அவுஸ்ரேலியாவுக்கு சுற்றப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி மூன்று விதமான கிரிக்கெட் போட்டிகளிலும் அவுஸ்ரேலியாவை எதிர்கொள்கின்றது. ஏற்கனவே ஒருநாள் தொடரை இழந்திருந்த இந்திய அணி மூன்று போட்டிகளை கொண்ட இருபதுக்கு 20 போட்டியில் ஒரு வெற்றியை பெற்றிருந்த நிலையில் இரண்டாவது இருபதுக்கு 20 போட்டியில் இன்று களம் கண்டது.
இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இந்திய அணி முதலில் களத்தடுப்பைத் தெரிவு செய்தது.
இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலிய அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 பந்துப்பரிமாற்றங்களில் 5 இலக்குகள் இழப்புக்கு 194 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது.
அவுஸ்திரேலிய அணி சார்பில் மத்தேயு வேட் 58 ஓட்டங்களையும் ,ஸ்டீவன் ஸ்மித் 46 ஓட்டங்களையும் பெற்றுக் கொடுத்தனர்.
195 எனும் இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 19 .4 ஓவர்களில் வெற்றியிலக்கைக் கடந்து அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான இரண்டாவது இருபதுக்கு 20 போட்டியில் இந்திய அணி 6 விக்கெட்டுகளால் வெற்றி பெற்றுள்ளது.
இந்திய அணி சார்பில் ஷிகர் தவான் 52 ஓட்டங்களையும் விராட் கோலி 40 ஓட்டங்களையும் பெற்றுக் கொடுத்தனர். ஹர்திக் பாண்ட்யா 22 பந்தில் 3 பவுண்டரி, 2 சிக்சருடன் 42 ஓட்டங்களும், ஷ்ரேயாஸ் அய்யர் 5 பந்தில் 12 ஓட்டங்களும் எடுத்து ஆட்மிழக்காமல் இருந்தனர். இந்த வெற்றி மூலம் இந்தியா 3 போட்டிகள் கொண்ட தொடரை 2-0 என வென்றுள்ளது.
இந்த நிலையில் போட்டியின் சிறப்பாட்டக்காரராக ஹார்டிக் பாண்ட்யா தெரிவு செய்யப்பட்டார்.
அத்துடன், 3 போட்டிகளைக் கொண்ட இருபதுக்கு 20 தொடரை இந்திய அணி 2 க்கு 0 என கைப்பற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.