பதவி நீக்கப்பட்ட பாகிஸ்தானின் பிரதம நீதியரசர் இப்திகார் சௌத்ரியை மீண்டும் அப்பதவியில் அமர்த்த அரசாங்கம் தீர்மாணித்துள்ளதாக பாகிஸ்தான் பிரதமர் யூசுப் ரஸா கிலானி தெரிவித்துள்ளார்.
இத்தீர்மாணத்தை இன்று பாகிஸ்தான் தேசிய தொலைக்காட்சியில் உரையாற்றும்போது உத்தியோகபூர்வமாக அறிவித்த பிரதமர் கிலானி, பிரதம நீதியரசர் இம்மாத இறுதியில் மீண்டும் பதவியில் அமர்த்தப்படுவார் எனக் கூறினார். பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷரீபின் ஆட்சியின்போது பிரதம நீதியரசர் இப்திகார் சௌத்ரி உட்பட 60 நீதிபதிகள் சேவையிலிருந்து நீக்கப்பட்டனர். இவர்களை மீண்டும் சேவையில் இணைத்துக்கொள்ளுமாறு வற்புறுத்தி கடந்த சில நாட்களாக பாகிஸ்தானில் எதிர்ப்புப் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷரீப் தலைமையில் எதிர்க் கட்சிகள் மற்றும் சட்டத்தரணிகள் ஏற்பாடு செய்திருந்த இந்த எதிர்ப்பு போராட்டங்கள் காரணமாக நாடு ஸ்திரமற்ற நிலையை நோக்கிச் செல்வதையடுத்தே பாகிஸ்தான் அரசாங்கம் இத்தீர்மாணத்தை மேற்கொண்டுள்ளதாக சர்வதேச செய்திகள் குறிப்பிடுகின்றன.