மூவின மக்களும் சுதந்திரமாக வாழவேண்டுமானால் ஐக்கிய தேசியக் கட்சியே ஆட்சிக்கு வரவேண்டும் – ரணில் விக்கிரமசிங்க

இந் நாட்டில் இன,மத,பேதமில்லாமல் தமிழ், சிங்கள, முஸ்லிம் மக்கள் ஒற்றுமையாகவும் சுதந்திரமாகவும் வாழவேண்டுமானால், ஐக்கிய தேசியக் கட்சியே ஆட்சிக்கு வரவேண்டும். இவ்வாறு எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க ஞாயிற்றுக்கிழமை நுவரெலியா நகரில் நடைபெற்ற ஐ.தே.கட்சியின் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையில் தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்; நாட்டு மக்களையும் நாட்டையும் பாதுகாப்பது ஜனாதிபதியின் கடமையாகும். மகிந்த ராஜபக்ஷ ஜனாதிபதியாக உள்ள இந்த மூன்று வருடகாலத்தில் அவர் மக்களுக்கு என்ன செய்துள்ளார்? 48 ஆயிரம் பேருக்கு ஒருவேளை உணவு வழங்குவதாக கூறுகிறார். தற்பொழுது யுத்தம் நிறைவு பெற்றுவருவதால் மூன்று வேளையும் அவர் உணவை வழங்கவேண்டும். நாடு அபிவிருத்தியடைந்துள்ளதென்று மேடைகளில் கூறி வருகிறார்கள். ஆனால், இந்நாட்டில் மக்கள் நிம்மதியாக வாழ முடியாத சூழ்நிலை மாத்திரம்தான் அபிவிருத்தியடைந்திருக்கின்றது.

இந்த அரசாங்கம் யுத்தத்தைக் காரணம் காட்டி தங்களது இயலாமையை மறைத்து வருகின்றது. யுத்தத்தில் வெற்றி பெற்றுவிட்டதாகவும் யுத்தம் நிறைவடைந்து விட்டதாகவும் கூறிவருகின்றனர். அப்படியானால் மக்களுக்கு உரிய நிவாரணத்தை அரசாங்கம் வழங்க வேண்டும். யுத்தம் முடிந்துவிட்டது என்று கூறிய அரசாங்கம் இப்போது மக்களிடம் சிக்கிக் கொண்டிருக்கின்றது.

இந்த நாட்டில் நாளுக்கு நாள் மக்களின் வாழ்க்கைச் செலவுகள் அதிகரித்துச் செல்கின்றன. இதைப்பற்றிப் பேசினால், யுத்தம் நிறைவு பெறும்வரை பொறுத்திருக்கும்படி கூறுகின்றனர். அரசாங்க ஊழியர்களுக்கு சம்பளத்தை அதிகரிக்கும்படி கேட்டால் யுத்தம் முடியும்வரை வயிற்றை இறுக்கி கட்டிவைத்திருக்கும்படி கூறுகின்றனர். ஆனால் அமைச்சர்களுக்கு மாத்திரம் ஒரு இலட்சம் ரூபாவால் சம்பளத்தை அதிகரித்துள்ளனர். வீட்டு வாடகை என்று கூறி ஒரு மாதத்திற்கு ஒரு இலட்சம் ரூபா பெற்றுக் கொள்கின்றார்கள். எல்லா அமைச்சர்களும் தங்களது சொந்த வீட்டில் அல்லது அரசாங்க வீடுகளில் தங்கியிருக்கின்றார்கள்.

இன்று இந்நாட்டில் பல ஆடைத் தொழிற்சாலைகள் மூடப்பட்டு வருகின்றன. சுற்றுலாத்துறையும் மரக்கறி உற்பத்தியும் பாதிக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் தற்பொழுது யுத்தத்தை நிறைவு செய்வதற்காக மத்திய மாகாணசபையை தரும்படி கேட்கின்றார்கள். தேயிலை விலையில் வீழ்ச்சி ஏற்பட்டு பெருந்தோட்ட, சிறுதோட்ட தேயிலை உற்பத்தியாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள். அவர்களுக்கு மானியம் வழங்க நிதி இல்லையென்று கூறியவர்கள், ஜனாதிபதியின் சகோதரரான கோதாபய ராஜபக்ஷவின் விமான சேவைக்கு கோடிக் கணக்கான ரூபாவை வழங்கியுள்ளார்கள்.

இந்நாட்டில் பிரதான தொழிலான தேயிலை உற்பத்திக்கு உதவி செய்ய முடியாதென கூறியுள்ளார்கள். இந்தியாவும் இந்தோனேசியாவும் தேயிலை தொழிலுக்கு உதவிசெய்துள்ளன. கடந்த வரவு செலவுத் திட்டம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படுவதற்கு இரண்டு நாட்களுக்கு முன் அமைச்சர் சந்திரசேகரன் என்னைச் சந்தித்து கூட்டு ஒப்பந்தத்தை மறு பரிசீலனை செய்து வரவு செலவுத் திட்டத்தில் தோட்ட தொழிலாளர்களுக்குச் சம்பளம் அதிகரிக்கப்பட வேண்டும் இல்லாவிட்டால் வரவு செலவுத் திட்டத்திற்கு எதிர்த்து வாக்களிக்கப்போவதாக கூறினார்.

ஆனால். இரண்டு நாட்களுக்கு பின் வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவாக வாக்களித்தார் இச் செயல் தோட்டத் தொழிலாளர்களை ஏமாற்றும் செயலாகும். தோட்டத் தொழிலாளர்களின் பிரதான உணவான கோதுமை மாவின் விலை உயர்வை எதிர்த்து நாங்கள் பாராளுமன்றத்தில் பேசிய பொழுது ஆறுமுகம் தொண்டமானும், சந்திரசேகரனும் வாய் திறக்காமல் இருந்தார்கள். இன்று வடமாகாணத்தைப் பிடிப்பதற்காக மத்திய மாகாணத்தில் அரசாங்கத்திற்கு வாக்களிக்குமாறு கூறுகின்றார்கள். அத்தோடு பெருந்தோட்ட இளைஞர்களை கைது செய்வதற்கும் அரசாங்கத்திற்கு வாக்களிக்கும்படி கூறுவார்கள்.

இன்று வெளிமாவட்டங்களுக்கு தொழிலுக்காகச் சென்ற பல மலையக இளைஞர்களை வெள்ளை வானில் கடத்தியுள்ளார்கள். அவர்கள் எல்லோரும் விடுதலைப் புலிகளுக்கு உதவி செய்தவர்கள் அல்ல. மலையக இளைஞர்கள் கொழும்பிலோ அல்லது வேறு மாவட்டங்களிலோ தொழில் செய்ய முடியாத நிலையில் அவர்கள் வேலை இல்லாமல் தோட்டப் பகுதியிலே முடங்கிக் கிடக்கின்றார்கள். இந்த இளைஞர்கள் தனி நாடு கேட்கவில்லை. இந்த நாட்டை பிரிக்க விடமாட்டோம். எல்லோரும் ஒற்றுமையாக வாழ்வோம் என்றே கூறிவருகின்றார்கள்.

கோதாய ராஜபக்ஷ இந்நாட்டில் வாழும் தமிழ் மக்களுக்கு இந்நாட்டில் உரிமை இல்லை என்று கூறுகின்ற பொழுது ஆறுமுகம் தொண்டமானும், சந்திரசேகரனும் ஏன் வாய்திறந்து பேசாமல் இருக்கிறார்கள். இவர்களுக்கு தமிழ் மக்களைப் பற்றி பேசுவதற்கு உரிமை இல்லாததால் மௌனிகளாக இருக்கின்றார்கள். இந்நாட்டில் வாழும் அனைத்து மக்களும் ஒற்றுமையாக வாழவேண்டும் என்ற நோக்கிலேயே ஐ.தே.க.செயல்பட்டு வருகின்றது. எனவே, எதிர்வரும் தேர்தல்களில் ஐ.தே.கட்சியை மக்கள் வெற்றிபெறச் செய்யவேண்டும்’ எனத் தெரிவித்தார்.

இக் கூட்டத்தில் ஐ.தே.க.பிரதித் தலைவர் கருஜயசூரிய, முன்னாள் அமைச்சர் எஸ்.பி.திஸநாயக்க, பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் உட்பட உறுப்பினர்களும் உரையாற்றினார்கள்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *