சீனாவின் முக்கியச் செயலிகளுக்கு இந்தியா தடை விதித்திருப்பதற்கு அந்நாடு எதிர்ப்புத் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து சீன வணிகத்துறை அமைச்சகம் தரப்பில், “சீனாவின் முக்கியச் செயலிகளுக்கு இந்தியா தடை விதித்திருப்பதை நாங்கள் கடுமையாக எதிர்க்கிறோம். சீன முதலீட்டாளர்களின் சேவையை இது பாதிக்கின்றது. இந்தியா தனது தவறுகளைத் திருத்திக்கொள்ள வேண்டும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஜூன் மாதம் 15-ம் தேதி கிழக்கு லடாக்கில் உள்ள கல்வான் பள்ளத்தாக்குப் பகுதியில் இந்திய, சீன ராணுவ வீரர்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டது. இந்த மோதலில் 20 இந்திய வீரர்கள் கொல்லப்பட்டார்கள். சீனா தரப்பிலும் சேதம் ஏற்பட்டது.
சீனாவின் இந்த அத்துமீறல் நடவடிக்கைக்குப் பதிலடியாக கடந்த ஜூன் 29-ம் தேதி டிக் டாக், யூசிபிரவுசர், ஷேர் இட், கேம்ஸ்கேனர் உள்ளிட்ட சீனாவின் 59 ஸ்மார்ட்போன் செயலிகளுக்கு மத்திய அரசு தடை விதித்தது.
இந்த நிலையில் பப்ஜி உள்பட சீனாவின் 118 ஸ்மார்ட்போன் செயலிகளுக்குத் தடை விதித்து இந்தியா உத்தரவிட்டது.
இந்தியாவின் இறையாண்மையையும் ஒருமைப்பாட்டையும் பாதிக்கும் விதமாக இந்தச் செயலிகள் இருந்ததால் இந்த அவசர நடவடிக்கை எடுக்கப்பட்டதாக இந்தியா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் சீனா தற்போது இந்தியாவின் நடவடிகைக்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ளது.