அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டு வந்த வேலை நிறுத்த போராட்டம் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது.
இன்று (24) நடைபெற்ற மத்திய செயற்குழுக் கூட்டத்தில் இத்தீர்மானம் எடுக்கப்பட்டதாக வைத்தியர் சமந்த ஆனந்த தெரிவித்துள்ளார்.
சுகாதார அமைச்சினால் வழங்கப்பட்ட 500 வைத்தியர்களுக்கான நியமனங்கள் தொடர்பில் தங்களது சங்கத்தின் ஆலோசனை பெறப்படவில்லை என்பது உள்ளிட்ட ஒரு சில விடயங்களை தெரிவித்து அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் பணிப்பகிஷ்கரிப்பு போராட்டத்தில் ஈடுப்பட்டு வருகின்றனர்.
கடந்த திங்கட்கிழமை (20) முதல் மன்னார், நுவரெலியா, திருகோணமலை, இரத்தினபுரி, பொலன்னறுவை ஆகிய மாவட்டங்களில் ஆரம்பமான இப்பணிப்புறக்கணிப்பு போராட்டம், கடந்த செவ்வாய்க்கிழமை (21) முதல் நாடளாவிய ரீதியில் இடம்பெற்று வருகின்றது.
இதனைத் தொடர்ந்து இன்று (24) பிற்பகல் இடம்பெற்ற அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் மத்திய செயற்குழு கூட்டத்தில் குறித்த போராட்டத்தை உடன் அமுலுக்கு வரும் வகையில் தற்காலிகமாக இடைநிறுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.