ஆப்கனிலிருந்து நேட்டோ, அமெரிக்கப் படைகள் வெளியேறத் தொடங்கியபின் தலிபான் தீவிரவாதிகள் ஆப்கனின் பல மாகாணங்களைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். இதனால், ஆப்கனில் அடுத்து என்ன நடக்கும் என உலக நாடுகள் உன்னிப்பாகக் கவனித்து வருகின்றன.
காபூல் விமான நிலையம் அருகே நேற்று நடந்த இரு மனித வெடிகுண்டு தாக்குதல் மற்றும் துப்பாக்கிச் சூட்டில் 18 அமெரிக்க ராணுவத்தினர் உள்ளிட்ட 100க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். 143 பேர் படுகாயமடைந்தனர்.
இதையடுத்து அமெரிக்க ஜனாதிபதி ஜோபைடன் வெள்ளை மாளிகையில் பேசும்போது, ‘நாங்கள் இந்த சம்பவத்தை மறக்க மாட்டோம். மன்னிக்கவும் மாட்டோம். இந்த சம்பவத்தில் தொடர்புடையவர்களை நாங்கள் வேட்டையாடுவோம். இதற்கு அவர்கள் தகுந்த விலையை கொடுத்தாக வேண்டும்’ என்று கடுமையாக பேசியுள்ளார்.
ஆப்கானிஸ்தான் ஆட்சி நிர்வாகத்தைக் கைப்பற்றியுள்ள தலிபான் தரப்பு, இதுவொரு தற்கொலைப் படைத் தாக்குதலாக இருக்கும் என்று சந்தேகிக்கிறது. இந்த தாக்குதல் நடப்பதற்கு முன்னரே காபூல் விமான நிலைய பகுதியில் பாதுகாப்பில் இருந்த அமெரிக்க தரப்பு, ஐஎஸ்ஐஎஸ் அமைப்பால் அச்சுறுத்தல் இருப்பதால் அங்கிருந்து வெளியேறும்படி மக்களுக்கு எச்சரிக்கை விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.