பத்திரிகை கள் இணையத்தளத்தில் தமது பதிப்புகளை வெளியிடும் நிலைமைக்கு தம்மை மாற்றிக்கொள்ளாவிடின் நாளடைவில் அழிந்தொழிந்துவிடும் சாத்தியமுள்ளதாக ஆய்வொன்றின் மூலம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. குயின்ஸ்லாந்தின் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் ஊடகவியல் பேராசிரியரான அலன் நையிற்றால் நடத்தப்பட்ட இணையத்தளமூடான ஆய்வொன்றின் பிரகாரம் இந்தக் கருத்து வெளியிடப்பட்டுள்ளது.
இந்த ஆய்வு தொடர்பாக பேராசிரியர் அலன் நைற் தெரிவிக்கையில்; இருநூறுக்கும் மேற்பட்ட முதலாண்டு ஊடகவியல் மாணவர்கள் சர்வதேச ரீதியிலான இந்த இணையத்தள ஆய்வில் செய்தித்தாள் வாசிப்பது தொடர்பான தமது கருத்துகளை வெளியிட்டிருந்தனர்.
இந்த இளம் ஊடகவியலாளர்கள் 21 வயதிற்கு குறைவானவர்களாக இருப்பதுடன் அவர்களில் 90 வீதமானோர் பத்திரிகை வாசிப்பதை விரும்பவில்லை. ஆனால் ஊடகவியலாளர்களாவதற்கு விரும்புகின்றனர். அத்தொகையில் 60 வீதமானவர்கள் வாரத்திற்கு ஒருதடவையோ அல்லது அதற்குக் குறைவாகவோ பத்திரிகை வாசிக்கின்றனர்.
ஆனாலும் 95 வீதமானவர்கள் செய்திகள் தொடர்பில் ஆர்வம் உடையவர்களாக உள்ளனர். ஆனால் இவர்களுக்கு வர்த்தகத் தொலைக்காட்சிச் சேவைகளின் செய்திகளே மூலமாக உள்ளதுடன் 50 வீதமானோர் ஒரு நாளைக்கு ஒருதடவையேனும் தொலைக்காட்சிச் செய்தியை பார்க்கின்றனர். தொலைக்காட்சிச் செய்திச் சேவைக்கு அடுத்தபடியாக இணையத்தளங்களூடான செய்தியினை இம்மாணவர்கள் விரும்பிப்பார்க்கின்றதுடன் கூகுள் (Google) நைன்ஸ்மென் (Ninesmen) பேஸ்புக் (Face book) விக்கி பீடியா (wikipedia) ஆகிய தளங்கள் பிரபலமானவையாகவும் உள்ளன.
இதன் மூலம் ஊடகவியல் கற்கைநெறியைப் பயிலும் மாணவர்கள் கூட பத்திரிகைகளை வாசிப்பதில்லைபென்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. உலகப் பொருளாதார நெருக்கடி, இணையத்தளங்களில் பிரசுரிப்பதற்கான விளம்பர வருமானங்களின் இழப்பு ஆகியவற்றால் பத்திரிகைக்குள்ள அச்சுறுத்தலைவிட இவ்விடயம் பாரிய அச்சுறுத்தலாக உள்ளது.
இந்நிலையில் ஊடகவியலாளர்களே எதிர்காலத்தில் பத்திரிகைகளை வாசிக்காவிடில் பத்திரிகைகளை வாசிப்பது யாரென அலன் நைற் கேள்வி எழுப்பியுள்ளார்.