43 வெளிநாட்டு இராஜதந்திரிகள் செவ்வாய்க்கிழமை கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தனை கிழக்கு மாகாண சபையின் கேட்போர் கூடத்தில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். அமெரிக்கா, அயர்லாந்து, சைப்பிரஸ், ருமேனியா, துருக்கி, அவுஸ்திரேலியா, ஜப்பான், ஜேர்மன், நியூசிலாந்து, ரஷ்யா, ஹங்கேரி, பாகிஸ்தான், நெதர்லாந்து, ஐஸ்லான்ட், பிரேஸில், சிலி, கிறீஸ், ஆஸ்திரியா இஸ்ரேல் ஆகிய நாடுகளின் இராஜதந்திரிகள் இக்கலந்துரையாடலில் பங்குபற்றினர். இராஜதந்திரிகள் கிழக்கு மாகாண நிலைவரம் பற்றி முதலமைச்சரிடம் விசாரித்து அறிந்து கொண்டனர்.
முதலமைச்சர் பதிலளிக்கையில், போரினாலும் இயற்கை அனர்த்தங்களினாலும் வெகுவாகப் பாதிக்கப்பட்ட மாகாணமாக இலங்கையிலேயே கிழக்கு மாகாணம் காணப்படுகின்றது. மூவின மக்களும் ஒற்றுமையாக வாழ்வதற்கான ஒரு சூழலை உருவாக்குவதற்காகவே எமது மாகாண அரசு உழைத்துக் கொண்டிருக்கிறது. அதில் கணிசமான அளவு வெற்றி கண்டு வருகின்றது. எமது மக்களுக்கான அனைத்து அபிவிருத்திகள் பற்றி மத்திய அரசின் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளேன் என்று குறிப்பிட்டார். கிழக்கு மாகாணத்தின் அபிவிருத்தி குறித்து ஆர்வம் காட்டுவது குறித்து இராஜதந்திரிகளுக்கு முதலமைச்சர் நன்றி கூறினார். கலந்துரையாடலில் முதலமைச்சருடன் கிழக்கு மாகாணசபையின் பிரதம செயலாளர் வி. பி. பாலசிங்கம், முதலமைச்சரின் செயலாளர் எஸ். மாமாங்கராஜா ஆகியோர் பங்குபற்றினர்.