உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தில் இடம்பெற்ற ‘வற்’ வரி மோசடியுடன் தொடர்புடைய 200 வவுச்சர்களை திணை க்கள உயரதிகாரிகள் சிலர் அழித்துள்ளதாக மேற்படி மோசடி தொடர்பாக விசாரணை நடத்தும் ஜனாதிபதி ஆணைக் குழுவுக்கு தகவல் கிடைத்துள்ளது.
‘வற்’ வரி மோசடி தொடர்பான விசாரணை ஜனாதிபதி ஆணைக் குழுவின் தலைவரான ஓய்வுபெற்ற மேல் நீதிமன்ற நீதிபதி பரணகம முன்னிலையில் நேற்று நடைபெற்றது. ஆணைக் குழு முன்பாக சாட்சியமளித்த பிரதான சாட்சி ஒருவர் மேற்படி தகவல்களை வெளியிட்டுள்ளார். தற்பொழுது மேற்படி வவுச்சர்களில் 53 வவுச்சர்கள் மாத்திரம் எஞ்சியுள்ளதாகவும் சாட்சி கூறினார்.
‘வற்’ வரி மோசடியுடன் இறைவரித் திணைக்கள முன் னாள் ஆணையாளர் ஏ. ஏ. விஜேபால, பிரதி ஆணையாளர் இஸட். ஜயதிலக, கம்பியூட்டர் பிரிவு தலைவர் வத்தேதெனிய ஆகியோருக்கும் தொடர்பு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ‘வற்’ மோசடி தொடர்பாக தன்னை கைது செய்ய பொலிஸார் தயாராவதாக தகவல் கிடைத்ததையடுத்து வத்தேதெனிய தற்கொலை செய்துகொண்டதாகவும் சாட்சி இங்கு குறிப்பிட்டார்.
ஆனால் வத்தேதெனிய மாரடைப்பினால் இறந்ததாகவே தனக்கு தகவல் கிடைத்ததாக ஆணைக் குழு தலைவர் கூறினார். சாட்சியின் விசாரணையை சிரேஷ்ட அரச தரப்பு சட்டத்தரணி பீ. தொடவத்த நெறிப்படுத்தினார்.