அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பைடனின் வெற்றியை உறுதிசெய்து, சான்று அளிப்பதற்காக அமெரிக்க நாடாளுமன்ற கூட்டு கூட்டம் கடந்த 6-ந் திகதியன்று நடைபெற்றது. அப்போது, டிரம்பின் ஆதரவாளர்கள் நாடாளுமன்றத்துக்குள் நுழைந்து சூறையாடினர். இது உலக அளவில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் பிரபல ஹாலிவுட் நடிகரும், குடியரசு கட்சியைச் சேர்ந்த கலிபோர்னியா மாகாணத்தின் முன்னாள் ஆளுநருமான அர்னால்டு ஸ்வார்ஸ்னேக்கர் நாடாளுமன்ற கலவரத்தை கண்டித்து சமூகவலைதளத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில் அவர் கூறியதாவது:-
அமெரிக்க ஜனாதிபதி வரலாற்றிலேயே மிகவும் மோசமான ஜனாதிபதி என்ற பெயரை டிரம்ப் பெற்றுள்ளார். அவர் ஒரு தோல்வியடைந்த தலைவர். ஜனாதிபதி தேர்தலில் வெளியான நியாயமான முடிவுகளை அவர் தடுக்க நினைத்தார். பொய்களால் அமெரிக்க மக்களை தவறாக வழி நடத்த முயன்றார். அமெரிக்க அரசியலமைப்பை மாற்ற நினைத்தவர்கள் தற்போது ஒன்றை அறிந்திருப்பார்கள். ஒருபோதும் அவர்களால் வெற்றிபெற முடியாது என்பதுதான் அது.
சமீபத்தில் அமெரிக்காவில் நடந்த தாக்குதலால் நாம் மிகவும் அதிர்ச்சி அடைந்தோம். ஆனால் நாம் இன்னும் பலத்துடன் முன்னேறுவோம். ஏனென்றால் நாம் எதை இழப்போம் என்பதை இப்போது புரிந்து கொண்டுள்ளோம்.
இவ்வாறு அர்னால்டு ஸ்வார்ஸ்னேக்கர் கூறினார்.