விடுதலைப் புலிகளை மீளுருவாக்க பணம் திரட்டியதாகக் கூறப்படும் இலங்கையைச் சேர்ந்த ஐவருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக இந்திய தேசிய புலனாய்வு பிரிவு தெரிவித்துள்ளது.
குற்றம் சாட்டப்பட்டவர்களில் ஒருவரான 50 வயதுடைய லட்சுமணன் மேரி பிரான்சிஸ்கா என்ற பெண்ணை சென்னையிலும் மற்றொருவரை மதுரையிலும் தமிழ்நாடு ‘கியூ’ பிரிவு பொலிஸார் கைது செய்தனர்.
கடந்த வருடம் கைது செய்யப்பட்ட பிரான்சிஸ்கா ஒக்டோபர் மாதம் சென்னை குற்றப் புலனாய்வு பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டார். இதன்போது, மேற்கொள்ளப்பட்ட மேலதிக விசாரணையில் அவர் விடுதலைப் புலிகளின் முன்னாள் செயற்பாட்டாளர்களுடன் தொடர்பில் இருந்தமை தெரியவந்துள்ளது.
இதனையடுத்து, கெனிஸ்டன் பெர்னாண்டோ, கே. பாஸ்கரன், ஜோன்சன் சாமுவேல் மற்றும் எல். செல்லமுத்து ஆகிய நால்வர் இந்திய தேசிய புலனாய்வு பிரிவால் கைது செய்யப்பட்டனர்.
அவர்கள் மீது சட்டவிரோத நடவடிக்கைகள் சட்டம் 1967, கடவுசீட்டு சட்டம் 1967 மற்றும் இந்திய தண்டனைச் சட்டம் ஆகியவற்றின் பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
கடந்த 10 மாதங்களில் விடுதலைப் புலிகளின் நடவடிக்கைகள் தொடர்பாக இந்திய தேசிய புலனாய்வு பிரிவு பதிவு செய்த இரண்டாவது வழக்கு இது என்பதும் குறிப்பிடத்தக்கது.