நாட்டிற்குள் டொலரை வர வழிவிடுங்கள்! உல்லாசப் பயணிகளுக்கு வழிவிடுங்கள்! – த.ஜெயபாலன்

நாட்டின் மொத்த உற்பத்தியில் 12வீதத்தை அதாவது 10 பில்லியன் டொலர்களை நாட்டிற்குள் கொண்டுவரும் உலாசப் பயணிகளுக்கு வழிவிடுங்கள். நாட்டின் பொருளாதாரம் நெருக்கடி நிலையைச் சந்திக்கிறது என்று போராடுபவர்கள் நாட்டின் பொருளாதார விருத்தியை முடக்குவது தீர்வு அல்ல.

இன்று எரிபொருட்களுக்கு தட்டுப்பாடு மற்றும் அத்தியவசிய பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டு இருப்பது அவற்றை கொள்வனவு செய்வதற்கான அந்நியச் செலவாணி இல்லாமையே. அதனால் நாட்டிற்குள் டொலரைக் கொண்டுவரக்கூடிய நடவடிக்கைகளை முடக்கிவிட வேண்டும். இக்கருத்துக்கு முற்றிலும் முரணாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நாட்டிற்குள் வரும் உல்லாசப் பயணிகள் காலிமுகத்திடலில் மட்டையைப் பிடித்து போராடலாம் என்ற வகையில் கருத்து வெளியிட்டுள்ளார்.

இப்பொழுது ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி நிலை நாங்கள் பயப்படும் அளவுக்கு ஆபத்தானது அல்ல. இச்சூழலை சாதகமாக்கவும் வாய்ப்பு உள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகள் வீட்டுக்குள்ளே முடங்கிக் கிடந்த வெளிநாட்டவர் தற்போது உலகம் சுற்ற விரும்புகின்றனர். இலங்கையில் ஏற்பட்டுள்ள நாணய ஒடுக்கும் அல்லது நாணயத்தின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள வீழ்ச்சி இலங்கையின் உல்லாசப் பயணத்துறைக்கு ஒரு வரப்பிரசாதம். உல்லாசப் பயணிகளை எங்கள் நாட்டுக்கு வந்து, குறைந்த செலவில் எம் நாட்டின் அழகை ரசியுங்கள். எங்கள் கலை கலாச்சாரங்களை அறியுங்கள் என்று உல்லாசப் பயணிகளுக்கு செங்கம்பள வரவேற்பளிக்க வேண்டும். அதை விட்டுவிட்டு போராடுகிறோம், எரிக்கிறோம், கொழுத்துகிறோம் என்பதெல்லம் கஞ்சி ஊத்தாது.

இரண்டு ஆண்டுகால கோவிட் முடக்கத்தில் உலக பொருளாதாரமே முடங்கிக் கிடந்தது. அந்த முடக்கத்தில் இருந்து மெல்ல எழ ரஷ்யா, உக்ரைன் மீது படைநகர்த்தி சர்வதேச அரசியல் – பொருளாதாரச் சூழலை முற்றிலும் மாற்றி அமைத்துள்ளது. இந்த நெருக்கடி நிலைக்குள் இருந்து மீள்வதற்கு எவ்வித திட்டமிடலும் இல்லாமல் ஜேவிபி இப்போராட்டத்தை மிகத் திட்டமிட்ட முறையில் நடாத்தி வருகின்றது. இந்தப் போராட்டம் இலங்கையின் பொருளாதார நெருக்கடி காரணமாக தன்னியல்பானதாக நடைபெற்றதாகச் சொல்லப்பட்டாலும் ஜேவிபிக்கு ஆதரவாகவே போராட்டம் நகர்கின்றது. ஜேவிபின் தவைரைத் தவிர ஏனைய கட்சித் தலைவர்கள் போராட்ட களத்திற்குள் அனுமதிக்கப்படவில்லை.

ஒரே நாளில் 30 பாராளுமன்ற உறுப்பினர்களின் வீடுகளை திட்டமிட்டு எரிக்கின்ற அளவுக்கு இலங்கையில் தன்னியல்பு தலைமைகள் கிடையாது.

முப்பது ஆண்டுகள் உலகின் மிக நவீன ஆயதங்களை வைத்து போராடிய விடுதலைப் புலிகளால் மே 19ற்குப் பின் ஒரு துப்பாக்கிச் சூட்டைக் கூட நடத்த முடியவில்லை. ஆகையால் நடந்த எரிப்புச் சம்பவங்களுக்குப் பின்னணியில் ஜேவிபி இல் இருந்து பிரிந்த அதிதீவிரவாதப் பிரிவாகச் செயற்பட்டுவரும் முன்னிலை சோசலிசக்கட்சி குமார் குணரட்ணம் மீதே மையம்கொள்கின்றது.

ஆனால் இடதுசாரித்துவம் பேசும் ஜேவிபியோ முன்னிலைவாத சோசலிசக் கட்சியோ இந்தப் பொருளாதார நெருக்கடியில் இந்தியா மற்றும் அமெரிக்காவின் பங்களிப்புப் பற்றி வாயே திறக்கவில்லை. சர்வசே நாணய நிதியம் உலக வங்கி பற்றி தொடர்ந்தும் மௌனமாகவே உள்ளனர். இவர்களின் தோழமைக் கட்சியாக அணுகக் கூடிய பிரித்தானியாவில் செயற்படும் தமிழ் சொலிடாரிட்டி அமைப்பினர் முன்வைத்த கோரிக்கைகள் தொடர்பாகவும் முன்னிலை சோசலிசக் கட்சி மௌனம் காக்கின்றது.

பிரித்தானியாவில் இருந்து இயங்கும் இடதுசாரி அமைப்பான தமிழ் சொலிடாரிட்டி என்ற அமைப்பு காலிமுகத்திடல் போராட்டத்திற்கு கொள்கையளவான ஆதரவை வழங்கிய போதும் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை நோக்கி பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்துள்ளது. அவை அனைத்துமே சர்வதேச நாணய நிதியத்த்தினதும் உலக வங்கியினதும் கொள்கைகளுக்கும் அவர்களுடைய நிபந்தனைகளுக்கும் முற்றிலும் எதிரானதாக உள்ளது. அனைத்து கடன்களையும் இரத்து செய்யுமாறு கோருவதோடு பெரு முதலாளிகளின் சொத்துக்கள் உட்பட ராஜபக்ச குடும்பத்தின் சொத்துக்களையும் பறிமுதல் செய்யக் கோருகின்றது. விவசாயிகளுக்காக மானியங்களை வழங்குவதுடன் மலையக தொழிலாளர்களின் நிலவுரிமையை உறுதி செய்யவும் கோருகின்றது. ஆனால் காலிமுகத்திடல் போராட்டம் இந்த நிபந்தனைகளைப் பற்றி எவ்வித கரிசனையும் கொண்டிருப்பதாகத் தெரியவில்லை.

ஒரு பொருளாதார நெருக்கடிக்காகப் போராடும் தன்னை தீவிர இடதுசாரியாக தக்கவைத்துக்கொள்ளும் ஜேவிபி மற்றும் முன்னிலை சோசலிசக் கட்சி எந்தவொரு இடதுசாரி பொருளாதாரக் கோசங்களையும் வைக்கவில்லை. மாறாக அரசியல் கோஷத்தை மட்டுமே வைக்கின்றனர்.

இதன் பின்னணி என்ன? ஜேவிபி, முன்னிலை சோசலிசக் கட்சி தற்போது விலைபோகத் தயாராகி விட்டதா? குமார் குணரட்ணம் முன்னிலை சோசலிசக் கட்சியயை உருவாக்கியதைத் தொடர்ந்து பின் புலம்பெயர்நாடுகளில் இருந்தும் பலர் முன்னிலை சோசலிசக் கட்சியின் – சமவுடமை இயக்கத்தில் தங்களை வெளிப்படையாக இனம்காட்டிக்கொண்டனர். குறிப்பாக பிரான்ஸில் இடதுசாரிப் புயல் இரயாகரன், பிரித்தானியாவில் புதிய திசைகள் மற்றும் பல இடதுசாரி சிந்தனையுடையவர்களும் தங்களை முன்னிலை சோசலிசக்கட்சியுடன் அடையாளம் காட்டினர்.

ஆனால் தமிழ் சொலிடாரிட்டி தவிர்ந்த ஏனை இடதுசாரிக்குழுக்கள் சர்வதேச நாணய நிதியத்திற்கு எதிராகவோ உலக வங்கிக்கு எதிராகவோ கருத்துக்களை மிக அடக்கியே வாசிக்கின்றனர். பிரித்தானிய பாராளுமன்றத்திற்கு முன்பும் வெற்று அரசியல் கோஷங்களையே வைத்து போராட்டம் நடத்தினர்.

அரசும் புதிய பிரதமர் உட்பட போராட்டகாரர்களும் நாட்டின் நிலைமையை மோசமடையச் செய்துகொண்டுள்ளனர். அரசு ஆணித்தரமான முடிவுகளை எடுக்க வேண்டும். இன்று ஏற்பட்டுள்ள நிலையை இலங்கையின் எதிர்காலத்திற்கு சாதகமாக மாற்ற முடியும். அதற்கு அரசியல் வாதிகளும், பல்கலைக்கழகங்களும் ஒருங்கிணைந்து நீண்டகாலத் திட்டங்களை வகுக்க வேண்டும்.

நாட்டை உல்லாசப் பயணிகளுக்கு திறந்துவிடுவதுடன் உல்லாசப் பயணத்துறையை காத்திரமான முறையில் வளர்க்க உடன் நடவடிக்கை எடுக்க வேண்டும்!
அரசு நாடுகளுக்கு இடையேயான கடன்கள் உட்பட அனைத்து கடன்களையும் ரத்து செய்ய வேண்டும்!
நாணயப் பெறுமதி குறைந்துள்ளதை சாதகமாக்கி ஏற்றுமதி நடவடிக்கைகளை ஊக்குவிக்க வேண்டும்!!
சிறிலங்கா பெஸ்ற் மற்றும் மேடின் சிறிலங்கா என்பன நாட்டின் தாரகமந்திரமாக வேண்டும்!!!

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *