பாதுகாப்பு ஒத்துழைப்பை மேம்படுத்த இலங்கை பாகிஸ்தான் பேச்சு

sl_pak_flag.jpgஇலங்கையும் பாகிஸ்தானும் பாதுகாப்பு விடயங்களில் நெருங்கிய ஒத்துழைப்பை மேம்படுத்த வேண்டியதன் தேவையின் முக்கியத்துவத்தை வலியுறுத்தியுள்ளன. இந்த விடயம் தொடர்பாக ராவல் பிண்டியில் பாகிஸ்தானின் பாதுகாப்புச் செயலாளர் லெப்டினன்ட் ஜெனரல் சையத் ஆதர் அலிக்கும் இலங்கை பாதுகாப்புச் செயலாளர் கோதாபய ராஜபக்ஷவுக்கும் இடையில் திங்கட்கிழமை இடம்பெற்ற சந்திப்பில் கலந்துரையாடப்பட்டது.

இராணுவங்களுக்கிடையிலான ஒத்துழைப்பை சகல மட்டங்களிலும் அபிவிருத்தி செய்வதன் தேவை குறித்து இச் சந்திப்பில் வலியுறுத்தப்பட்டிருப்பதாக ஏ.பி.பி.செய்திகள் தெரிவித்தன. இரு தரப்பிலும் தற்போது இருந்து வரும் பரந்துபட்ட ஒத்துழைப்பை இரு நாடுகளினதும் பரஸ்பர நலன்களுக்காக மேலும் வலியுறுத்த வேண்டுமென பாகிஸ்தானின் பாதுகாப்புச் செயலாளர் தெரிவித்துள்ளார்.

சகல துறைகளுக்குமான ஆதரவை பாகிஸ்தான் இலங்கைக்கு தொடர்ந்து வழங்கும் என்றும் சையத் ஆதர் அலி கோதபய ராஜபக்ஷவிடம் தெரிவித்துள்ளார். இராணுவப் பயிற்சி, புலனாய்வு தகவல் பரிமாற்றம், பயங்கரவாதத்தை கட்டுப்படுத்துதல் என்பவை தொடர்பாக ஒத்துழைப்பை விரிவுபடுத்துவதென சந்திப்பின்போது இணக்கம் காணப்பட்டுள்ளது. இரு நாடுகளினதும் ஆயுதப் படைகளிடையே நெருங்கிய தொடர்பாடலின் தேவையை இலங்கையின் பாதுகாப்புச் செயலாளர் வலியுறுத்தியுள்ளார்.

அத்துடன், இலங்கை படைகளுக்கு பாகிஸ்தான் அரசாங்கம் தொடர்ந்து ஆதரவளித்து வருவதையிட்டு அவர் நன்றி தெரிவித்திருக்கிறார். அத்துடன் கோதாபய ராஜபக்ஷ பாகிஸ்தானின் பாதுகாப்பு உற்பத்தி பிரிவின் செயலாளர் லெப்டினன்ட் ஜெனரல் சாகித் ரிர்மிசேயையும் சந்தித்து பரஸ்பர நலன்கள் தொடர்பாக கலந்துரையாடியுள்ளார்.

பாகிஸ்தானின் பாதுகாப்புத் துறையின் தகைமை குறித்து பாகிஸ்தானின் பாதுகாப்பு உற்பத்தித்துறை செயலாளர் கோதாபய ராஜபக்ஷவிடம் எடுத்துரைத்திருப்பதாகவும் ஏ.பி.பி.செய்திகள் தெரிவித்தன.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *