சமாதானப் பணியாளராக இலங்கைக்கு வருகை தர ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர் திட்டம்

இலங்கையில் யுத்தநிறுத்தம் மேற்கொள்வது தொடர்பாக ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுடனும் புலிகளின் தலைவர் பிரபாகரனுடனும் பேச்சு நடத்தப் போவதாக வாழும் கலை மன்றத்தின் ஆன்மீகக் குருவான ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர் கூறியுள்ளார்.

கிழக்கு இந்திய மாநிலமான மேற்கு வங்கத்தின் தலைநகர் கொல்கத்தாவுக்குச் சென்றுள்ள சுவாமி ரவிசங்கர் அங்கு வைத்து இதனைக் கூறியுள்ளதாக “இந்தியன் எக்ஸ்பிரஸ்’ பத்திரிகை தெரிவித்தது. அத்துடன், விரைவில் பாகிஸ்தானுக்கும் தான் செல்லப்போவதாக ரவிசங்கர் கூறியுள்ளார்.

சமாதான நடவடிக்கைகளில் நான் ஈடுபட்டுள்ளேன். தொடர்ந்தும் அதனை மேற்கொள்வேன். விரைவில் பாகிஸ்தானுக்குச் செல்லவுள்ளேன். இருதரப்பு அதிகாரிகளுடனும் இது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தி வருகிறேன். யுத்தநிறுத்தம் தொடர்பாக இலங்கை, இந்திய அரசாங்கங்களிடம் நான் வேண்டுகோள் விடுத்துள்ளேன். அங்கு செல்வேன். ஜனாதிபதி ராஜபக்ஷவையும் புலிகளின் தலைவர் பிரபாகரனையும் தனித்தனியாகச் சந்தித்து யுத்தநிறுத்தத்தை ஏற்படுத்துவது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தவுள்ளேன்.

புலிகளுக்கும் அரசாங்கத்திற்குமிடையில் பேச்சுவார்த்தை இடம்பெற வேண்டும். இராணுவ நடவடிக்கை தீர்வாக அமையாது. வன்முறைகள் முடிவுக்கு கொண்டுவரப்பட வேண்டிய தேவையுள்ளது. ஆன்மீகக் கல்வியானது மனங்களில் மாற்றத்தை ஏற்படுத்தும். இலங்கை அகதிகள் தமது தாயகத்துக்குத் திரும்பிச் சென்று கௌரவத்துடன் வாழ்வதற்கான சகல முயற்சிகளையும் நான் மேற்கொள்வேன். இலங்கை அகதிகளின் தொழில், வீடுகள், நிலங்கள் அவர்களுக்குத் திரும்பக் கிடைக்கவேண்டுமென்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *