கொரோனா வைரஸ் காரணமாக கல்வி நிலையங்கள் மூடப்பட்டுள்ளதால், உலகம் முழுவதும் 100 கோடிக்கும் அதிகமான மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக ஐக்கிய நாடுகள்சபை தெரிவித்துள்ளது.
“வரலாற்றில் இல்லாதவகையில் கல்வியில் பெரும் பாதிப்பை கொரோனா வைரஸ் ஏற்படுத்தியுள்ளது. 160க்கும் அதிகமான நாடுகளில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் திறக்கப்படாமல் உள்ளன. இதன் காரணமாக 100 கோடி மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்” என்று ஐக்கிய நாடுகள்சபை தெரிவித்துள்ளது.
கடந்த டிசம்பர் மாதம் சீனாவின் வூஹான் நகரில் பரவிய கொரோனா வைரஸ் ஐந்து மாதங்களைக் கடந்து 180க்கும் அதிகமான நாடுகளில் பரவியுள்ளது. இதன் காரணமாக கொரோனா பரவலைத் தடுக்கும் வகையில் பல்வேறு நாடுகளில் ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.
கொரோனா வைரஸுக்கு எதிராக தடுப்பூசி உருவாக்கும் பணியில் பல நாடுகள் ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில், ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தின் தடுப்பு மருந்தின் முதல் சுற்றுப் பரிசோதனை முடிவுகள் வெற்றி அடைந்துள்ளதாக சமீபத்தில் தகவல் வெளியானது.
இத்துடன் ஐக்கிய அமீரகம், பிரிட்டன் மட்டுமல்லாது அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் கொரோனாவுக்குத் தடுப்பூசி மருந்தைக் கண்டறியும் ஆய்வில் ஈடுபட்டுள்ளன.
கொரோனாதடுப்பு மருந்துக்கான அனைத்துக் கட்டப் பரிசோதனைகள் வெற்றிகரமாக முடிந்துவிட்டதாகவும், ஆகஸ்ட் மாதத்தின் மத்தியில் பயன்பாட்டுக்கு வரும் என்றும் ரஷ்யா சமீபத்தில் தெரிவித்தது.