நடந்து முடிந்த மாகாண சபைத் தேர்தல்களைப் போன்று பொதுத் தேர்தலிலும் மக்கள் எமக்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்தை வழங்கினால் அது நாட்டின் எதிர்காலத்தை சுபீட்சமாக மாற்ற பெரிதும் உதவும். தற்பொழுதுள்ள அரசியலமைப்பை மாற்றவேண்டும் என்றே மக்களின் ஏகோபித்த கருத்தாக உள்ளது என சபை முதல்வரும் அமைச்சருமான நிமல் சிறிபால டி சில்வா கூறினார்.
ஐ.ம.சு. முன்னணியின் ஊடகவியலாளர் மாநாடு நேற்று (17) மகாவலி நிலையத்தில் நடைபெற்றது. இங்கு ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த அமைச்சர் மேலும் கூறியதாவது, ஜே.ஆர். ஜெயவர்தனவின் அரசியல் யாப்பினால் நாட்டின் முன்னேற்றத்துக்கு தடங்கல் ஏற்பட்டுள்ளது. இதனை மாற்ற வேண்டும்.
பொதுத் தேர்தலில் எமக்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மைப் பலம் கிடைத்தால் யாப்பை மாற்றி சிறந்த தேர்தல் முறையை கொண்டு வருவோம். நாடு எதிர்கொள்ளும் பல பிரச்சினைகளுக்கு தீர்வு ஏற்படும். பெரும்பான்மை பலம் கிடைத்தாலும் நாம் ஒருபோதும் சர்வாதிகார ஆட்சி நடத்தமாட்டோம் என்றார்.
சுதந்திர தேர்தல் ஆணைக்குழு குறித்து கருத்துத் தெரிவித்த அமைச்சர், தேர்தல் ஆணைக்குழு அமைக்கப்படவேண்டும் என ஐ.தே. கவும் ஜே.வி. பியும் கோரி வருகின்றன. கடந்த 5 தசாப்தங்களாக தேர்தல் திணைக்களத்தினூடாகவே தேர்தல் நடத்தப்பட்டு வருகிறது. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் கீழ் சுதந்திரமானதும் நீதியுமான தேர்தல்களே நடத்தப்பட்டுள்ளன.
நியாயமானதும் சுதந்திரமானதுமான தேர்தல்களை நடத்த முடிந்தது குறித்து பெருமைப்படுகிறோம். எனவே எமது வெற்றிக்கு யாரும் சேறு பூச முடியாது.
ஐ.தே.க. வாக்களிப்பு நிலையங்களுக்கு தமது பிரதிநிதிகளைக் கூட நியமிக்க முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. குருணாகல் மாவட்டத்தில் ஐ.ம.சு. முன்னணி சார்பாக போட்டியிட்ட அங்கவீனமுற்ற படைவீரர் 48 ஆயிரம் வாக்குகள் பெற்று வெற்றியீட்டியுள்ளர். எம்முடன் இணைந்த ஆதரவாளர்கள் நிரந்தரமாக எம்முடன் சேர்ந்திருப்பார் என்றார்.