![]()
பயங்கரவாதத்தின் பிடியில் பல்லாண்டு காலமாக அகப்பட்டுள்ள வடக்கு கிழக்கு மக்கள் மீண்டும் சுதந்திரத்தையும் மகிழ்ச்சியையும் அனுபவிக்க சகலரும் தமது ஒத்துழைப்பை வழங்க வேண்டுமென ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். நாட்டின் சகல மக்களும் அம் மக்களுக்கான சுபீட்சத்தையும் அன்பையும் நட்பையும் வழங்க முன்வருவதுடன் சொல்லாலும் செயலாலும் ஒத்துழைக்க வேண்டுமெனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.
எமது தாய்நாடு ஒரே கொடியின் கீழ் வருகின்ற இச்சந்தர்ப்பத்தில், தாய்நாட்டுக்குத் தம் கடமைகளை நிறைவேற்ற சகலருக்கும் சந்தர்ப்பம் வழங்கும் வகையில் ஒன்றுபட்டுச் செயற்பட அனைத்துக் கட்சிகளுக்கும் பகிரங்க அழைப்பு விடுப்பதாகவும் அவர் தெரிவித்தார். அதேவேளை; யுத்தத்தின் காரணமாக சொந்த நாட்டை விட்டுச் சென்று வெளிநாடுகளில் வசிக்கும் சகல இலங்கைப் பிரஜைகளையும் மீண்டும் தாய்நாட்டுக்கு வருமாறு ஜனாதிபதி பகிரங்க அழைப்பொன்றையும் விடுத்தார்.
இலங்கையின் 61வது சுதந்திர தின பிரதான நிகழ்வு நேற்றுக் காலை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில் காலிமுகத்திடலில் இடம்பெற்றது. அந்நிகழ்வில் கலந்துகொண்டு நாட்டு மக்களுக்கு உரையாற்றும் போதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்தார். பிரதமர் ரட்ணசிறி விக்கிரமநாயக்க சபாநாயகர் டபிள்யூ. ஜே. எம். லொக்குபண்டார, சிரேஷ்ட அமைச்சர்கள், வெளிநாட்டு உள்நாட்டு ராஜதந்திரிகள் முக்கியஸ்தர்கள் பலரும் கலந்துகொண்ட இந்நிகழ்வில் ஜனாதிபதி மேலும் தெரிவித்ததாவது :-
முழு நாட்டையும் பல தசாப்த காலமாக அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கியிருந்த பயங்கரவாதத்தை இரண்டரை ஆண்டுகால குறுகிய காலகட்டமொன்றில் முழுமையாகத் தோல்வியுறச் செய்ய எம்மால் முடிந்துள்ளது.விடுதலைப் புலி பயங்கரவாதம் வெகுவிரைவில் முற்றாக ஒழிக்கப்படும். எமக்கு முன்னால் தலைதூக்கியிருந்த பலம்வாய்ந்த எதிரியை தோற்கடிக்க முடிந்தமை பெருமையளிக்கின்றது. பல வருட காலங்களுக்குப் பின்னர் பிரிவினை வாத பயங்கரவாதத்தின் கரு நிழலை இல்லாதொழித்து நாட்டில் சுதந்திர தினத்தைக் கொண்டாடுவதற்குப் படையினர் எமக்குச் சந்தர்ப்பத்தைப் பெற்றுத்தந்துள்ளனர்.
அண்மைக் காலமாக உலக நாடுகளில் பல பயங்கரவாத அமைப்புக்கள் பெரும் வெற்றிகளைப் பெற்றுக்கொண்டுள்ளன. எனினும் இலங்கையில் பயங்கர வாதத்தைத் தோற்கடித்து தேசிய ஒருமைப்பாட்டைப் பாதுகாக்கும் பணியை அரசாங்கம் நிறைவேற்றியுள்ளது. பல அரசாங்கங்கள் பயங்கரவாதத்தைத் தோற்கடிக்க முடியாது என்று கூறிய போதிலும் தற்போதைய அரசாங்கம் இரண்டரை வருட காலத்திற்குள் பாரிய வெற்றிகளைப் பெற்றுக் கொண்டுள்ளது. இதற்கு முப்படையினரும் பொலிஸாரும் அர்ப்பணிப்புடன் செயற்பட்டுள்ளனர். படையினரின் அர்ப்பணிப்பே தேசியக் கொடி நாடெங்கும் பறப்பதற்கு வழிவகுத்துள்ளது.
உலகில் எத்தனை நாடுகள் இருந்தபோதும் தமது தாய்நாட்டைப் போன்று பாதுகாப்பான இடம் வேறெங்கும் இருக்கமுடியாது. அதனால் கடந்த இருபது வருடங்களாகத் தொடர்ந்த யுத்தச் சூழலினால் நாட்டை விட்டுச்சென்று வேற்று நாடுகளில் புலம்பெயர்ந்து வாழும் இலங்கையர்கள் மீண்டும் தாய்நாட்டுக்குத் திரும்பும் காலம் உருவாகியுள்ளது. இதற்கிணங்க, சொந்த நாட்டை விட்டுச் சென்ற தமிழர், சிங்களவர், முஸ்லிம்கள், உள்ளிட்ட சகல இலங்கையர்களும் மீண்டும் தாய்நாட்டுக்கு வர வேண்டுமென அழைப்பு விடுக்கின்றேன்.
தேசியக் கொடி தற்போது புத்தெழில் பெற்றுள்ளது. தேசிய கீதத்துக்குப் புதிய பலம் கிடைத்துள்ளது. தாயகம் ஐக்கியப்பட்டுள்ள இவ்வேளையில் இன, மத, மொழி, கட்சி பேதமின்றி அனைவரும் ஒன்றிணைவது அவசியம். பயங்கரவாதம் தோற்கடிக்கப்படுவதோடு சகல சவால்களும் முடிவடைந்துவிடப் போவதில்லை. எதிர்கால சந்ததியினருக்குப் பொருத்தமான கல்வியை வழங்க வேண்டியுள்ளது.
வறுமை தலை தூக்காதபடி பார்த்துக்கொள்ள வேண்டியுள்ளது. சிந்தனை மாற்றம் கொண்ட அரச சேவையை உருவாக்குவதும் எமது முக்கிய சவாலாகும். ஊழலுக்கும் வீண் விரயத்திற்கும் இடமளிக்காது சிறந்த அரச சேவைக்காகச் சகலரும் திடசங்கற்பம் பூணவேண்டும்.
சுதந்திரத்துக்குப் பின் 30 வருடங்கள் பூர்த்தியாகிய போது எமது நாட்டைப் பிரித்து கூறு போடுவதற்கு முயற்சித்த பிரிவினைவாதமொன்று தலைதூக்கியது. கடந்த ஆண்டுகளில் நாம் சுதந்திரத்தினை நினைவு கூர்ந்த போதும் சட்டவிரோத பிரிவினைவாத பயங்கரவாதத்துடன் நாம் வாழ்ந்ததால் எம்மால் உண்மையான சுதந்திரத்தை நினைவு கூர முடியவில்லை. கடந்த காலங்களில் இனப்பிரச்சினையைத் தீர்ப்பதற்கு மேற்கொள்ளப்பட்ட சகல நடவடிக்கைகளிலும் இருந்த நன்மை தீமைகளை ஆராய்ந்து புதிய வழிமுறை யொன்றை மேற்கொள்ள நாம் உத்தேசித்துள்ளோம்.
அதற்கான வழிமுறைகள் ஏற்படுத்தப்படும்போது பிளவுபடாத நாடு, பெரும்பான்மை கருத் தொருமைப்பாடு, கெளரவமான சமாதானம் ஆகியன இயல்பாக அமையும் எனவும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.