பயங்கர வாதத்தை முற்றாக ஒழிப்பதன் மூலமே ஐக்கிய நாடுகள் சபையினால் முன்வைக்கப்பட்டுள்ள சுகாதாரத்துறைக்கான மிலேனியம் அபிவிருத்தி இலக்குகளை அடைய முடியுமென வெளிவிவகார அமைச்சர் ரோஹித போகொல்லாகம தெரிவித்தார். கொழும்பில் நேற்று ஆரம்பமான ஐக்கிய நாடுகள் சபையின் பொருளாதார சமூக மன்றத்தின் பிராந்திய அமைச்சர்கள் மாநாட்டில் கலந்துகொண்டு வரவேற்புரை நிகழ்த்தும்போதே அவர் இவ்வாறு கூறினார்.
சுகாதார பாதுகாப்புக்கான நிதி உபாயங்கள் எனும் தொனிப்பொருளில் கொழும்பு, சினமன் ஹோட்டலில் நடைபெற்ற இம்மாநாட்டில் அமைச்சர் தொடர்ந்தும் குறிப்பிடுகையில், இலங்கை இந்த மிலேனியம் இலக்குகளை 2015ஆம் ஆண்டுக்கு முன்னர் அடைந்து விடும். சமூகநல அபிவிருத்திää சுகாதாரம் ஆகிய துறைகளில் நாடு நிலைநாட்டியுள்ள சாதனைகளினால் இந்த இலக்குகளை இலகுவாக அடைய முடியும்.
இலங்கையில் சமாதானம் ஏற்படுத்தப்பட்டதும் மக்களை வலுவடையச் செய்யும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தீர்க்கதரிசனம் மிலேனியம் அபிவிருத்தி இலக்குகளைப் பூர்த்தி செய்யும் ஒன்றாக அமையும்.
பாதுகாப்பு உட்பட பாரிய செலவினங்களுக்கு மத்தியிலும் நாட்டின் சுகாதாரத்துறையில் அரசு முக்கிய கவனம் செலுத்தியுள்ளது. மக்களின் நலனைக் கருத்திற்கொண்டு புலிகளின் கட்டுப்பாட்டிலுள்ள பிரதேசங்களுக்கும் மருந்துப் பொருட்கள்ää வைத்தியர்கள் மற்றும் தாதிமார்களை அனுப்பி சிறந்த சுகாதார சேவையை வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.
பொதுமக்களுக்கென அரசினால் அனுப்பப்படும் மருந்துகளை புலிகள் அபகரித்து அவற்றை தமது சொந்தப் பாவனைக்காக பயன்படுத்தி வருவதை அறிந்தும் அங்குள்ள மக்களின் நலனைக் கருத்திற்கொண்டு அரசு செயற்படுகிறது. பல சந்தர்ப்பங்களில் பல்வேறு ஆபத்துக்களைச் சந்திக்க நேர்ந்த போதும் தரை, கடல் மற்றும் ஆகாய மார்க்கங்களினூடாக அப்பகுதிகளுக்கு மருந்துப் பொருட்கள் அனுப்பப்பட்டுள்ளன. இத்தகைய பணிகளின்போது பல்தேசிய நிதி நிறுவனங்கள், வர்த்தக சமூகங்கள், தனியார் மற்றும் சிவில் அமைப்புக்கள் அரசுடன் இணைந்து செயற்பட்டு வருவதையும் இச்சந்தர்ப்பத்தில் குறிப்பிட வேண்டும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.