புடன் செயற்பட முன்வர வேண்டுமெனவும் ரணில் விக்கிரமசிங்க இங்கு அழைப்பு விடுத்தார்.