முல்லைத்தீவிலிருந்து வருவோரின் நலன்பேண ரூ. 300 மில். ஒதுக்கீடு – அமைச்சர் ரிஷாட்

முல்லைத்தீவு பிரதேசத்திலிருந்து அரசகட்டுப்பாட்டு பகுதிக்குள் வருகின்றவர்களுக்கு நிவாரண உதவிகளை வழங்குவதற்காக அரசாங்கம் அடிப்படைத் தொகையாக 300 மில்லியன் ரூபாவை ஒதுக்கியுள்ளதாக மீள்குடியேற்றம் மற்றும் அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.  அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் நேற்று முன்தினம் காலை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அமைச்சர் இதனைக் குறிப்பிட்டார்.

இதுவரை 1,180 குடும்பங்களைச் சேர்ந்த 2,913 பேர் வவுனியா பிரதேசத்துக்கு வந்துள்ளனர். அவர்களில் 940 குடும்பங்களைச் சேர்ந்த 2,131 பேர் நெலுக்குளம் நலன்புரி நிலையத்திலும் 240 குடும்பங்களைச் சேர்ந்த 782 பேர் மனிக்பாம் நலன்புரி நிலையத்திலும் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

இவர்களைக் குடியமர்த்துவதற்காக 350 வீடுகள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் ஒவ்வொரு குடும்பத்திற்கும் தனித்தனியான வீடுகள் வழங்கப்படுவதுடன் உணவுப் பொருட்கள், குடிநீர், மின்சாரம், சுகாதாரம் உட்பட அனைத்து வசதிகளையும் ஏற்படுத்திக் கொடுக்க நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அமைச்சர் கூறினார்.  இதேபோன்று சுமார் ஒரு இலட்சத்து 50 ஆயிரம் பேர் அரச கட்டுப்பாட்டுப் பிரதேசத்திற்குள் வருவார்களென எதிர்பார்ப்பதாகவும் அவ்வாறு வருகின்ற அனைவருக்கும் சகல வசதிகளையும் ஏற்படுத்திக் கொடுக்க ஜனாதிபதியின் ஆலோசனைக்கு ஏற்ப அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

இடம்பெயரும் அனைவருக்கும் வசிப்பிட வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்க 900 ஏக்கர் நிலப்பரப்பில் 24 ஆயிரம் வீடுகளை அமைக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. இடம்பெயரும் அனைவருக்கும் ஏனைய பகுதிகளில் வசிக்கின்றவர்களைப் போன்று வாழ உடனடியாக சகல வசதிகளையும் ஏற்படுத்திக் கொடுக்க அரசாங்கம் தயாராக இருப்பதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார். இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் பிரதி அமைச்சர் அமீர் அலியும் கலந்துகொண்டார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *