புலிகளின் பிடியிலிருந்து தப்பி யாழ்ப்பாணம் மற்றும் புதுக்குடியிருப்பு பிரதேசங்களை நோக்கி வருகை தந்த பொது மக்களை இலக்கு வைத்து புலிகள் மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் 9 வயது சிறுவன் கொல்லப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
புதுமாத்தளன் பிரதேசத்திலிருந்து நேற்று 5 படகுகள் மூலம் 66 பொதுமக்கள் தங்களது குழந்தைகளுடன் தப்பி வந்துள்ளனர். யாழ்ப்பாணத்தின் முனைப் பிரதேசத்தை நோக்கி வருகை தந்த இந்த சிவிலயன்களை இலக்கு வைத்து புலிகள் சரமாரியாக துப்பாக்கிப் பிரயோகம் செய்துள்ளனர். துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான படகில் வந்த தவநாயகம் தனூஷன் எனும் 9 வயது சிறுவன் படுகாயமடைந்து பின்னர் உயிரிழந்துள்ளார்.
புலிகளின் இத்துப்பாக்கிச் சுட்டில் 14 பொது மக்கள் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்களுள் ஐ.நா. வின் பெண் பணியாளரான சுதர்ஷினி தர்மிலா என்பவரும் அடங்குவதாக பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
23 ஆண்கள்,17 பெண்கள்,15 சிறுவர் மற்றும் 11 சிறுமியர் அடங்கலான இந்த 66 பேரையும் சுன்டிக்குளம்-வெற்றிலைக்கேணி கடற்பரப்பில் வைத்து கடற்படையினர் நேற்றுக் காலை பாதுகாப்பாக மீட்டு அழைத்துச் சென்றதாகவும் அமைச்சு மேலும் குறிப்பிட்டுள்ளது.