கொழும்பில் நடைபெற்று முடிந்த பிராந்திய ஒத்துழைப்புக்கான தெற்காசிய சங்கத்தின் (சார்க்) 31 ஆவது வெளிவிவகார அமைச்சர்கள் மாநாட்டில் குற்றவாளிகளை பரிமாறிக் கொள்ளல் மற்றும் நாடு கடத்தல் தொடர்பாக பிராந்திய ரீதியில் பிரத்தியேகமான உடன்படிக்கையொன்றை ஏற்படுத்திக் கொள்வது பற்றி பேசப்பட்டுள்ளது.
“நாம் இந்த விடயம் பற்றி கலந்துரையாடினோம். கைதிகள் பரிமாற்றம், நாடு கடத்தல் என்பது இரு தரப்பு ஒப்பந்தங்களின் அடிப்படையிலேயே இருக்கின்றன. எனினும் ஒரு குழுமமாக இவ்விடயத்தில் பிராந்தியமொன்றுக்குள் முன்செல்வதையும் மேம்படுத்துவதையும் தடுப்பதற்கு ஒன்றுமில்லை’ என்று வெளிநாட்டமைச்சர் ரோஹித போகொல்லாகம தெரிவித்திருக்கிறார். எனினும், இதை எழுத்து மூலம் கொண்டு வரக் கூடிய வகையில், நிச்சயமான அடிப்படைக் கொள்கைகளின் உதவியும் பல சட்ட முறைமைகளின் ஒற்றுமையும் இருக்க வேண்டுமென்றும் அமைச்சர் போகொல்லாகம இதன் போது சுட்டிக்காட்டியிருக்கிறார்.
அத்துடன், கடந்த 2008 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் சார்க் மாநாட்டில் செய்து கொள்ளப்பட்டு நடைமுறையிலிருக்கும் பரஸ்பர உதவிகளுக்கான உடன்படிக்கையை சுட்டிக்காட்டியிருக்கும் அமைச்சர் போகொல்லாகம, அதன் பல சரத்துக்களில் நாடுகள் ரீதியான பரிமாற்றங்களின்போது பயங்கரவாதத்துக்கு வழி வகுக்கும் குற்றச் செயல்களும் உள்ளடக்கப்பட்டிருப்பதாக குறிப்ப்பிடிருக்கிறார். இதேநேரம், இது தொடர்பான இறுதி தீர்மானமொன்றுக்கு வரும் முன்னர் பல விடயங்கள் பற்றி கலந்தாலோசிக்க வேண்டியிருப்பதாக வெளிவிவகார அமைச்சின் செயலாளர் கலாநிதி பாலித கோஹண தெரிவித்திருக்கிறார்.